Published : 15 Dec 2017 10:49 AM
Last Updated : 15 Dec 2017 10:49 AM
வா
ழ்க்கையின் ஆகப் பெரிய சாதனை என்பது, கடந்து செல்லும் தருணம் ஒவ்வொன்றிலும் பூரணமாக வாழ்வதைத் தவிர வெறென்னவாக இருக்க முடியும்?. அந்திமத்தின் விளிம்பில் வாழும் ஜோடி, தங்களது காதலைக் கொண்டாட மேற்கொள்ளும் கடைசிப் பயணமே ‘த லெஷர் சீக்கர்’ (The Leisure Seeker).
இதே பெயரில் அமெரிக்க எழுத்தாளர் மைக்கேல் ஸடோரியன் (Michael Zadoorian) எழுதிய நாவலால் ஈர்க்கப்பட்ட இத்தாலியின் விருது இயக்குநரான பாவ்லோ விர்ஸி (Paolo Virzi), தனது முதல் ஆங்கில ஆக்கமாக ‘த லெஷர் சீக்கர்’ திரைப்படத்தை இயக்கி உள்ளார்.
ஜான் –எல்லா இருவரும் எண்பதுகளைத் தொட்டமுதிய தம்பதியினர். ஐம்பது வருடத் திருமண வாழ்வின் நிறைவாக ஜானுக்கு ஞாபகங்கள் அழியும் அல்சைமர் நோயும் எல்லாவுக்கு உயிரைக் குடிக்கும் புற்றுநோயும் கண்டறியப்படுகின்றன. தாங்கள் சேர்ந்திருப்பதன் விநாடிகள் எண்ணப்படுவதை உணரும் இந்த முதிய தம்பதி, கடந்துவந்த காதலின் பொன் தருணங்களைக் கடைசியாக நினைவுகூரும் முயற்சியில் சுய கடத்தல் சாகசம் ஒன்றை அரங்கேற்றுகிறார்கள். அதன்படி இளம்பருவத்தில் ஊர் சுற்றிய, வீட்டுக்கான வசதிகளை உள்ளடக்கிய பொழுதுபோக்கு வாகனம் ஒன்றில் தப்பிக்கிறார்கள்.
மீண்டும் குழந்தைகளாகிவிட்ட தங்களது பெற்றோர்களை அவர்களின் வளர்ந்த குழந்தைகளும் மருத்துவர்களுமாகத் தேட ஆரம்பிக்கின்றனர். அனைவருக்கும் போக்குகாட்டும் முதியவர்கள் தங்களது கனிந்த காதலைக் கவுரவிக்கும் கடைசிப் பயணத்தைத் தொடர்வதும் அப்பயணத்தில் அவர்கள் எதிர்கொள்ளும் சிலிர்ப்பான அனுபவங்களுமே படம்.
இலக்கியம் என்றாலே முகம் சுளிக்கும் எல்லா, சதா இலக்கிய மேற்கோள்களில் உலாத்தும் கணவரைச் சமாளிப்பதும் நினைவுகள் முற்றாகத் தேயும் கணவரை அவ்வப்போது எல்லா போராடி மீட்பதும், சாவின் தவணையாக அடிக்கடி வலியில் துடிக்கும் மனைவியை ஜான் தவித்து அரவணைப்பதுமாக முதிய காதலை முன்வைத்து நகைப்பூட்டுகிறார்கள்; கண்கள் கசியச் செய்கிறார்கள்.
வயதான தம்பதியாக வரும் டொனால்ட் சதர்லேண்ட், ஹெலன் மிர்ரன் ஆகியோர் 27 ஆண்டுகளுக்குப் பின்னர் திரையில் ஜோடி சேர்ந்திருக்கும் இத்திரைப்படம் ஜனவரி 19 அன்று வெளியாகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT