Last Updated : 07 Apr, 2022 10:55 AM

 

Published : 07 Apr 2022 10:55 AM
Last Updated : 07 Apr 2022 10:55 AM

ஸ்ரீதேசிக தர்சன பஞ்சாங்கம் வெளியீடு

இந்திய நாட்டின் கலாச்சார மேன்மையையும் பெருமையையும் அனைவரும் அறியும் வண்ணம் செய்த சேவா சுவாமி மெமோரியல் ஃபவுண்டேஷன் சார்பில் சேவா சுவாமியின் 100-வது திருநட்சத்திரத்தை முன்னிட்டு 51-வது ஆண்டு ஸ்ரீதேசிக தர்சன பஞ்சாங்கம் (சுபகிருது வருடம் –2022-23) அண்மையில் வெளியிடப்பட்டது.

சேவா சுவாமி என்று அனைவராலும் அழைக்கப்படும் அரசாணிப்பாலை நல்லூர் ஸ்ரீனிவாச ராகவாச்சாரியார் சுவாமிகளால் 1972-ல் தொடங்கி, தொடர்ந்து வெளியிடப் பட்டுவரும் ஸ்ரீதேசிக தர்சன பஞ்சாங்கம், இந்த ஆண்டு தனது 51-வது இதழை வெளியிட்டது. தமிழ், தெலுங்கு வருடப்பிறப்பை ஒட்டி ஒவ்வொரு வருடமும் அந்தந்த வருடத்துக்கான பஞ்சாங்கம் வெளியிடப்படுவது வழக்கம்.

அண்மையில் பங்குனி சித்திரை தினத்தில் சென்னை வில்லிவாக்கம் மணிமண்டபம் அருகே உள்ள எஸ்.பி. மகாலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பஞ்சாங்கத்தின் தமிழ் மற்றும் தெலுங்கு பதிப்புகள் வெளியிடப்பட்டன. நிகழ்ச்சியின் தொடக்கத்தில் வேத மந்திரங்கள் ஓதப்பட்ட பின்னர், சேவா சுவாமியின் மகனும் பதிப்பாளருமான என்.எஸ்.கண்டாமணி வரவேற்புரை ஆற்றினார். பிள்ளைப்பாக்கம் வாசுதேவாச்சரியார் இதழை வெளியிட்டார். உருப்பட்டூர் சுந்தர் தலைமை வகிக்க, ஹேமா ராஜகோபாலன், என்.எஸ்.ராஜகோபாலன் பஞ்சாங்கத்தில் உள்ள சிறப்பு அம்சங்களைக் குறிப்பிட்டு, சேவா சுவாமி ஆற்றிய தொண்டுகள் குறித்து விரிவாகப் பேசினர். நிகழ்ச்சியில் வேதவிற்பன்னர்கள் பலர் கவுரவிக்கப்பட்டனர்.

தற்போது வெளியிடப்பட்ட பஞ்சாங்கம், அடிப்படை பண்பாடு, கலாச்சார செய்திகள், ஆன்மிகம் தொடர்பான அடிப்படை விஷயங்கள், நித்ய கர்மாக்கள், திவ்ய தேச எம்பெருமான்கள், ஆச்சாரியர்களின் படங்கள், தனியன்கள், தர்ப்பண மந்திரங்கள்,

திருவாராதன க்ரமம், சாற்றுமுறை, சந்நிதி சாற்றுமுறை, நாமாவளிகள், ஸ்ரீதேசிக கத்யம், தசாவதார ஸ்தோத்திரம், சிரார்த்தம் தொடர்பான செய்திகள், தீட்டுக் குறிப்புகள், சாமவேத தர்ப்பணம் ஆகியவற்றை உள்ளடக்கியது.

பஞ்சாங்கம் குறித்து மேலும் தகவல்களை அறிய 044-26180481, 98410 46264 ஆகிய எண்களைத் தொடர்புகொள்ளலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x