Published : 09 Nov 2017 09:03 AM
Last Updated : 09 Nov 2017 09:03 AM
அமைதியும், குளிரும் நிறைந்த இமாச்சலப் பிரதேசத்தில் சித்தார்த் -ஆண்ட்ரியா தம்பதி வசித்து வருகிறார்கள். மூளை அறுவை சிகிச்சையில் இந்தியாவின் மிகச் சிறந்த மருத்துவராக இருக்கும் சித்தார்த்தின் பக்கத்து வீட்டில் புதிதாக வந்து குடியேறுகிறது அதுல் குல்கர்னியின் குடும்பம். அதுலின் மகள் அனிஷா விக்டர் மூலம் இரு வீட்டாரின் நிம்மதியும் பறிபோகிறது. அனிஷா விக்டர் அப்படி என்ன செய்கிறார், அவருக்கு என்ன ஆயிற்று? அவர் திரும்பவும் பழைய நிலைக்கு வந்தாரா? இல்லையா என்பது மீதிக் கதை.
ஆள் அரவமற்ற சூழல், அங்கே தனித்த வீடு, அவ்வப்போது திடீர் அச்சுறுத்தல், அதிர்ச்சி சம்பவங்களுக்கு ஒரு ஃபிளாஸ்பேக் என வழக்கமான பேய் கதையைப் போல தெரிந்தாலும், விறுவிறுப்பான திரைக்கதை, நேர்த்தியான திரைமொழியுடன் ஈர்க்கிறது மிலிந்த் ராவின் இயக்கம்.
சித்தார்த் அதிகம் அலட்டிக்கொள்ளாமல் பக்கத்து வீட்டுக்காரருக்கு உரிய குணாதிசயங்களை இயல்பாகப் பிரதிபலிக்கிறார். மருத்துவருக் கான பொறுப்பை வெளிப்படுத்து கிறார். தூய அன்பில், தீராக் காதலில் ஆண்ட்ரியாவின் சிறந்த துணையாக தேர்ந்த நடிப்பை வழங்குகிறார். ஆண்ட்ரியா சின்னச் சின்ன முகபாவனைகளில் கவனிக்க வைக்கிறார். ‘போடா’ எனச் செல்லமாக கூறுவது, ‘அடங்க மாட்டியா’ எனக் காதலுடன் கொஞ்சுவது, திடீரென்று பதறி விழுந்து, அமானுஷ்ய சூழல் உணர்ந்து சுதாரித்துக் கொள்வது என கதாபாத்திரத்துக்கான நடிப்பைத் தந்திருக்கிறார்.
முன்னணி நட்சத்திரங்களாக இவர்கள் இருவரும் இருந்தாலும் படத்தின் மிகப் பெரிய பலம் அனிஷா விக்டர். இரு வேறு பரிமாணங்களில் தன்னை வெளிப்படுத்தும்போது அமானுஷ்ய கதாபாத்திரத்துக்கான தோற்றம், உடல்மொழி இரண்டுக்குமே ஈடுகொடுத்து அசத்தியிருக்கிறார். அதுல் குல்கர்னி, சுரேஷ் ஆகியோரும் கவனிக்க வைக்கிறார்கள்.
கிரிஷ் ஜியின் பின்னணி இசை திகிலையும், திகைப்பையும் வரவழைக்கிறது. ஸ்ரேயாஸ் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவு இமாச்சல பிரதேசத்தின் ரம்மியத்தைக் கண்களுக்குள் கடத்து கிறது. விஷ்ணு கோவிந்த், சங்கர், விஜய் ரத்தினம் ஆகிய மூவரின் ஒலி வடிவமைப்பு துல்லியம். ஒட்டுமொத்தத்தில் படத்தின் தொழில்நுட்ப அம்சங்கள் படத்தை தரமான திகில் அனுபவத்துக்கு உட்படுத்திவிடுகின்றன.
பேயின் பழிவாங்கலுக்காகச் சொல்லப்பட்ட கதை வலுவாகவும், அழுத்தமாகவும் இல்லாததால் அது பெரிதாக ரசிகர்களிடம் எடுபடாமல் போகிறது. அந்தக் காட்சிகள் ஈர்க்காத காரணத் தால் அடுத்தடுத்து சித்தார்த் காட்டும் வித்தியாசங்கள் நாயக பிம்பத்தின் துணைக் கூறாகவே தென்படுகிறது.
அனிஷா விக்டர் ஏன் கிணற்றுக்குள் விழப் போகிறார்? அவர் எப்படித் தூண்டப்பட்டார்? வீட்டுப் பணிப் பெண் நிலை என்ன... போன்ற சில கேள்விகளுக்கு எந்தப் பதிலும் இல்லை.
பெண் குழந்தையைக் கொன்றுதான், ஆண் குழந்தை கிடைக்கும் என்றால் அந்த ஆண் வேண்டாம் என்ற கருத்து சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால், சொல்லப்பட்ட விதம் எவ்வித கவன ஈர்ப்பையும் தரவில்லை. பின்னணிக் கதையில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால் ‘அவள்’ தனித்துத் தெரிந்திருப்பாள். அதேபோல் பல காட்சிகள் சில ஆங்கிலப் பேய்ப் படங்களை நினைவூட்டுவதும் பலவீனம்.
இருப்பினும் சமீபத்தில் தமிழில் வெளியான பேய்ப் படங்களுக்கு மத்தியில் தனித்து நிற்கிறாள் அவள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT