Published : 24 Mar 2022 07:04 AM
Last Updated : 24 Mar 2022 07:04 AM
‘அவருக்கு என்னப்பா கவலை? ஏழு தலைமுறைக்குச் சேர்த்து வெச்சிட்டார்! அவரைப் போல் மகிழ்ச்சியான மனுசனைப் பார்க்க முடியாது!’ என்று சொல்லக் கேட்டிருப்போம். ‘ஒருவருக்கு எந்த அளவுக்குச் சொத்து இருக்கிறதோ.. அவ்வளவுக்கு அவர் மகிழ்ச்சியாக இருக்கிறார். அவர்தான் வாழ்க்கையில் வெற்றிபெற்ற மனிதர்’ என்று நம்மில் பலரும் எண்ணிக்கொண்டிருக்கிறோம்.
இந்த எண்ணம்தான் அன்றாடம் மாடாய் உழைத்துக் களைத்துப்போகும்படி பெரும்பாலான மக்களைத் துரத்துகிறது எனலாம். ஆனால், பணமும் அதன் மூலம் வரும் சொத்துகளும் மட்டுமே உண்மை யாகவே மகிழ்ச்சியை மனிதர்களுக்குக் கொடுக்குமா? எதார்த்தம் எப்படிப்பட்டதாக இருக்கிறது என்பதைப் பார்க்க வேண்டும்.
ஒருவர் கடுமையாக உழைத்தோ அல்லது முன்னோர், பெற்றோர் மூலமோ பணமும் சொத்தும் வந்துவிட்டது என்று வைத்துகொள்வோம். அவருக்கான அடிப்படைத் தேவைகள் நிறைவடைந்த பிறகு, அவருடைய வருமானம் எவ்வளவு உயர்ந்தாலும், அது மகிழ்ச்சியையோ மனநிறைவையோ எள் முனையளவும் அதிகரிக்காது என்று மேரிலேண்ட் பல்கலைக்கழகத்தின் உளவியல் ஆய்வுத்துறை முடிவுகள் சொல்கின்றன. வாழ்க்கைக்கு சர்வ நிச்சயமாகப் பணம் தேவைதான். ஆனால் ‘பணம்.. பணம்.. என்று வெறிகொண்டு, அறத்தையும் கருணையையும் தொலைத்துவிட்டு ஓடுவதுதான் எல்லாப் பிரச்சினைகளுக்கும் காரணமாகிறது’ என அதே ஆய்வு சுட்டிக் காட்டுகிறது.
விவிலியத்தில், 1 தீமோத்தேயு 6:9, 10-ஐ எடுத்து வாசியுங்கள்: “பண ஆசையே எல்லா விதமான தீமைக்கும் வேராக இருக்கிறது; சிலர் இந்த ஆசையை வளர்த்துக்கொண்டு, பலவிதமான வேதனைகளால் தங்கள் உடல் முழுவதும் குத்திக்கொண்டிருக்கிறார்கள்”. இந்த வசனத்தில் வரும் பலவிதமான வேதனைகளைப் பட்டியலிடுவது மிக எளிது!
சொத்தைப் பாதுகாக்க வேண்டுமென்ற கவலை பலருக்கு. இதனால் நம்மிடமிருப்பதைத் திருட்டுக்கொடுக்க வேண்டியிருக்குமோ என நிம்மதியிழந்து தூக்கமின்மையால் தவிக்கிறார்கள். பிரசங்கி 5:12-ல் வரும் வசனம்: “வேலை செய்கிறவன் கொஞ்சம் சாப்பிட்டாலும் சரி, நிறைய சாப்பிட்டாலும் சரி, நிம்மதியாகத் தூங்குவான். ஆனால், ஏராளமாகச் சொத்து சேர்த்து வைத்திருப்பவன் தூங்க முடியாமல் தவிப்பான்” என்று சொல்கிறது.
அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்துகொள்வதற்காகப் பணம் சம்பாதிக்க ஓடுகிறவர்களை இந்த வேதனைகள் ஒருபோதும் தாக்குவதில்லை. தேவைக்கு அதிகமாக இருக்கும்போதே, ‘இன்னும் இன்னும்…’ என்று வெறிகொண்டு அலைகிற யாரும் தன் குடும்ப உறுப்பினர்களுக்காக, உற்ற நண்பர்களுக்காக, கொடுக்க வேண்டிய பொன்னான நேரத்தை அவர்களால் கொடுக்கவே முடியாமல் போய்விடுகிறது. அவர்களின் பண வெறி தணிந்து களைத்து உட்காரும்போது பொன்னான நாட்களையும் உண்மையான மகிழ்ச்சியையும் இழந்திருப்பதை உணர்ந்துகொள்கிறார்கள்.
“சொத்து சேர்ப்பதற்காக உழைத்து உழைத்துக் களைத்துப்போகாதே. அப்படிச் செய்வதை நிறுத்திவிட்டு புத்தியோடு நடந்துகொள். இல்லாமல் போகும் ஒன்றின்மேல் நீ ஏன் கண்ணை வைக்க வேண்டும்?” என நீதிமொழிகள் புத்தகத்தின் 23:4, 5 வசனங்கள் வழிகாட்டுகின்றன. பணம் தேவைதான். ஆனால், அது வாழ்க்கையின் அறம் சார்ந்த மகிழ்ச்சியை திருடிக்கொண்டுவிடக் கூடாது. மனத் திருப்தியும் தாராள மனமும் மனிதர்களைப் பொருட்படுத்தும் குணமும் உங்கள் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்கும்.
தொகுப்பு: ஜெயந்தன்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT