Published : 05 Nov 2019 12:17 PM
Last Updated : 05 Nov 2019 12:17 PM
ஹாலாஸ்யன்
பகலில் விழித்திருக்கும் உயிரினங்கள் பகலாடிகள், இரவில் விழித்திருக்கும் உயிரினங்கள் இரவாடிகள். பகலில் விழித்துச் செயல்படும் வகையிலும், இரவில் ஓய்வுக்கு ஏற்ற வகையிலும் பகலாடி உயிரினத்தின் உடல் அமைந்திருக்கும். நாமும் பகலாடிகள்தான்.
ஒரு நாளின் மொத்த உடலியக்கத்தைக் கட்டுப்படுத்துவது உடல் கடிகாரத்தின் (Circadian rhythm) வேலை. சூரிய ஒளியின் இருப்பை அடிப்படையாகக் கொண்டு சுரக்கும் மெலடோனின் (Melatonin) ஹார்மோன், பகலுக்கும் இரவுக்கும் நம்மைத் தயார்படுத்துகிறது.
சுரக்கும் உறக்கம்
மெலடோனின் பீனியல் சுரப்பியால் (கூம்புச் சுரப்பி - Pineal Gland) சுரக்கப்படுகிறது. இதுவே ஓய்வுக்கும் உறக்கத்துக்கும் உடலைத் தயார்படுத்துகிறது. ரத்த அழுத்தத்தையும், இதயத் துடிப்பையும் மிதமாகக் குறைக்கிறது. சூரிய ஒளி இருந்தால், மெலடோனின் சுரப்பு தடுக்கப்பட்டு, உடல் விழிப்பு நிலையில் இருக்கிறது. சில நேரம் தூக்கமின்மை, வேறு நேர மண்டலங்களுக்குப் பயணிப்பதால் உடலுக்கு ஏற்படும் ‘ஜெட்லாக்' எனப்படும் உடல் கடிகாரக் கோளாறு ஆகியவற்றைச் சரிசெய்ய மெலடோனினைப் பயன்படுத்துகிறார்கள். அதேநேரம் நீல நிற ஒளியால் மெலடோனின் சுரப்பு தடுக்கப்படுகிறது.
பகல் நேரத்துச் சூரிய வெளிச்சம் போக, இரவு நேரத்தில் நாம் பயன்படுத்திய விளக்குகள் அனைத்தும் மஞ்சள் ஒளியையே வெளியிட்டுவந்தன. மின்விளக்குகள் வந்த பிறகும்கூட, கடந்த நூற்றாண்டின் நடுப்பகுதிவரை மஞ்சள் ஒளியை உமிழும் குண்டு பல்புகள்தான் பயன்பாட்டில் இருந்தன. அதன் பின்னர் வந்த குழல் விளக்குகள் வெண்ணிற ஒளியைத் தந்தாலும், குறைந்த அளவே நீல ஒளியை வெளியிட்டன. இதனால் மெலடோனின் சுரப்பு குறையாமல் இருந்து வந்தது.
ஓயாத ஒழியுமிழிகள்
கடந்த பத்தாண்டுகளாக அதிகம் புழக்கத்தில் உள்ள ஒளியுமிழிகள் (Light Emitting Diodes), அதிக நீல ஒளியை வெளியிடுகின்றன. இந்த விளக்குகளை வீட்டில் பயன்படுத்தும்போது மெலடோனின் சுரப்பில் தடை ஏற்பட வாய்ப்புண்டு. விளக்குகள் அனைத்தையும் அணைத்துவிட்டாலும், கணினித்திரை, கைபேசித் திரையில் இருக்கும் ஒளியுமிழிகளின் நீல நிற ஒளி பாதிப்பை ஏற்படுத்தும். மெலடோனின் இயல்பாகச் சுரந்து, ஒழுங்காக உறக்கம் வரவேண்டுமென்றால் உறங்குவதற்கு சில மணி நேரத்துக்கு முன்னர் நீல ஒளியைப் பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும்.
அதேநேரம் இன்றைக்கு நாம் பயன்படுத்தும் கைபேசி, மடிக்கணினி அனைத்திலும் நீல ஒளியைக் குறைக்கிற தகவமைப்புகள் வந்துவிட்டன. ‘Night Mode' என்று அழைக்கப்படும் அவற்றைப் பயன்படுத்தும்போது, திரை மெல்லியச் சிவப்பு ஒளியுடன் தோன்றும். அதனால் நீல ஒளி தவிர்க்கப்பட்டு இயல்பான மெலடோனின் சுரப்புக்கு உடல் தயாராகும். கணினி, கைபேசிகளில் அந்த அமைப்பு இல்லையென்றால், அவற்றுக்கான இலவச செயலிகள் இணையத்தில் உண்டு. அவற்றைத் தரவிறக்கியும் பயன்படுத்தலாம். தூக்கம் முக்கியமில்லையா?
கட்டுரையாளர்
தொடர்புக்கு: yes.eye.we.yea@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT