Published : 24 Mar 2022 07:16 AM
Last Updated : 24 Mar 2022 07:16 AM
சமண சமயத்தைத் தோற்றுவித்தவர் விருஷபதேவர் (ஆதிபகவன்). விருஷபதேவரைத் தொடர்ந்து பகவான் மகாவீரர் வரை 24 அறவோர்கள் சமண சமயக் கொள்கைகளை நாட்டில் பரப்பினர். இவர்களைத் தீர்த்தங்கரர்கள் என சமணர்கள் போற்றுகின்றனர். விருஷபதேவர் தொடங்கி மல்லிநாதர் வரையிலான 19 தீர்த்தங்கரர்கள் சரித்திர காலத்திற்கு முற்பட்டவர்கள் என்றும் முனிசுவர்த்தர் தொடங்கி மகாவீரர் வரையிலான ஐவர் சரித்திர காலத்திற்குட்பட்டவர்கள் என்றும் வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். முதலில் வடக்கில் கோலோச்சிய சமணம் தமிழ்நாட்டில் கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் பரவிச் செழித்தோங்கியதாகத் தொல்லியல் ஆய்வுகள் மற்றும் சமண இலக்கியங்கள் வாயிலாக அறிய முடிகிறது.
ஆதியும் அந்தமும் அற்ற இவ்வுலகம் நிலம், தீ, காற்று, நீர், வெளி ஆகிய ஐந்தின் சேர்க்கையுடைய இயற்கையோடு ஒன்றிணைந்தது என்னும் கோட்பாட்டைக் கொண்டதாகச் சமணம் திகழ்கிறது.
அகிம்சை நெறியை அடிப்படையாகக் கொண்ட சமணம், ஓரறிவுயிர் முதலாக ஐயறிவுயிர் ஈறாக, எந்த உயிரையும் கொல்ல மாட்டேன், கொல்ல நினைக்கவும் மாட்டேன், கொல்வதற்கு மனம், மொழி, மெய்களால் உடன்படவும் மாட்டேன் என்னும் நல்லறத்தை உலக மக்கள் பின்பற்றி வாழவேண்டும் என போதிக்கிறது.
மும்மணிகள்
சமணம் வகுத்தளித்த, `உண்மைப் பொருளை ஆராய்ந்தறிதலாகி நற்காட்சி, ஆராய்ந்தறிந்த நூற் பொருளில் அறிவைச் செலுத்துதலாகிய நல்ஞானம், அப்பொருளின் வழி நடத்தல் நல்லொழுக்கம் ஆகிய மும்மணி களை உயிருக்கும் மேலானதாகக் கருதி மானுடம் ஒழுக்க நெறியில் முன்னேற்றம் காண வேண்டும்’ என மகாவீரர் வலியுறுத்தினார். மனித குலம் சம நிலையில் வாழ்வதற்கு மிகுபொருள் விரும்பாமை, பகுத்துண்டு வாழ்தல் ஆகிய அறச் செயல் வாழ்க்கை முறை விழுமியங்களில் தலையாயது என்ற கருத்தாக்கத்தை நவின்று மக்கள் மனங்களைச் செப்பனிட்டார். உயிரின் தனித்துவம் அன்பு மட்டுமே என்பதை உணர்ந்து `நீயும் வாழ், பிறரையும் வாழ விடு' என்பதை வலியுறுத்தினார்.
நான்கு தானங்கள்
பகவான் விருஷபதேவர் தான் வகுத்தளித்த நல்லற நெறிகளை, இல்லறம், துறவறம் என இரு வகைகளாகப் பிரித்ததோடு இவ்விரண்டும் ஒழுக்க நெறிகளோடு ஒன்றையொன்று சார்ந்து நிற்பவை என்றார். இதில் இல்லற நெறிகளில் கூறப்படும் நான்கு தானங்களான அன்னதானம், அபய தானம், மருந்து தானம், கல்வி தானம் ஆகியவற்றை இல்லறத்தார், இல்லாதவர்களுக்கு வழங்கி சமூக சமத்துவத்தை நிலைநாட்ட வேண்டும் என்றார். சமூக வாழ்க்கை சிறக்க இவ்வாறான நெறிகளை வகுத்தளித்த முதல் தீர்த்தங்கரரான விருஷபதேவர் உள்ளிட்ட 24 தீர்த்தங்கரர்களும் `அறம், அகிம்சா பரமோ தர்ம' எனத் தங்களின் கொள்கைகளை இந்தப் பூமியில் மக்களின் மனங்களில் விதைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT