Published : 24 Nov 2017 10:41 AM
Last Updated : 24 Nov 2017 10:41 AM

சினிமா ‘ஒரு ராணுவக் கலை’ - ஒளிப்பதிவாளர் செழியன் நேர்காணல்

சமீபத்தில் சென்னையில் நடந்த ஒரு விழாவில் இந்தியாவின் தலைசிறந்த இயக்குநர்களில் ஒருவரான அடூர் கோபாலகிருஷ்ணன் பேசியபோது “ தமிழர்கள் அன்பானவர்கள், பாசமானவர்கள். ஆனால் தமிழ்சினிமாவில் மட்டும் ஏன் வன்முறை மலிந்து கிடக்கிறது? சமீபத்தில் ஒளிப்பதிவாளர் செழியன் படைத்திருக்கும் ‘டூலெட்’ என்ற திரைப்படத்தைப் பார்த்தேன். மிகவும் உணர்வுப்பூர்வமான, துணிவான ஒரு படைப்பாக அது இருந்தது. தமிழ் சினிமா மீது இப்போது மரியாதை வருகிறது” என்று பேசினார்.

தற்போது நடந்து முடித்த 2017 கொல்கத்தா சர்வதேசப் படவிழாவில் நடத்தப்பட்ட இந்திய மொழிப்படங்களுக்கு இடையிலான போட்டிப்பிரிவில் கலந்துகொண்ட ‘டூலெட்’, இந்தியாவின் சிறந்த படத்துக்கான விருதை வென்று வந்திருக்கிறது. கடந்த 2007- வெளியான கல்லூரி திரைப்படம் தொடங்கி கடந்த ஆண்டு வெளியான ‘ஜோக்கர்’ வரை தமிழின் முக்கிய ஒளிப்பதிவாளராகக் கவனம் ஈர்த்துவரும் செழியனைச் சந்தித்துப் பேசியதிலிருந்து… 

24CHRCJ_CHEZHIN

ஒரு ஒளிப்பதிவாளராக உங்கள் பயணம் மனநிறைவைக் கொடுத்திருக்கிறதா?

நிச்சயமாக. விரும்பித் தேர்ந்தெடுத்து இப்போதும் நான் ரசித்து ஈடுபடக்கூடிய ஒன்றாகவே ஒளிப்பதிவு இருக்கிறது. சினிமா என்பது ஒரு விஷுவல் மீடியம். சினிமாவை காட்சிகளாக புரிந்துகொள்வதற்கு, காட்சிகளின் சூட்சுமத்தை தெரிந்துகொள்வதற்கு ஒளிப்பதிவுக் கலையே முக்கியமானது என்று நினைக்கிறேன். ஒரு படத்தில் இருக்கும் சவுண்டை மியூட் செய்துவிட்டீர்கள் என்றால் அதற்குள் இருக்கும் விஷுவல்ஸ் என்ன பேசப்போகிறது என்பதைப் பொருத்து ஒளிப்பதிவின் தன்மையை நாம் புரிந்துகொள்ளமுடியும்.

போட்டோகிராஃபி என்பதில் போட்டோ என்றால் லைட், கிராபி என்றால் எழுதுவது. ஒளியைக் கொண்டு எழுதுவதுதான் போட்டோகிராஃபி. பிரான்ஸ் நாட்டில் சினிமாவை முதலில் அவர்கள் ‘சினிமாட்டோகிராஃப்’ என்றுதான் சொன்னார்கள். மூவி என்றோ, பிலிம் என்றோ அவர்கள் சொல்லவில்லை. ஒளிப்பதிவின் நுணுக்கங்களை இன்னும் கற்றுக்கொண்டுதான் இருக்கிறேன். அதற்கு எல்லையே இல்லை.

நீங்கள் இசையைப் பற்றி முறையாகப் படிக்கிறீர்கள். படித்தபின்பு ஒரு பாடலைக் கேட்கிறீர்கள். அப்போது அந்தப் பாடலில் இருக்கும் சூட்சுமங்கள், பாவனைகள், நெளிவுகள் எல்லாமே உங்களுக்குப் புரியும். ஆனால் இசையை கற்றுக்கொள்ளாமல் அதே பாடலைக் கேட்கும்போது அதை வெறுமனே ரசிப்போம். அதுவே படித்தபின்பு ரசிக்கையில், ஓ.. இந்த ராகத்தில் இருக்கிறதா.., இந்த ராகத்தை இப்படிக் கையாண்டு இருக்கிறார்களா?! இந்த நோட்டிலிருந்து இந்த நோட்டு பாடல் எவ்வளவு அழகாக மாறுகிறது என்று அந்தப் பாடலில் இடம்பெற்றிருக்கும் படைப்பின் கற்பனையும் அதன் நுட்பங்களும் நமக்குத் தெரியவரும்.

அப்போது இன்னும் அதை ஆழமாகவும், விருப்பத்துடனும் ரசிக்கமுடியும். அதேபோல் ஒளிப்பதிவைக் கற்றுக்கொண்டு ஒரு படத்தைப் பார்க்கும்போது அதில் இருக்கக்கூடிய அழகை, படைப்பாற்றலை நாம் சிலாகிக்கமுடிகிறது. ஒரு வாசகன், வெறும் வாசகனாக ஒரு எழுத்தை வாசிப்பதற்கும், அவனே எழுத்தாளனாக மாறியபின் இன்னொரு எழுத்தை வாசிக்கும்போதும் உணர்வது வேறு.

எவ்வளவு அழகாக எழுத்தில் இதைக் கொண்டுவந்திருக்கிறார் என்று சிலாகிக்கக்கூடிய ஒரு இடத்துக்கு நம்மை நகர்த்திவிடும் இல்லையா? அதுபோல் சினிமாவை  சிலாகிக்கக் கூடிய முறையான வழி ஒளிப்பதிவு என்றுதான் நான் நினைக்கிறேன். அப்படிப்பட்ட ஒளிப்பதிவைக் கற்றுக்கொள்ளவேண்டும், அதில் தொடர்ந்து ஈடுபட வேண்டும், நமக்குப் பிடித்த விதமாகச் செய்ய வேண்டும்.ஒளிப்பதிவு என்பது எனக்கு எப்போதும் திருப்தி அளிக்கக்கூடிய ஒரு துறைதான்.

ஒரு சில இயக்குநர்களின் வட்டத்தை விட்டு செழியன் வெளியே வர விரும்புதில்லை என்ற பேச்சு இருக்கிறதே, உண்மையா?

அது உண்மையில்லை. வட்டம், சதுரம் எதற்குள்ளும் நான் இல்லை. சினிமா  ‘ஒரு ராணுவக் கலை. படப்பிடிப்புத்தளம்தான் போர்க்களம்’ என்கிறார் பிரெஞ்சு இயக்குநர் பிரஸ்ஸான். அப்படிப்பட்ட கலையை விளையாட்டுத்தனமாக நீங்கள் அணுகமுடியாது. அதற்கு ஒரு தீவிரத் தன்மையும் பயிற்சியும் வேண்டும். அவை இரண்டுமே என்னிடம் இருக்கும்போது சினிமாவை தீவிரமாக அணுகுகிறவர்கள் தொடர்பும் நட்பும் எனக்கு ஏற்பட்டது. அதன் தொடர்ச்சியாக அவர்களுடன் தொடர்ந்து பணிபுரியும் வாய்ப்பு ஏற்பட்டது. அவர்கள் அனைவருமே இன்றுவரை எனது நண்பர்களாக, நலம்விரும்பிகளாக இருக்கிறார்கள். இதனால் ஒரு படத்துடன் முடிந்துவிடுகிற உறவாக எங்களுடையது இல்லை.

ஒரு புத்தகத்தை எழுதியவர்தான் அதன் ஆசிரியர். அதுபோல் சினிமாவின் ஆசிரியர் இயக்குநர்தான். ஒளிப்பதிவாளர் சக ஆசிரியர். சினிமாவை தீவிரமாகப் பார்க்கக்கூடிய இயக்குநர்களுடனான தொடர்ச்சி என்பது தற்செயலாக எனக்கு அமைந்த ஒன்று. இந்த நெருக்கமான உறவின் அடிப்படையில் நான் பணிபுரிந்த படங்கள் அனைத்துமே கதையில், வாழ்வியலில், சினிமாவை சில அடிகளாவது முன் நகர்த்தக்கூடிய படங்களாகவே அமைந்திருக்கின்றன என நம்புகிறேன். இப்படிப்பட்ட படங்களில் தொடர்ந்து பணிபுரிந்ததால் என்னைப் பற்றி இப்படியொரு அபிப்பிராயம் ஏற்பட்டிருக்கலாம்.

பரதேசி படத்திற்குப் பிறகு எனது அடுத்த படம் ‘சவாரி’.அதன் இயக்குனர் நாளைய இயக்குனர் போட்டியில் பரிசு பெற்ற இளைஞர் . அது அவரது முதல் படம். கதை சுவாரஸ்யமாக இருந்தால் யாருடனும் பணிபுரிவேன்.அது பிரபலமா புதுமுகமா என்றெல்லாம் பார்ப்பதில்லை.

எனது இன்னொரு பக்கத்தை நீங்கள் பார்த்தீர்கள் என்றால் நிறைய விளம்பரப் படங்களை நான் இயக்கி இருக்கிறேன். விளம்பரப் படங்களுக்கான ஒளிப்பதிவு என்பது திரைப்படத்திலிருந்து விலகி நிற்பது. பளிச்சென்று பாலீஷான, பளபளப்பான இமேஜ்கள் கொண்டது . எனது பயிற்சியே ஃபேஷன் போட்டோகிராபியிலிருந்து தான் தொடங்கியது. தொடக்கத்தில் முன்னணி நட்சத்திரங்கள், மாடல்களை ஒளிப்படங்கள் எடுத்திருக்கிறேன். எல்லோருக்கும் பிடிக்கிற அழகான பாலீஷான போட்டோகிராமியின் மேல் எனக்குத் தீவிரமான பயிற்சி இருக்கிறது.

அதனால் அப்படி ஒரு வாய்ப்பு வரும்போது அழகாக மிகத்தரமான ஒளிப்பதிவை என்னால் தரமுடியும். விகிறிஸ்டோபர் டோயல் என்றொரு ஒளிப்பதிவாளர் ரேபிட் ப்ரூஃப் ஃபென்ஸ் என்ற படத்தில் பணிபுரிகிறார். மூட் ஃபார் லவ் படத்துக்கும் அவர்தான் ஒளிப்பதிவாளர். இரண்டும் வெவ்வேறு தளத்தில் இருக்கும் படங்கள். அதுபோல எந்தமாதிரியான ஒளிப்பதிவையும் சிறப்பாகச்செய்ய முடிகிற பயிற்சி எனக்கு இருக்கிறது.

அப்படியானால் அதிக வெளிச்சம், அதிக கொண்டாட்ட தருணங்கள் கொண்ட ஒரு படம் அமையுமானால் அதற்குரிய ஒளிப்பதிவைத் தர முன்வருவீர்கள் அல்லவா?

நிச்சயமாக. பி.சி.ஸ்ரீராமின் மாணவன் நான். அவரிடம் கற்றுக்கொண்டதும், அவருடன் பணியாற்றியதுமான படங்கள் அனைத்துமே அழகான ஒளிப்பதிவுக்காக கவனிக்கப்பட்ட படங்கள்தான். பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்த ‘அலைபாயுதே’, ‘முகவரி’ போன்ற படங்களில் நான் பணியாற்றியிருக்கிறேன். அந்த வகைப் படங்களில் எனக்குச் சிறந்த பயிற்சி இருக்கிறது.பத்து வருடங்களுக்கு முன்பு சீமான் இயக்கத்தில் வந்த தம்பி படத்தின் பாடல்களைப் பார்த்திருப்பீர்கள். அந்தப் பாடல்கள் அனைத்தும் நான் ஒளிப்பதிவு செய்தவைதான்.

தொடர்ந்து ஒருமாதிரியாக பணிபுரியும் போது அதில் சுவாரஸ்யம் இருப்பதில்லை. நாம் செய்கிற வேலையில் ஒரு சவால் இருக்கவேண்டும்.அலுவலக வேலை போல ஒரே மாதிரியான லைட்டிங்,மேக்கப் போட்ட அழகான முகங்கள், ஒரே மாதிரியான bokeh shot எடுப்பதற்கு ஒளிப்பதிவை எதற்கு தேர்ந்தெடுக்க வேண்டும்? தென்மேற்கு பருவக்காற்று,பரதேசி,சவாரி,ஜோக்கர் நான்கு படத்தையும் ஒரு ஒளிப்பதிவாளர்தான் எடுத்திருக்கிறார் என்று என் பெயரைப் பார்க்காமல் கண்டுபிடிக்க முடியுமா? என் பெயரைப் பார்த்ததுமே இப்படித்தான் இருக்கும் என்று ஒளிப்பதிவை ஊகிக்க முடிந்தால் அதில் என்ன சுவாரஸ்யம் இருக்கிறது.

எனவே ஒளிப்பதிவில் விதவிதமாகச் செய்துபார்க்க ஆசைப்பட்டேன். அதற்கு காரணம்  ‘போட்டோ ஜர்னலிசத்தின் தந்தை’ என கொண்டாடப்படும் ஹென்றி கார்டியர் பிரெஸ்ஸானின் ஒளிப்படங்கள். இவரும் பிரெஞ்சுக்காரர்தான். இந்தியாவின் முக்கியமான தருணங்களை எல்லாம் அவர் படமெடுத்திருக்கிறார். நம் நாடு சுதந்திரம் அடைந்ததும் அதை அறிவிக்கும் நேரு, காந்தி சுட்டுகொல்லப்பட்டபின்னான நிமிடங்கள், இன்று நாம் பார்க்கும் ரமண மகரிஷியின் தெய்வீகத் தோற்றங்கள் என எல்லாம் அவர் எடுத்தவைதான். ஒளிப்படக் கலையை ஒரு ஆன்மிகமாக பயிற்சித்துப்பார்த்து அதில் வெற்றிபெற்றவர்.

அவரது படங்களில் இருக்கக்கூடிய ஒளியும் நிழலும் தன்மைகளும் நமக்கொரு சவாலைக் கொடுக்கிறது. வாழ்க்கையை நேரடியாகப் பார்ப்பதுபோல் இருக்கிறது. இப்படிப்பட்ட ஒளிப்படங்களை எடுத்த தருணங்களை ‘டெசிசிவ் மோமெண்ட்ஸ்’ (decisive moments) என்கிறார். அப்படிப்பட்ட தருணங்கள் ஒரு நொடிக்குள் தப்பித்துவிடும். ஒரு காட்சியை, நிகழ்வை, மனிதர்களைப் படமெடுக்கும்போது அந்தத் தருணத்தில் இருக்கும் ஒளியை, நிழலை, அசைவை எப்படிக் கைப்பற்றுகிறீர்கள் என்பதுதான் போட்டோ ஜர்னலிசத்தில் இருக்கும் சவால். 

இதற்கு நேர் மாறாக இருக்கும் பேஷன் மற்றும் விளம்பர போட்டோகிராபியை உலகின் சிறந்த போட்டோகிராபி என யாரும் கொண்டாடுவதில்லை. புலிட்ஸர் விருது கிடைப்பது மீட்கமுடியாத தருணத்தைப் படமாக்கியவர்களுக்குத்தான்.

ஆனால் ஃபேஷன் போட்டோகிராஃபியல் நின்று நிதானமாக ஏற்பாடுகளைச் செய்து, ஒளியை நம் வசதிக்கேற்ப மாற்றிப் படமெடுப்பதில் துவக்க நிலை ஒளிப்பதிவாளருக்கு ஒரு சவால் இருக்கலாம். ஆனால் எனக்கு அதில் ஒரு சவாலும் இல்லை. உதாரணத்துக்கு சென்னையின் அதிகாலையைப் படம் எடுப்பதற்கும் ஒரு சேலை விளம்பரம் எடுப்பதற்கும் உள்ள வித்தியாசம்தான். எதில் சவால் அதிகம்?

தமிழ் சினிமாவுக்குள் சில தருணங்களை ஒளிப்பதிவில் கொண்டு வரமுடிகிறதா என்பதில் ஒரு சுவாரஸ்யம் இருக்கிறது. சினிமாவில் நாம் எல்லாவற்றையும் உருவாக்கி ஒத்திகை பார்த்து எடுத்தாலும் கூட உண்மைத்தன்மையை ஏற்படுத்துவது எப்படி? தென்மேற்குப் பருவக்காற்று படத்தின் ஆடு திருடும் காட்சியின் இரவையும், பரதேசி படத்தில் சிம்னி விளக்குகள் எரியும் இரவின் அடர்த்தியையும் எப்படிக் கொண்டுவந்தாய்? என்று பாலுமகேந்திரா பாராட்டினார்.

இரண்டுமே பிலிமில் எடுத்த படங்கள்.நான் படம் எடுத்து அனுப்பியதும் லேப்பில் இருந்து ‘சார் ரொம்ப இருட்டா இருக்கு..இன்னும் கொஞ்சம் எக்ஸ்போஷர் வைங்க என்று சொல்லுவார்கள்.  safety zone   க்குள் பாதுகாப்பாக இயங்குவதில் ஒரு சுவாரஸ்யமும் இல்லை.  சில எல்லைகளைக் கடக்கும் போதுதான் த்ரில் இருக்கிறது.

தொடர்ந்து யதார்த்தப்படங்கள் பண்ணும் போதும் ஒரு தன்னிறைவு வந்துவிடும். அதற்காக  எனது அடுத்த படம் நீங்கள் சொன்னதுமாதிரியான மிக அழகான பாலிஷான இமேஜுடன் கூடிய ஒரு ஹாலிவுட் பாணிப் படம்தான்.

சினிமாவில் முகவரி கிடைத்துவிட்டால், வந்தவரை லாபம் என்று வலையைப்போட்டு அரித்தெடுப்பவர்கள் அதிகம். அந்த மனநிலையிலிருந்து விலகியிருக்கிறீர்கள். இன்னொரு பக்கம் இசை குறித்து புத்தகம் எழுதுகிறீர்கள்?

பயம் இருக்கும்போதுதான் ஒருவிதமான பரபரப்பு இருக்கும். கற்றுக்கொண்ட கலையின் மீது நம்பிக்கையோடு இயங்கும்போது பதட்டம் இருக்காது.டெண்டுல்கர் ஒரு பந்தை சிக்ஸர் அடிக்கும்போது அவர் திட்டமிட்டு அடித்திருந்தால் அடுத்த பந்தையும் சிக்ஸர் அடிக்க அவருக்கு ஒரு பதட்டமும் இருக்காது. உங்களை அறியாமல் ஒரு வெளிச்சம் உங்கள் மீது விழும் போதுதானே பதட்டம் வரும்.

 ஒரு விஷயத்தை நேசிக்கும்போது அதற்கு உண்மையாக இருக்க வேண்டும் என்று ஓர் அடிப்படை இருக்கிறது. அது இருக்கும்வரை நம்மிடம் அவசரம் இருக்காது. தவிர இயல்பிலேயே எனக்கு அவசரம் கிடையாது. போர் வீரர்களின் இடுப்பில் வாள் இருக்கும். ஆனால் எப்போதும் அவர்கள் அதை எடுத்து வீசிக்கொண்டே இருப்பதில்லை.  சந்தர்ர்ப்பம் வரும்போது மட்டும்தான் அதை அவர்கள் பயன்படுத்துவார்கள். அப்படித்தான் இருக்க விரும்புகிறேன்.

சினிமா அனைத்துக் கலைகளின் ஒருங்கிணைக்கப்பட்ட ஒரு வடிவம். அப்பா ஒரு ஓவியர். சுவர் விளம்பரம், பேனர், கட்-அவுட் விளம்பரம்,வாட்டர் கலர்,ஆயில் கலர் என ஓவியத்தின் அனைத்து மீடியங்கள் மீதும் எனக்குப் பயிற்சி இருக்கிறது.  கல்லூரி நாட்களில் இசை படித்தேன். பிறகு நாடகம் எழுதி இயக்கிப் பார்த்தேன்.குறும்படம் எடுத்துப் பார்த்தேன்.கற்ற கலைகள் அனைத்தையும் பரிச்சித்துப்பார்க்கும் ஒன்றாக சினிமாவைப் பார்க்கிறேன்.

சினிமாவை ஒரு யானையைப்போல உருவகப்படுத்திக் கொண்டீர்கள் என்றால் அதன் பிரம்மாண்டத்தை தெரிந்துகொள்ள அதன் தும்பிக்கையை, கால்களை, காதுகளை, வயிற்றைத் தடவிப்பார்க்கும் ஒரு சிறுவனைப்போலத்தான் சினிமாவில் இருக்கும் கலைகளை அறிந்துகொள்ள விரும்புகிறேன். அதனால்தான் சிறுகதை எழுதிப் பார்க்கிறேன், கட்டுரைகள் எழுதுகிறேன். இசையைப் பயின்று பார்க்கிறேன். எல்லாம் சினிமாவை அணுகும் வேறு வேறு வழிகள்தான்.

ஓவியம், எழுத்து, இசை ஆகியவற்றைக் கடந்து ஒரு ஒளிப்பதிவாளராகப் புகழ் பெற்றிருக்கிறீர்கள். ஒரு படத்தை இயக்க வேண்டும் என்றால் அதில் முதலீடு செய்ய தயாரிப்பாளர்கள் முன்வருவதில் உங்களுக்குச் சிக்கல்கள் இருக்கப்போவதில்லை. ஆனால் ஒரு சுயாதீன சினிமா எடுக்க வேண்டும் என்று ஏன் நினைத்தீர்கள்.

பரிசோதனை செய்து பார்க்கும்போது அதைப் பிறர் பணத்தில் செய்து பார்ப்பதில் எனக்கு விரும்பம் இல்லை. எனவே இந்தப்படத்திற்கு என் மனைவி பிரேமா தான் தயாரிப்பாளர். சுயாதீன சினிமா என்ற சொல்லே யாரையும் சார்ந்திருக்காமல் உருவாக்கக்கூடிய ஒன்று என்பதுக் கூறுகிறது.  சினிமா மேதைகள் எல்லாம் சுயாதீன சினிமாவிலிருந்துதான் தொடங்கியிருக்கிறார்கள். ஏன்? என்று யோசித்துப் பாருங்கள். அதில் ஒரு சுதந்திரம் இருக்கிறது. நீங்கள் எடுப்பது சரியோ தவறோ அதில் முழுமையாக இயங்க முடியும். உங்கள் தவறுக்கு தயாரிப்பாளரைக் குறை சொல்ல முடியாது. எனவே சுயாதீன சினிமா எடுப்பதற்கு ஒரு துணிச்சல் தேவைப்படுகிறது.

வெர்னர் ஹெர்ஷாக் என்கிற ஜெர்மன் இயக்குநரை எடுத்துக்கொள்ளுங்கள். அவர் படித்த சினிமா பள்ளியில் கண்ணாடிக்குள் காட்சிப்பொருளாக ஒரு கேமராவை வைத்திருக்கிறார்கள். யாருக்குமே பயன்படாமல் அது கண்ணாடிக்குள் இருப்பது அவருக்குப் பிடிக்கவில்லை, உடனே கண்ணாடியை உடைத்து அந்தக் கேமராவைத் திருடிச் சென்று தனது முதல் படத்தை எடுக்கிறார். சினிமாமை அணுகுவதில்  முரட்டுத்தனமான படைப்பாளி.

அவர் சொல்கிறார், “எனது இத்தனை வருட சினிமா வாழ்க்கையில் தயாரிப்பாளரை நம்பி நான் படம் எடுக்க வேண்டும் என்று காத்திருந்தேன் என்றால், என்னால் ஒரு படம் அல்ல, ஒரு பிரேமை கூட எடுத்திருக்க முடியாது. எனவே கேமராவை எடுத்துக்கொண்டு வீதியில் இறங்குங்கள், உங்களுக்குப் பிடித்ததை எடுங்கள். உங்களுக்கான தயாரிப்பாளர்கள் பிறகு வருவார்கள்.” என்று கூறியிருக்கிறார்.

டிஜிட்டல் சினிமா வந்தபிறகு தமிழில் சுயாதீன சினிமாக்கள் தலையீடு இல்லாத சுதந்திரத்துடன் வெளிவரத் தொடங்கியிருக்கின்றன. இணையத்தின் உதவியால் உலக சினிமா பரவலாக்கப்பட்டுவிட்டதும், உலக அளவிலான திரைப்பட சந்தையின் தளங்கள் பெருகிவிட்டதும் சுயாதீன சினிமாவுக்கான வளர்ச்சியை ஊக்கப்படுத்தும் என்பது என் பார்வை. படத்தின் பட்ஜெட் கூடக்கூட சமரசங்கள் கூடும். படத்தின் செலவு குறையக் குறைய தரம் மட்டுமே கூடும்,  மேலும் சினிமா காண்பதை ஒரு அனுபவமாக மாற்றுவதில் சுயாதீனப் படங்கள் பெரும்பாலும் தோற்பதில்லை.

‘டூலெட்’ படத்தை ஒரு சுயாதீன சினிமாவாக உருவாக்கியதில் நீங்கள் கடைப்பிடித்த அளவுகோல் என்ன?

இங்கிருந்து தேயிலையை ஏற்றுமதி செய்கிறோம். முழுவதும் முதல்தரமான கொழுந்துத் தேயிலைகள். ஏன் அதை ஏற்றுமதி செய்கிறார்கள் என்றால் அந்தச் சுவைக்கு அவர்கள் பழகியிருக்கிறார்கள்.  நமக்கு டஸ்ட் டீயைத்தான் கொடுக்கிறார்கள். நாம் அதற்குப் பழகிவிட்டோம். அதேபோல்தான் சினிமாவிலும் நடக்கிறது. பார்வையாளர்கள் இதையெல்லாம் விரும்புகிறார்கள் என்று ஐந்து பாட்டு, கதாநாயகனுக்கு மூன்று சண்டை, ஒரு அழகான கதாநாயகி, வில்லன் என்று நாமாக ஒரு ஃபார்முலாவை உருவாக்கி வைத்திருக்கிறோம். கதை தயாராகும்போதே இந்த சமன்பாடு உங்கள் முன்னால் இருக்கும்.னிதை நீங்கள் மீறவே முடியாது.

ஆனால் உலக சினிமாவில் அதை உருவாக்கியவர் எதைச் சொல்ல வருகிறாரோ அதை மட்டுமே சுதந்திரமாகச் சொல்கிறார். அந்தப் படங்களில் வாழ்க்கையும் அந்த நிலப்பரப்பின், பண்பாட்டின் அடையாளங்களும் இருக்கின்றன.

நமது சமகால வாழ்க்கையும் அதில் நமது முகத்தையும் பதிவு செய்யக்கூடிய கதைகளை எடுக்க வேண்டும் என்பதுதான் எனது விருப்பம், அளவுகோல் எல்லாம்.  ‘டூலெட்’ நம அடையாளத்துடன் உருவாகியிருக்கிறது. ஒரு படத்தை எடுக்கும் போதே சர்வதேசப் பார்வையாளர்களுக்கு இது பிடிக்கும், இந்திய பார்வையாளர்களுக்கு இது பிடிக்கும் என்று எடுக்க முடியாது. எந்த ஊர் உணவு என்றாலும் அதை உலகில் எந்த ஊரைச் சேர்ந்தவர் சாப்பிட்டாலும் ரொம்ப அற்புதமா இருக்கே என்று சொல்லவேண்டும். ‘டூலெட்’ அப்படிப்பட்ட சுவாரஸ்யமான படம்தான்.

கொல்கத்தாவில அரங்கு நிறைந்த பார்வையாளர்கள் டுலெட் படத்தைப் பார்த்தார்கள். அவர்களுக்கு மொழி தெரியாது. சப்டைட்டில் வழியாகவும் காட்சி வழியாகவுமே படத்தைப் புரிந்துகொள்கிறார்கள். படத்தின் முடிவில் எழுந்து நின்று கைதட்டினார்கள். மொழி மாறினாலும் மனித உணர்வு ஒன்றுதானே.

24chrcj_TROPYright

இந்தக் கதை எங்கே நடக்கிறது, இதில் பங்கேற்றிருக்கும் நட்சத்திரங்கள்?

கதை சென்னையில்தான் நடக்கிறது. இதில் நட்சச்திரங்கள் கிடையாது. இயல்பான மனிதர்கள்தான் நடித்திருக்கிறார்கள். இதில் நாயகன் நாயகி என்றெல்லாம் கிடையாது. சந்தோஷ் என்ற எனது உதவியாளரையும் சுசீலா என்ற பெண்ணையும், தருண் என்கிற சிறுவனையும் அறிமுகப்படுத்துகிறேன்.பத்திரிக்கையாளர் அருள் எழிலன்,கவிஞர் ரவி சுப்ரமண்யன்,முனைவர் மருது மோகன், நாடகக்கலைஞர் ஆதிரா,எழுத்தாளர் எம் கே மணி   நடிப்பில் பங்களிப்பு  செய்திருக்கிறார்கள். இவர்கள் தவிர மற்ற அனைவருமே இயல்பான மனிதர்கள், இயல்பான இடங்கள். படத்தில் என்னுடன் இருந்த குழுவும் சுவாரஸ்யமானது.இயக்குனர் குழுவில் இருந்த

பசங்க சிவக்குமார்,உயிரெழுத்து இதழின் ஆசிரியர் சுதிர் செந்தில், ராஜன்,சுருளி,முகுந்தன்,ராஜபாண்டி,பாண்டியராஜன் ஒளிப்பதிவில் ஆபரேடிவ் கேமராமேனாகப் பணிபுரிந்த என் உதவியாளர் மணி, மற்றும் ராஜபாண்டி படத்திற்கு கலை இயக்கம் செய்த சங்கர், படத்தின் தயாரிப்பு மேலாளராக இருந்த சுப்பு ,நடிகர் தேர்வில் என்னுடன் இருந்த நாடகக் கலைஞர் ரெஜின் என அவ்வளவுதான் எங்கள் எளிமையான அணி.

இந்தப்படத்தில் நடிகர்கள் தேர்வும் இடங்களும் தேர்வும் சவாலாக இருந்தது. கொரில்லா சினிமா முறையில் பல இடங்களீல் சாலைகளில் ஒளிந்திருந்துதான் படத்தை எடுத்தோம்.

‘டூலெட்’ என்ற வார்த்தை, சென்னை போன்ற பெருநகரங்களில் வசிக்கக்கூடிய  நடுத்தர வர்க்கத்து மக்களுக்கு பெரும் மன அழுத்தத்தைக் கொடுக்கக் கூடியது. 2007ல் மென்பொருள் நிறுவனங்கள் பெருவாரியாக நுழைந்தபோது இந்த நகரம் வீடு சார்ந்த ஒரு பிரச்சனையச் எதிர்கொண்டதன் சாட்சியாக நானும் இருந்தேன். அதைப் பதிவு செய்து பார்க்கலாம் என்றுதான் இந்தப்படத்தை எடுத்தோம். ஒரு இளம் தம்பதி, அவர்களது மகன் ஆகியோரை இந்த டுலெட் என்கிற வார்த்தை எப்படி அல்லாட வைக்கிறது என்பதுதான் படம்.

இந்தப் படத்துக்கான தொழிநுட்பம் மற்றும் இசை குறித்து?

இந்தியாவின் முக்கியமான எடிட்டர் ஶ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்திருக்கிறார். அவரது பங்களிப்பு இந்தப்படத்துக்கு மிக முக்கியமானது.தபஸ் நாயக் சவுண்ட் டிசைன் செய்திருக்கிறார். சிறப்பு சத்தங்களை சேது வடிமைத்திருக்கிறார். தொழில் நுட்ப ரீதியாகவும ஒரு சர்வதேசத்தரத்தை எட்டுகிற முயற்சிதான் இது.

இந்தப் படத்தில் பாடல்கள், பின்னணி இசை கிடையாது. சென்னையை ‘சிட்டி ஆஃப் சவுண்ட்’ என்கிறார்கள். இந்தச் சந்தங்களுக்குள் ஒரு ஒழுங்கு இருக்கிறது. அந்தச் சந்தங்களின் பின்னணி பல நேரங்களில் நம் மனநிலையை பிரதிபலிக்கக் கூடியதாக இருக்கிறது. இந்த இயல்பான சத்தங்கள்தான் இந்தப் படத்தின் பின்னணி இசை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x