Last Updated : 26 Feb, 2023 06:23 AM

 

Published : 26 Feb 2023 06:23 AM
Last Updated : 26 Feb 2023 06:23 AM

முதல் அறிவியல் கதை

ஜகதீஷ் சந்திரபோஸ், நாடறிந்த அறிவியலாளர். தாவரங்களுக்கும் உயிர் உண்டு என்கிற கருத்தை அறிவியல்பூர்வமாக நிறுவியவர். மார்கோனிக்கு முன்பே ரேடியோ அலைகளைக் குறித்து ஆராய்ந்தவர். மார்கோனியின் வானொலி கண்டுபிடிப்புக்கு அதுவே ஆதாரம் என்று பின்னர் நிரூபணமானது. அதனால், அவரைச் சர்வதேச மின்னியல், மின்னணுவியல் கழகம் ‘ரேடியோ அறிவியலின் தந்தை’ எனப் போற்றுகிறது. சரியாக அறியப்படாத ஜகதீஷின் சாதனைகள் பல. அவற்றுள் ஒன்று, எழுத்தாளர் என்கிற அடையாளம்.

1896இல் ஜகதீஷ் வங்க மொழியில் ‘நிருதேஷர் ககினி’ என்கிற ஒரு சிறுகதை எழுதியிருக்கிறார். இந்தியாவின் முதல் அறிவியல் புனைவு என்று இது முன்னிறுத்தப்படுகிறது.

தொழில்முனைவோரான ஹேமந்திர மோகன் ‘குந்தல் கேசரி’ என்கிற பெயரில் கூந்தல் எண்ணெய்யைக் கண்டுபிடித்துச் சந்தையில் அறிமுகப்படுத்தினார். அதை மக்கள் மத்தியில் பிரபலமாக்கும் விதமாகச் சிறுகதைப் போட்டியை அறிவித்தார். கொஞ்சம் அறிவியலையும் சமகாலத்தையும் துணைக்கு அழைத்து, ஒரு கதையை எழுதி அனுப்பினார் ஜகதீஷ். அது முதல் பரிசையும் வென்றது. இந்தச் சிறுகதை இரு பகுதிகளைக் கொண்டது. முதல் பகுதி, அடிக்கடி புயல் தாக்கும் அன்றைய கல்கத்தா நகரை விவரிக்கிறது. ஒரு பெரும் புயல் காரணமாக உருவான கடல் சீற்றம் திடீரென மாயமாகிவிடுகிறது. அந்தச் சீற்றம் எங்கே போனது என யாருக்கும் தெரியவில்லை. ஓர் அறிவியலாளர் ‘வால் நட்சத்திரத்தின் வேலை இது’ என்கிறார். சார்பியல் கோட்பாடுகள் எல்லாம் விவாதிக்கப் படுகின்றன.

இரண்டாம் பகுதியில் கதையின் நாயகன் கப்பலில் இலங்கைத் தீவுக்குச் செல்லத் திட்டமிடுகிறான். நாயகனின் சின்ன பெண், “அப்பா தீவு என்றால் என்ன?” எனக் கேட்கிறாள். அவன் பதில் சொல்வதற்கு முன்பே, அவள் அந்தத் தீவைக் கண்டுபிடித்துவிடுகிறாள்; நாயகனின் தலையைச் சுற்றி முடி இருக்க, நடுவில் இருக்கும் பகுதி, தீவாம்!

அவள் இலங்கைக்குப் பயணிக்கவிருக்கும் தன் தந்தைக்கு, ‘குந்தல் கேசரி’யைத் தருகிறாள். “பயணத்தில் இந்த எண்ணெயைத் தினமும் தேய்த்துக்கொள். இல்லையெனில், கடல் உப்புக் காற்று பட்டு இருக்கும் தீவும் காணாமல் போய்விடும்” என்கிறாள். தொடர்ந்து குந்தல் கேசரி உருவான சுவாரசியமான கதையை ஜகதீஷ் விவரிக்கிறார். ஆங்கிலேய சர்க்கஸ்காரர் கடல் மார்க்கமாக ஒரு சிங்கத்தையும் நாயையும் கூட்டிக்கொண்டு இந்தியா வருகிறார். கடல் காற்றால் முடியெல்லாம் உதிர்ந்த நிலையில், சிங்கத்தையும் நாயையும் பிரித்தறியப் பெரும்பாடாகிப் போகிறது. வருத்தப்பட்ட ஆங்கிலேயர், கேட்ட வரம் அளிக்கும் ஒரு சந்நியாசியைத் தேடிப் போகிறார். சந்நியாசி, ஓர் எண்ணெயை வரமாக அளிக்கிறார். ஒரே வாரம்தான் சிங்கம் தன் பழைய சிகை அழகைப் பெறுகிறது. இந்தச் செய்தி ஊர் முழுக்கப் பரவ, வழுக்கைத் தலை ஆண்கள், இந்த எண்ணெயைத் தேடி அலைகிறார்கள். அதுதான் ‘குந்தல் கேசரி’. இந்தப் பின்னணியில் ஜகதீஷ் ஓர் அறிவியலை இணைக்கிறார்.

நாயகனின் கப்பல் நடுக்கடலில் இருக்கும்போது வானம் இருண்டு, காற்று ஊளையிடத் தொடங்குகிறது. கப்பலைக் கவிழ்க்கும்படி பெரும் அலைகள் திரண்டு வருகின்றன. அப்போது கதையின் நாயகனுக்குத் தன் சின்ன மகள் சொன்னது நினைவுக்கு வருகிறது. உடனே அந்த எண்ணெய்க் குப்பியைத் திறந்து மாமலையைப் போன்ற அலையின் மேற்பரப்பில் வீசுகிறான். ஒரு மந்திரத்தைப் போல் கடல் அமைதியாகிறது. நீரின் மேற்பரப்பில் எண்ணெயை விடும்போது நீரின் புறப்பரப்பு இழுவிசை குறையும். இதனால் அலையின் சீற்றமும் குறையும் என்பது அறிவியல் என்கிறான் நாயகன். இது நடந்து ஆறு மாதங்களுக்குப் பிறகு புயல் நின்ற காரணம் இந்தக் ‘குந்தல் கேசரி’தான் என்று கண்டுபிடிக்கப்படுவதுடன் கதை முடிகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x