Published : 15 Dec 2017 10:48 AM
Last Updated : 15 Dec 2017 10:48 AM

கோடம்பாக்கம் சந்திப்பு: மீண்டும் வாமிகா

மீண்டும் வாமிகா

கீதாஞ்சலி செல்வராகவன் இயக்கிய ‘மாலைநேரத்து மயக்கம்’ படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமான பஞ்சாபிப் பெண் வாமிகா. அந்தப் படத்தின் தோல்வியால் வாய்ப்புகள் இல்லாமல் போன இவருக்கு ‘மாயா’ பட இயக்குநர் அஸ்வின் சரவணன் தான் அடுத்து இயக்கும் ‘இறவாக் காலம்’ படத்தில் வாய்ப்பு அளித்திருக்கிறார். பஞ்சாபிப் பெண்ணான வாமிகா, இந்தியில் அறிமுகமானாலும் தெலுங்கு, தமிழில் நடித்துக்கொண்டே தாய்மொழிப் படங்களில் நடிப்பதிலும் கவனம் செலுத்துகிறார்.

‘காட்டேரி’ஆகும் வைபவ்

‘மேயாத மான்’ படத்துக்குக் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து அந்தப் படத்தின் நாயகன் வைபவுக்கு வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. சூர்யா நடித்திருக்கும் ‘தானா சேர்ந்த கூட்டம்’, ஆர்யா நடிக்கும் ‘கஜினிகாந்த்’ ஆகிய படங்களைத் தொடர்ந்து ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கும் ‘காட்டேரி’ என்ற புதிய படத்தில் கதாநாயகனாக நடிக்கத் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார் வைபவ்.

‘யாமிருக்க பயமே’ என்ற நகைச்சுவைப் பேய்ப் படத்தை இயக்கிப் பாராட்டு பெற்ற டீகேவின் இரண்டாவது படமான இதில் நகைச்சுவைப் பேய்களைக் காணலாம் என்கிறார்கள். இதுவும் நகைச்சுவைப் பேய்ப் படம்தானாம்.

ஆண் தேவதை

பாலசந்தர், பாரதிராஜா ஆகிய இருபெரும் இயக்குநர்களை ‘ரெட்டச்சுழி’ படத்தில் இயக்கியவர் தாமிரா. தற்போது இவர் இயக்கிவரும் படம் ‘ஆண் தேவதை’. சமுத்திரக்கனி நாயகனாகவும் ரம்யா பாண்டியன் நாயகியாகவும் நடிக்க விஜய்மில்டன் ஒளிப்பதிவு, ஜிப்ரான் இசை, காசிவிஸ்வநாதன் படத்தொகுப்பு என முன்னணித் தொழிநுட்பக் கலைஞர்களுடன் கைகோத்துக்கொண்டு முழுப் படத்தையும் முடித்துவிட்டார் இயக்குநர். பெண்களையே தேவதையாகச் சித்தரித்துப் பழக்கப்பட்ட சமூகத்தில் ‘ஆண் தேவதை’யா என்று கேட்டதும், “தேவதை என்பது சிறப்பியல்பு கொண்ட ஒரு குணம். அதற்கு ஆண் பெண் என்ற பாகுபாடு இல்லை. பெண்களை ஏமாற்றுவதற்காகவே ‘பெண் தேவதை’ எனத் தவறாகக் கற்பிதம் செய்து வைத்திருக்கிறோம் நாம். நல்லியல்புகள் கொண்ட எல்லோரும் தேவதைதாம். எல்லாம் சரியாக இருக்கிற, குறைகள் பெரிதும் இல்லாத ஆணும் ஒரு தேவதைதான். அவன்தான் இந்தக் கதையின் நாயகன். படம் பார்க்கும்போது, உங்களுக்குள் இருக்கும் சில விஷயங்களை அவன் பிரதிபலிப்பதை உணர்வீர்கள்” என்று கூறி ஆச்சரியப்படுத்துகிறார் தாமிரா.

புதிய கூட்டணி

ப்ரியதர்ஷன் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் விரைவில் வெளியாக இருக்கும் படம் ‘நிமிர்’. இந்தப் படத்தைத் தொடர்ந்து சீனு ராமசாமியின் இயக்கத்தில் நடிக்கிறார் உதயநிதி ஸ்டாலின். “எனக்கு சீனு ராமசாமியின் படங்கள் என்றால் ரொம்பவே பிடிக்கும். எல்லாத் தரப்பு ரசிகர்களையும் கவரும் கதை அம்சம் அவரது படங்களின் ஸ்பெஷல். அவர் இயக்கிய ‘நீர்ப் பறவை’ படத்தைத் தயாரித்தவன் என்ற முறையில் அவருடன் இணைந்து பணியாற்றுவது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது” என்று கூறுகிறார் உதயநிதி. முழுவதும் மதுரையில் நடக்கும் இந்தப் படத்தின் கதையில் கிராமத்து மனிதராக நடிக்கிறார் உதயநிதி. சீனு ராமசாமி படத்தின் வழக்கமான இசைக் கூட்டணியாக மாறிவிட்ட யுவன் - வைரமுத்து இந்தப் படத்திலும் உறுதியாகிவிட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x