Published : 03 Dec 2019 12:35 PM
Last Updated : 03 Dec 2019 12:35 PM

விடைபெறும் 2019: 2019-ன் அறிவியல் புத்தகங்கள்

சு. அருண் பிரசாத்

அறிவியலின் வரலாற்றில் 2019 முக்கியத்துவம் வாய்ந்த ஆண்டாக இடம்பிடித்துவிட்டது. பல்வேறு புதிய கண்டுபிடிப்புகள், ஆய்வுகள், முன்னெடுப்புகள், சர்ச்சைகள் எனக் குறிப்பிடத்தக்க பல்வேறு நிகழ்வுகள் இந்த ஆண்டில் நிகழ்ந்துள்ளன. அதைப் போலவே, இந்த ஆண்டு வெளியான அறிவியல் புத்தகங்களும் அறிவியல் ஆர்வலர்களுக்கு முற்றிலும் புதிய வாசிப்பனுபவத்தைத் தந்தன. அவற்றுள் தேர்ந்தெடுக்கப்பட்டவை:

Edison, Edmund Morris, Random House

தாமஸ் ஆல்வா எடிசனின் கண்டுபிடிப்புகளில் முக்கியமானது மின் விளக்கு அல்ல; தொழில்நுட்பத்தைப் பற்றிய சிந்தனை முறையே. 140 ஆண்டுகளுக்கு முன்பு மின்விளக்கைக் கண்டுபிடித்ததற்காக நினைவுகூரப்படும் எடிசன், அவருடைய காலத்தில் அமெரிக்காவில் புகழ்பெற்றிருந்தாலும், இன்றைக்கு உலகம் முழுக்க அறியப்படுகிறார்.

எண்ணற்ற கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியவராக அறியப்படும் எடிசனின் வாழ்க்கை வரலாற்று நூலை புலிட்சர் விருது பெற்றிருக்கும் எட்மண்ட் மோரிஸ் எழுதியிருக்கிறார். தியடோர் ரூஸ்வெல்ட், ரொனால்ட் ரீகன், பீத்தோவன் ஆகியோரின் வாழ்க்கை வரலாறுகளை ஏற்கெனவே எழுதியிருக்கும் மோரிஸ், முறைப்படி பயிற்சிபெற்ற இசைக்கலைஞரும்கூட.

50 ஆண்டுகளாக எடிசனுக்கு ஒலிப்பதிவின் மேல் இருந்த தீரா வேட்கையை இந்தப்
புத்தகத்தில் மோரிஸ் பதிவுசெய்திருக்கிறார். ஏழு ஆண்டுகால உழைப்பில் சுமார் ஐம்பது லட்சத்துக்கும் மேலான பக்கங்களைக் கொண்ட ஆவணங்களில் இருந்து தரவுகளைப் பெற்று இந்த நூலை அவர் எழுதியிருக்கிறார். எடிசனும் டெஸ்லாவும் ஒருவரை ஒருவர் பகைத்துக்கொண்டதாகப் பொதுவாக நிலவும்
கருத்து உண்மையல்ல என்பதையும் நிறுவியிருக்கிறார்.

The Body: A Guide for Occupants, Bill Bryson, Doubleday

‘அனைத்தையும் குறித்த சுருக்கமான வரலாறு’ உள்ளிட்ட புகழ்பெற்ற நூல்களின் ஆசிரியர் பில் பிரைசனின் சமீபத்திய வரவு, ‘மனித உடல்’. தலை முதல் பாதம்வரை உடல் குறித்த அற்புதப் பயணத்துக்கு இந்த நூலில் நம்மை அழைத்துச் சென்றிருக்கிறார் பிரைசன். உடல் எப்படி இயங்குகிறது, எப்படித் தன்னைத் தானே சீரமைத்துக்கொள்கிறது, சில வேளைகளில் செயல்பாட்டிலிருந்து எப்படிப் பிறழ்கிறது என்பது போன்றவற்றைச் சுவாரசியமாகச் சொல்லிச் செல்கிறார்.

இதை வாசித்துக்கொண்டிருக்கும்போது உங்கள் உடலில் பத்து லட்சம் சிவப்பு ரத்த அணுக்கள் இருக்கும் என்பன போன்ற திகைக்கவைக்கும் தகவல்களை நூல் முழுக்கத் தந்திருக்கிறார். நம்முடைய உடல் குறித்த ஆழமான புரிதலை ஏற்படுத்தும் இந்தப் புத்தகம், அனைவரும் கண்டிப்பாக வாசிக்க வேண்டிய கையேடுகளில் ஒன்று.

Underland: A Deep Time Journey,
Robert Macfarlane, Penguin

மனிதனுக்கும் இயற்கைக்கும் உள்ள இணைப்பு குறித்து தன்னுடைய புத்தகங்களில் தொடர்ந்து பேசிவரும் ராபர்ட் மெக்ஃபார்லென், இந்தத் தலைமுறையின் சிறந்த இயற்கை எழுத்தாளர். நினைவில், இலக்கியத்தில், தொன்மத்தில் எனப் பல்வேறு இடங்களில் சுட்டப்படும் பூமியின் கீழுலகைப் பற்றிய அற்புதமான ஆய்வாக இந்த நூல் அமைந்திருக்கிறது.

அண்டத்தின் தோற்றத்தில் தொடங்கி மனித எதிர்காலம்வரை இந்த நூல் பேசுகிறது. வரலாற்றுக்கு முந்தைய நார்வேயின் கடற்குகைகள், கிரீன்லேண்டின் பனிக்கவிகை, பாரிஸ் நகருக்கு அடியில் இருக்கும் சிக்கலான காத்தகோம் பாதை எனப் பூமிக்கு அடியில் இருக்கும் வேறோர் உலகை மெக்ஃபார்லென் ஆராய்ந்திருக்கிறார். 21-ம் நூற்றாண்டின் சிறந்த 100 புத்தகங்களில் ஒன்றாக 'கார்டியன்' நாளிதழ் இதைத் தேர்ந்தெடுத்துள்ளது. இந்த நூல் நம்முடைய உலகப் பார்வையை நிச்சயமாக மாற்றியமைக்கும்.

அறிவியல் புனைவு
Exhalation, Ted Chiang, Picador

சமகாலத்தின் முக்கிய அறிவியல் புனைவு எழுத்தாளராக அறியப்படுபவர் டெட் சியாங். 2002-ல் வெளியான ‘யுவர் லைஃப் அண்டு அதர்ஸ்’ தொகுப்புக்குப் பிறகு சமீபத்தில் வெளியாகி இருக்கும் ‘எக்ஸ்ஹாலேஷன்’ என்ற இந்தத் தொகுப்பில் ஒன்பது கதைகள் உள்ளன.

பேரண்டத்தில் மனிதகுலத்தின் இருப்பு, மனிதகுலத்தின் இயல்பு, உயிரிநெறிகள், தோற்ற மெய்மை, சுதந்திர விருப்பு - உறுதிப்பாடு, காலப் பயணம், செயற்கை நுண்ணறிவு ஆகியவற்றை இந்தக் கதைகள் களனாகக் கொண்டுள்ளன. இந்தத் தொகுப்பை 2019-ன் சிறந்த பத்து புத்தகங்களுள் ஒன்றாக 'நியூ யார்க் டைம்ஸ் புக் ரிவ்யூ' தேர்ந்தெடுத்திருக்கிறது.

Infinite Powers: The Story of Calculus – The Language
of the Universe, Steven Strogatz, Atlantic Books

கணினி, நுண்ணலை அடுப்பு, ஜி.பி.எஸ், விண்வெளிப் பயணம் என நவீன உலகின் சாத்தியங்கள் அனைத்துக்கும் அடிப்படை நுண்கணிதம். கணிதத்தின் மாபெரும் சிந்தனையான நுண்கணிதத்தின் வரலாற்றை ‘இன்ஃபனைட் பவர்ஸ்’ என்ற இந்த நூல் விவரிக்கிறது. எண்ணற்ற சாத்தியங்களை மனிதகுலத்துக்கு வழங்குவதற்கு முன்பு சர்ச்சைகள், போட்டிகள் என நூற்றாண்டுகளாக நீளும் வரலாற்றை நுண்கணிதம் கொண்டிருக்கிறது.

ஆர்கிமிடீஸில் தொடங்கி இன்றைய செயற்கை நுண்ணறிவு, கேயாஸ் தியரிவரை மூன்றாயிரம் ஆண்டுகளாக நீண்டிருக்கும் நுண்கணிதத்தின் வரலாற்றைப் பேராசிரியர் ஸ்டீவன் ஸ்ட்ரோகாட்ஸ் சுவாரசியமாக விளக்கியுள்ளார். நவீன மனித நாகரிகம், அறிவியல், அரசியல், மருத்துவம், தத்துவம் எனப் பல்வேறு துறைகளில் நுண்கணிதத்தின் தாக்கத்தை, ஆளுகையை இந்த நூல் ஆராய்ந்திருக்கிறது.

Origins: How the Earth Shaped Human History,
Lewis Dartnell, Bodley Head

மனித வரலாறு என்பது பெரும் தலைவர்கள், பெரும் இடப்பெயர்வுகள், போர் ஆகியவற்றை மையப்படுத்தியே இருக்கின்றன. ஆனால், மனிதகுலத்தின் போக்கை இந்தப் பூமி எப்படி நிர்ணயித்தது; நம்முடைய சுற்றுச்சூழலால் ஒரு சிற்றுயிராக நாம் எப்படி வடிவமைக்கப்பட்டிருக்கிறோம் என்பது குறித்து அறிந்துகொள்ளும் தேவை இருக்கிறது.

ஆப்பிரிக்காவில் இருந்து நம் பரிணாம வளர்ச்சியை புவியியல் ஆற்றல் தூண்டியது; கிரீஸைச் சூழ்ந்திருக்கும் மலைப்பகுதிகள் ஜனநாயகத்தை வளர்த்தெடுத்தது உள்ளிட்டவையும் மனிதகுல வரலாற்றின் அங்கம்தான்.

புவியின் சுற்றுவட்டப் பாதைக்கும் இமயமலைக்கும் என்ன தொடர்பு; அது பிரிட்டிஷ் தீவுகளின் உருவாக்கத்துக்கு எப்படி வழிவகுத்தது? புவியின் வரலாற்றில் கோடிக்கணக்கான ஆண்டுகள் பின்நோக்கிச் சென்று, பேராசிரியர் லூயிஸ் டார்ட்னெல் புவியின் தோற்றத்தை விளக்கியுள்ளார். வரலாறு அறிவியலாக உருமாறும் புள்ளியை நாம் அடையும்போது, நவீன உலகைக் கட்டமைத்திருக்கும், எதிர்காலச் சவால்களை எதிர்கொள்ள உதவும் பரந்த இணைப்புகளைக் காண்கிறோம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x