Published : 23 Dec 2021 11:34 AM
Last Updated : 23 Dec 2021 11:34 AM
உலகு முழுக்க மகிழ்ந்து கொண்டாடும் அரிய திருவிழாக்களில் ஒன்று கிறிஸ்துமஸ். இவ்விழா கொண்டாடப் படாத நாடு இல்லை. பல்வேறு மரபுகளோடு இணைந்து, பல்வேறு விதங்களில் இவ்விழா கொண்டாடப்படுகிறது.
இயேசுவின் பிறப்பை ஒட்டி நடந்த நிகழ்ச்சிகளில் சமுதாயத்தின் கடைநிலை மனிதர்களும் அதிகாரத்தின் உச்சியில் இருந்த ஆட்சியாளர்களும் வெவ்வேறு விதங்களில் பங்காற்றினார்கள். இப்படி இரு எதிரெதிர்த் துருவங்களில் இருந்த மனிதர்கள் மட்டுமல்ல, விலங்குகளும் பங்கேற்றன.
அன்றைய பேரரசர் அகஸ்டஸ் சீசர், ரோமப் பேரரசின் ஆதிக்கத்தில் இருந்த அத்தனை நாடுகளிலும் குடிக்கணக்கு எடுக்கப்பட வேண்டும் என்று ஆணையிட்டார். எனவே பாலஸ்தீனத்தில் கலிலேயா எனும் மாநிலத்தில் நாசரேத் எனும் ஊரில் வாழ்ந்த மரியாவும் அவரின் கணவர் யோசேப்பும், தங்கள் சொந்த ஊரான பெத்லகேமுக்குப் போய் தங்கள் பெயர்களைப் பதிவுசெய்ய வேண்டியிருந்தது.
பெத்லகேம் பாலஸ்தீனத்தின் இன்னொரு மாநிலமான யூதேயாவில் இருந்தது. நாசரேத்தில் இருந்து ஏறத்தாழ நூற்றியறுபது கிலோமீட்டர் தொலைவில் இருந்த பெத்லகேமுக்கு மரியாவும் யோசேப்பும் பயணிக்க வேண்டியிருந்தது. செல்வந்தர்களுக்கும் அதிகாரிகளுக்கும் குதிரை, ஏழை எளிய மக்களுக்குக் கழுதை இவ்விரண்டும் தான் அன்றைய போக்குவரத்துச் சாதனங்கள்.
அடைக்கலம் தேடி
மரியா நிறைமாதக் கர்ப்பிணியாக இருந்த வேளையில் இவ்வளவு தூரம் பயணிப்பது எத்துணை பெரும் சிரமம்! மரியாவைக் கழுதையில் ஏற்றி அமர வைத்துவிட்டு யோசேப்பு கழுதையை நடத்திக்கொண்டு நடந்தே சென்றிருக்க வேண்டும். இத்தனை சிரமங்களையும் மேற்கொண்டு பெத்லகேம் சேர்ந்த பிறகும் இருவரும் சந்திக்க வேண்டியிருந்த சவால்கள் முடியவில்லை. அங்கிருந்தோர் யார் வீட்டிலும் தங்க இயலாத நிலையில் ஏழைகளின் புகலிடமாக இருந்தது சத்திரம் ஒன்றுதான். ஆனால் இந்த ஏழை தம்பதிக்கு அங்கும் இடம் கிடைக்கவில்லை.
பைபிளில் உள்ள ஒரு குறிப்பை ஆதாரமாகக் கொண்டு ஆடு மாடுகள் அடைக்கப்பட்ட ஒரு தொழுவில் இயேசு பிறந்தார் என்ற பாரம்பரிய நம்பிக்கை உருவானது. மரியாள், பெத்லகேமில் தங்கிய அவ்விரவில் பெற்றெடுத்த தன் குழந்தையை விலங்குகளுக்கான தீனி வைக்கப்படும் தீவனத் தொட்டியில் கிடத்தினார் என்ற பைபிள் வாசகம் தான் இந்த நம்பிக்கைக்கு ஆதாரம் (லூக்கா 2: 7).
இவ்வுலகையே படைத்த இறைவனின் திருமகன் இவ்வுலகில் மனிதனாகப் பிறக்க இடம் ஏதும் கிடைக்காமல், மனிதர்கள் வாழும் இடங்களில் பிறக்கும் வாய்ப்பு மறுக்கப்பட்டு, விலங்குகள் தங்கிய தொழுவில் பிறக்க வேண்டியிருந்தது என்ற உண்மை நமக்குச் சொல்வது ஏராளம்! அந்த உண்மையில் நிரம்பி வழியும் சோகத்தையும் முரணையும் ஆழ்ந்து சிந்திக்கும் சிலரே உணர்வார்கள்.
மனிதர்கள் புறக்கணித்த இறைமகனை வரவேற்று அவருக்கு அடைக்கலம் தந்த விலங்குகளுக்கு, மனிதர்கள் இழைக்கும் கொடுமைகள் ஒன்றா, இரண்டா?
மானுடரைப் படைத்த இறைவன் அவர்கள் வாழும் வழிகாட்ட மனிதனாய்ப் பிறப்பது எத்தனை மகத்தான நிகழ்ச்சி! இறைவன் அதை யாருக்கு அறிவித்தார், பிறந்திருக்கும் இறைமகனைக் கண்டு வணங்கி மகிழ வருமாறு யாரை அவர் அழைத்தார் என்பதில் நாம் எளிதில் எதிர்கொள்ள விரும்பாத பல உண்மைகள் உள்ளன. அரசன் ஏரோது, ரோமானியப் பேரரசின் பிரதிநிதியாய் எருசலேமில் இருந்த ஆளுநன் பிலாத்து, யூத மதத்தின் காவலர்கள் போல தங்களைக் காட்டிக்கொண்ட குருக்கள், மறைநூல் அறிஞர், பரிசேயர் இவர்கள் யாருக்கும் இறைவன் மனிதனாய்ப் பிறந்திருக்கும் செய்தி அறிவிக்கப்படவில்லை.
பரந்த புல்வெளிகளில் பகல் முழுவதும் மேய்ந்த பிறகு இரவில் கிடையில் அடைக்கப்பட்ட ஆட்டு மந்தைகளுக்குக் காவலாய் நின்ற இடையர் களுக்கு இந்த நற்செய்தி அறிவிக்கப்பட்டது. அது நிகழ்ந்த விதத்தில்கூட அரிதான அழகும் இனிமையும் மிளிர்கின்றன. வானதூதர் ஒருவர் பேரொளி சூழத் தோன்றி அவர்களைப் பார்த்து, "அஞ்சாதீர்கள்! மக்களனைவருக்கும் பெரும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியை அறிவிக்கிறேன். தாவீதின் நகரான பெத்லகேமில் மக்களைக் காப்பவர் உங்களுக்காகப் பிறந்துள்ளார். அவரே வரவிருந்த மீட்பர். அவரே இறைமகன்" என்று சொன்னார்.
மீட்பரின் வருகை
அவர்கள் தெய்வக் குழந்தையை எளிதில் கண்டுகொள்ள ஒரு அடையாளத்தையும் வானதூதர் குறிப்பிட்டார். "குழந்தையைத் துணிகளில் சுற்றி தீவனத் தொட்டியில் கிடத்தியிருப்பதைக் காண்பீர்கள்." அதன்பின் இடையர் களுக்கு என்று இறைவன் ஏற்பாடு செய்திருந்த ஓர் இலவச இன்னிசைக் கச்சேரி வானில் அரங்கேறியது. விண்ணகத் தூதர் பேரணி ஒன்று பாடியதைக் கேட்டு அவர்கள் பேருவகை கொண்டனர். என்ன பாடினார்கள் வானவர்கள்? "உன்னதங்களிலே கடவுளுக்கு மாட்சி உரித்தாகுக! உலகில் அவருக்கு உகந்தோருக்கு அமைதி உண்டாகுக!"
ஆடு மேய்க்கும் இடையர்கள் படிப்பறிவற்ற வர்கள்; வசதிகள், வளங்கள், வாய்ப்புகள் மறுக்கப் பட்டவர்கள்; நீதிமன்றத்தில்கூட அவர்கள் சாட்சியம் ஏற்கப்படாத அளவுக்கு அன்றைய சமுதாயத்தின் விளிம்பில் இருந்தவர்கள்.. என்றெல்லாம் அறிஞர்கள் கூறுகின்றனர்.
குழந்தை இயேசுவைக் கண்டு வணங்கும் பேற்றினை இன்னொரு குழுவினருக்கும் இறைவன் அளித்தார். இடையர்களிடம் இருந்து முற்றிலும் மாறுபட்டவர்கள் இவர்கள். யூதர் அல்லாத பிற இனங்களை, பிற நாடுகளைச் சார்ந்த வர்கள். வானிலும் மண்ணிலும் நிகழ்பவற்றை முன்னரே அறியும் ஞானம் வாய்ந்த அறிஞர்கள். வானில் தோன்றிய விண்மீன் சொன்ன செய்தியை உணர்ந்து, நெடுந்தொலைவுப் பயணம் செய்து, குழந்தை இயேசுவைக் கண்டு வணங்கி, விலை உயர்ந்த பொருட்களை காணிக்கையாய்த் தந்தவர்கள் அவர்கள்.
இடையர்களைப் போல இயேசுவின் பிறப்புச் செய்தி இவர்களுக்கு உடனடியாக, வெளிப்படையாக அறிவிக்கப்படவில்லை. மறைமுகமாக அறிவிக்கப்பட்ட நற்செய்தியைப் புரிந்துகொள்ளும் ஞானமும் முயற்சியும் நெடும் பயணத்துக்குத் தேவையான உழைப்பும் இவர்களிடமிருந்தது.
பிறந்த இயேசுவைக் கண்டு மகிழும் பேறு இடையருக்கும் ஞானிகளுக்கும் கிடைத்தது. வாழும் இயேசுவை இந்த வையத்தில் கண்டு, வணங்கி மகிழும் பேறு நமக்கு எப்போது கிடைக்கும்?
இடையர்களின் களங்கமற்ற, எளிய மனமும் ஞானிகளின் தாராள, தளரா மனமும் நமக்கு வாய்க்கின்றபோது கிடைக்கும். சமத்துவம், சகோதரத்துவம், சமூக நீதி மூன்றையும் உள்ளடக்கிய அன்பை மனிதனாய்ப் பிறந்த இறைமகனுக்கு காணிக்கையாக நாம் தந்தால், இந்த விழாவின் மையமான அமைதி, அன்பு, மகிழ்ச்சி யாவும் நமக்கு ஆண்டு முழுவதும் கிடைக்கும்.
(நிறைவுற்றது)
இயேசு சொன்ன உருவகக் கதைகளில் தொடங்கி அவர் சொன்னது, செய்தது என்று விரிந்த இக்கட்டுரைத் தொடர் கடந்த அறுபத்தி மூன்று வாரங்களாக வெளியானது. தொடர்ந்து பாராட்டி உற்சாகமூட்டிய எல்லாச் சமயங்களையும் சார்ந்த வாசக நண்பர்களுக்கு என் மனமார்ந்த நன்றி. - எம். ஏ. ஜோ |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT