Published : 25 Nov 2021 03:12 AM
Last Updated : 25 Nov 2021 03:12 AM
தனது முக்கிய சீடர்களாக இயேசு தேர்ந்துகொண்ட பன்னிருவரில் ஒருவரின் வாழ்வு மகிழ்ச்சியாகத் தொடங்கி, சீராகத் தொடர்ந்து, இறுதியில் அழிவில், அவலத்தில் முடிந்தது. அவனது பெயர் யூதாஸ். மற்ற சீடர்களைப்போல யூதாசும் இயேசுவோடு தான் எப்போதும் இருந்தான். அவர் போதித்த எல்லாவற்றையும் அவனும் கேட்டான். நோய்களைக் குணமாக்கவும் பசித்தவருக்கு உணவு அளிக்கவும் அவர் செய்த அற்புதங்களை அவனும் அருகிருந்து பார்த்தான்.
இயேசு பன்னிருவரையும் “போய் நற்செய்தியை அறிவியுங்கள், நோயுற்ற வரைக் குணமாக்குங்கள்” என்று சொல்லி வெவ்வேறு ஊர்களுக்கு அனுப்பியபோது யூதாசும், அவர் சொன்னதைச் சொன்னபடி செய்தான்.
பன்னிருவரில் யூதாசுக்கிருந்த தனிச் சிறப்பு அவனுக்குத் தரப்பட்டிருந்த பொறுப்பு. இயேசுவுக்கும் சீடர்களுக்கும் உரிய பொதுப் பணம் யூதாசிடமே இருந்தது. அவர்களின் பொருளாளர் அவன்தான். அவர்களுக்கு வேண்டியதை அவ்வப்போது வாங்கியவனும் அவனே. யூதாசின் மேல் நம்பிக்கை இல்லா விட்டால் இந்தப் பொறுப்பை அவனிடம் ஒப்படைத்திருக்க மாட்டார்கள்.
இப்படி நன்றாக நடந்து கொண்டிருந்த யூதாஸ் கடைசியில்தான் வீழ்ந்தவன் ஆனான். யூதர் தலைவர்கள், இயேசுவைக் கொல்லத் திட்டமிட்டு, அதற்கான வழியையும் சரியான நேரத்தையும் தேடிக்கொண்டிருந்தபோதுதான், யூதாஸ் சிக்கினான்.
லாசரின் வீட்டில் இயேசுவுக்கு அளிக்கப்பட்ட விருந்தின்போது, லாசரின் சகோதரி மரியா நறுமணத் தைலம் கொண்டுவந்து இயேசுவின் பாதங்களில் பூசியபோது, யூதாஸ், “இந்தத் தைலத்தை விற்று, பணத்தை ஏழைகளுக்குக் கொடுத்திருக்கக் கூடாதா?” என்று கேட்டவன் யூதாஸ்.
இப்படி அவன் கேட்டதற்கான காரணத்தையும் பைபிள் குறிப்பிடுகிறது. “ஏழைகள்பால் கொண்டிருந்த அக்கறையினால் அல்ல. மாறாக, அவன் ஒரு திருடனாக இருந்ததால்தான் இப்படிக் கேட்டான். பணப்பை அவனிடம் இருந்தது. அதில் போடப்பட்ட பணத்திலிருந்து அவன் எடுத்துக்கொள்வதுண்டு” (யோவான் 12: 6).
சீடனைத் திருடன் ஆக்கிய இந்தப் பணத்தாசைதான் அவனைத் தன் குருவையே காட்டிக்கொடுக்கும் துரோகி யாக ஆக்குகிறது. அவன் துரோகம் இழைக்கத் தயாராக இருப்பதை அறிந்து தலைமை குருக்கள் மகிழ்ச்சியுற்று அவனுக்கு பணம் கொடுப்பதாக வாக்களித்தனர் (மாற்கு 14: 11).
துரோகத்தை நிறைவேற்றினான்
கெத்சமனி என்னும் தோட்டத்துக்கு இயேசு மூன்று நெருங்கிய சீடர்களோடு இரவில் பிரார்த்தனை செய்யச் சென்ற நேரமே அவரைக் கைது செய்யச் சரியான தருணம் என்பதை உணர்ந்து, தலைமைக் குருக்களின் காவலர்களையும் பணியாளர்களையும் அழைத்துக் கொண்டு யூதாஸ் வந்தான். அச்சமும் துக்கமும் இயேசுவை ஆட்கொள்ள, அவர் மனமுருகி இறைவனிடம் மன்றாடிய அந்த வேளையில், இந்தத் துரோகத்தை யூதாஸ் நிறைவேற்றினான்.
இரவு என்பதால் கூட்டத்தில் இயேசுவைச் சரியாக அடையாளம் காண்பதில் குழப்பம் ஏற்படலாம். அதை மேற்கொள்ள ‘யாரை குருவே என்று அழைத்து முத்தமிடுகிறேனோ, அவரே இயேசு. அவரைப் பிடித்துக்கொள்ளுங்கள்' என்று பேசித் திட்டமிட்டு, அதன்படியே செய்கிறான். நட்பின் அடையாளமான முத்தத்தை ஒரு நயவஞ்சகச் செயலுக்கு அவன் பயன்படுத்துவதை இயேசு மென்மையாகச் சுட்டிக்காட்டினார்.
இயேசுவைச் சிலுவையில் அறைந்து கொல்லப் போகி றார்கள் என்பது உறுதியான பிறகுதான், நயவஞ்சகத்தின் பின்விளைவுகள் அவனைப் பாதிக்கத் தொடங்கின. இயேசுவைக் காட்டிக் கொடுத்த தற்கு வெகுமதியாக ஆசை யோடு அவன் வாங்கியிருந்த முப்பது வெள்ளிக்காசுகளின்மீது வெறுப்பு வந்தது. அதைக் கொடுத்த தலைமைக் குருக்களிடம் சென்று திரும்பக் கொடுத் தான். அவற்றை அவர்கள் வாங்க மறுக்க, ஆலயத்திற்குள் அவற்றை எறிந்துவிட்டு போய் தற்கொலை செய்துகொண்டான்.
யூதாசின் முடிவு பற்றிய கதைகள்
யூதாசின் சாவு பற்றி பல்வேறு விளக்கங்களும் கதைகளும் உலவு கின்றன. அவன் இயேசுவைக் காட்டிக் கொடுப்பதற்காக வாங்கி, பின் ஆலயத் தில் எறிந்த முப்பது வெள்ளிக் காசுகளைக் கொண்டு அந்நியரைப் புதைப்பதற்காக யூதத் தலைவர்கள் ஒரு நிலம் வாங்கிய தாகவும், அதனால் அதற்கு ரத்த நிலம் என்ற பெயர் வந்ததாகவும் பைபிள் சொல்கிறது.
ஆனால் இன்னொரு இடத்தில் அவனைப் பற்றி தலைமைச் சீடரான பேதுரு பேசுகிறபோது இந்தப் பணத்தைக்கொண்டு யூதாசே ஒரு நிலத்தை வாங்கியதாகவும் அவன் அங்கே கீழே விழுந்து பரிதாபமான முறையில் இறந்த தாகவும் சொல்லப்படுகிறது.
சில அறிஞர்கள் இந்த இரண்டு வேறுபட்ட குறிப்புகளையும் இணைத்து, யூதாஸ் தற்கொலை செய்து கொள்ள முயன்றபோது கயிறு அறுந்து, அவன் கீழே இருந்த பாறையின்மீது விழுந்து உடல் சிதைந்து இறந்திருக்கக் கூடும் என்கின்றனர்.
‘நிக்கோதேமுவின் நற்செய்தி' எனும் அங்கீகரிக்கப்படாத ஒரு நூலில் இப்படி ஒரு கதை இருக்கிறது. இயேசுவைக் காட்டிக் கொடுத்த யூதாஸ் வீடு திரும்புகிறான். அவனது மனைவி அடுப்பில் கோழிக்கறி சமைத்துக் கொண்டிருக்கிறாள். அவள் அவன் கவலைக்குக் காரணம் கேட்க, யூதாஸ், “இயேசுவைக் காட்டிக் கொடுத்து காசு வாங்கிவிட்டேன். நிச்சயம் அவரைக் கொன்றுவிடுவார்கள்.
ஆனால், அவர் மீண்டும் உயிர் பெற்று வரலாம். அப்படி வந்தால் நான் செய்த இந்தச் செயலுக்காக என்னை நிச்சயம் தண்டிப் பார்” என்கிறான். மனைவி சிரிக்கிறாள். “இங்கே பார். இப்போது நான் சமைத்துக் கொண்டிருக்கும் இந்தக் கோழிக்கு மீண்டும் உயிர் வந்துவிட்டால் அந்த இயேசுவும் உயிர்ப்பார் என்று நம்புவேன்” என்று கேலி செய்கிறாள். மறுகணம் உயிரிழந்து உரிக்கப்பட்ட கோழி மீண்டும் உயிர் பெற்று, பழைய தோற்றம் பெற்று கூவத் தொடங்குகிறது. அதைக் கண்டு அஞ்சி நடுங்கிய யூதாஸ் வீட்டைவிட்டு ஓடிப்போய் செத்தான் என்கிறது இந்தக் கதை.
பன்னிருவரில் மற்ற பதினோரு பேரும் உலகெங்கும் புனிதர்களென்று காலமெல்லாம் போற்றப்பட, யூதாஸ் எனும் பெயரே துரோகிகளையும் நயவஞ்சகர்களையும் குறிக்கின்ற இழிச் சொல்லாக மாறிப் போனது.
தனிமனிதச் சீர்கேட்டிற்கும் பல அரசுகள், நாடுகளின் சீரழிவிற்கும் பின்னால் ஒளிந்து நிற்பது பணத்தின் மீதுள்ள பேராசைதான்.
(தொடரும்)
கட்டுரையாளர், தொடர்புக்கு : majoe2703@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT