Published : 14 Oct 2021 06:10 AM
Last Updated : 14 Oct 2021 06:10 AM

துர்க்கையின் வடிவம்

இந்துக்களின் முக்கிய திருவிழாக்களுள் நவராத்திரிக்கென்று சிறப்பிடமுண்டு. இவ்விழா துர்க்கை, மகிஷாசுரன் என்னும் அசுரனின் கொடுஞ்செயலை அழிப்பதன் வெற்றியாகக் கொண்டாடப்படுகிறது. இந்நிகழ்ச்சி எருமையைக் குலக்குறியாகக் கொண்டு மக்கள் வாழ்ந்த மைசூர்ப் பகுதியில் (எருமை நாடு) நடைபெற்றதாகக் கருதப்படுவதால் கர்நாடகாவில் இவ்விழா ‘தசரா’ என்ற பெயரில் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.

செல்வத்தைப் பெருக்க உதவும் தேவியாகத் திருமகளும் (இச்சா சக்தி), அறிவைச் செயலாக மாற்றி வெற்றிதரும் தேவியாகத் துர்க்கையும் (கிரியா சக்தி), கலைஞானத்தை அளிக்கும் தேவியாக சரஸ்வதியும் (ஞானசக்தி) முப்பெருந் தேவிகளாக வணங்கப்படுகின்றனர். பிற்காலச் சோழர் காலம் முதற்கொண்டு சைவ, வைணவக் கோயில்களில் மூலவரின் துணைவியாருக்கென தனிக்கோயில்கள் எழுப்பப்பட்டு, அக்கோயில் தேவகோட்டங்களில் இச்சா, கிரியா, ஞான சக்திகள் இடம் பெற்றிருந்தன. இது சாக்த வழிபாட்டின் மேன்மையைப் பறைசாற்றுகின்றது. ஒவ்வொரு சக்திக்கும் மூன்று நாட்கள் என மூன்று சக்திகளுக்கும் ஒன்பது நாட்கள் நவராத்திரி விழாவாகக் கொண்டாடப்படுகிறது. ஆரம்ப காலத்தில் தனித்தனியே முப்பெருந் தேவியர் வழிபடப்பட்டாலும் பிற்காலத்தில் ஒரு நாடு வளம்பெற மூன்றும் ஒருசேர அமைய வேண்டியதால் விஜயநகர வேந்தர்கள் கோயில்களில் நவராத்திரி மண்டபங்களை அமைத்து விழா கொண்டாடுவதற்காகத் தானங்களும் அளித்துள்ளனர். மழை பெய்து ஓய்ந்த பின்னர் மலர்கள் பூத்துக் குலுங்கும் காலத்தில் வளத்தின் அறிகுறியாக அன்னையர் மூவரும் புரட்டாசி மாதத்தில் வணங்கப்படுகின்றனர்.

நவராத்திரியில் வீடுகள் மற்றும் கோயில்களில் கொலு வைப்பர். இது தஞ்சாவூர், புதுக்கோட்டை அரச பரம்பரைகளில் முக்கிய இடம் பெற்றுள்ளது. தஞ்சை மராட்டியர் ஆவணம், பதினெண் சமூகத்தைச் சார்ந்தவர்கள் கொலு பொம்மைகள் வழங்கியமைக்குச் சான்று பகர்கின்றது. கொலு பொம்மைகளுக்குப் பண்ருட்டி, மதுரை மற்றும் தஞ்சாவூர் புகழ்பெற்ற இடங்களாகும். இந்தியா மட்டுமின்றி ஜப்பான், இலங்கை போன்ற நாடுகளிலும் கொலு வைத்தல் நடைமுறையில் உள்ளது.

முடியாட்சி நடைபெற்ற காலங்களில் மன்னர்கள் போருக்குச் செல்லும் முன் வெற்றி தெய்வமாகிய துர்க்கையை வணங்கிச் செல்வர்.

எப்படி ஆனாள் துர்க்கை?

ரஜோகுணம் கொண்ட கொற்றவை வட இந்திய காளியுடன் இணைக்கப்பட்டு மகிஷாசுரமர்த்தினியானாள். பிறகு அவளே துர்க்கை எனவும் அழைக்கப் பட்டாள். துர்க்கம் என்றால் அகழி என்று பொருள். அகழியானது கோட்டை மதிலைப் பகைவர் அணுக முடியாதபடி காவல் புரிவதாகும். அதுபோல் மக்களைத் துன்பம் அணுகாதவண்ணம் காவல் புரிபவள் என்ற தத்துவத்தை உணர்த்துவதே துர்க்கையின் வடிவமாகும். சிலப்பதிகாரம் வேட்டுவ வரியில் தேவர்களுக்குத் தீங்கிழைத்த மகிஷாசுரனை எதிர்த்துப் போரிட்டு வென்ற மகிஷாசுரமர்த்தினியை இளங்கோவடிகள் புகழ்ந்துரைத் துள்ளார்.

காளிகா புராணம்

துர்க்கை காவற்படைத் தலைவியாக ஆபத்துக் காலங்களில் அச்சம் போக்கி வீரர்களுக்குரிய தெய்வமாகத் திகழ்பவள். கானத்தெருமையின் கடுந்தலைமீது நிற்கும் துர்க்கையின் கண்கவர் வனப்பினை கோயில் சிற்பங்களில் காணலாம். துர்க்கையின் இருமருங்கிலுமுள்ள மறவர்களில் ஒருவர் கையில் வாளேந்தி நிற்க, மற்றொருவர் உடல் அவயங்களை வாளினால் அரிந்து இறைவிக்குப் பலியிடுகிறார். கொற்றவைக்குத் தலைப்பலி (நவகண்டம்) கொடுக்கும் வழக்கம் முன்பு இருந்துள்ளது. இலக்கியங்களிலும் காணப்படுகிறது. ரத்தத்தையும் சதையையும் கொடுத்து வழிபடுவது நவகண்டவிதி எனக் காளிகா புராணத்தில் குறிப்பிடப் பட்டுள்ளது. போருக்குச் செல்லும் முன் அச்சத்தைத் தவிர்க்க வேண்டி இத்தகைய வழிபாட்டு நெறிமுறையைக் கடைப்பிடித்திருக்க வேண்டும்.

பொதுவாக காவல் தெய்வங்கள் ஊரின் புறத்தே வடக்குத் திசையில் அமைக்கப்படும். இதன் காரணமாகவே துர்க்கையும் சிவன் கோயில்களில் அர்த்த மண்டப வடக்குப்புறச் சுவரில் அமையப்பெற்றுள்ளார். மாமல்லபுரம் மகிஷாசுரமர்த்தினி குடைவரை மண்டபத்திலும் வடபுற உட்சுவற்றில் மகிஷாசுரமர்த்தினி சிற்பத்தொகுதி செதுக்கப்பட்டுள்ளது. இச்சிற்பத் தொகுதி இந்தியா, உலகத்துக்கு அளித்த கலைக்கொடையாகும்.

எட்டுக் கைகளைக் கொண்டு அன்னையின் மெல்லிய தேகம் மகிஷாசுரனைக் காட்டிலும் சிறிய அளவில் படைக்கப்பட்டுள்ளார். அவளது வலது கைகளில் கீழிருந்து மேலாக வாள், மணி, பிரயோக சக்கரம், அம்பு ஆகிய ஆயுதங்களையும், இடது கைகளில் கீழிருந்து மேலாக கேடயம், வில், பாசம், சங்கினையும் பற்றியுள்ளார். மார்பின் நடுவில் நீண்டு தொங்கும் முடிச்சுகளுடன் கூடிய கச்சை அணிந்துள்ளார். இதை கன்னிப் பெண் சிற்பங்களில் காணலாம். போரிலும் தற்காப்பு அணியாகவும் அணிந்திருப்பர். கரண்ட மகுடம், பத்ர குண்டலம், கண்டிகை, சரப்பளி, முத்துச்சரம், கேயூரம், கைவளை, இடையில் வாளின் உறை, தொடைவரை ஆடை, வீரக்கழல் என சகல ஆடை, ஆபரணங்களையும் அணிந்துள்ளார். அன்னையைச் சுற்றிலும் பூதகணங்களும் பணிப்பெண்ணும் காணப்படுகின்றனர்.

துர்க்கையின் போர் தொடர்பு

படையினர் இடையே வேறுபாடு தெரிதல் வேண்டி அவரவர்க்குரிய முறையில் மலர்களைச் சூடுவர். அவ்வகையில் குறிஞ்சி நிலத்திற்குரிய வெட்சிப்பூ (இட்டிலிப்பூ) துர்க்கைக்குரிய பூவாகும். இது காடுகளில் வளரக்கூடியது. போருக்குச் செல்வோர் சூடும் செந்நிற வெட்சிப்பூ இன்று துர்க்கை பூசைக்குரியதாகக் கருதப்படுகிறது. இது துர்க்கைக்கும் போருக்கும் உள்ள நெருங்கிய தொடர்பைக் காட்டுகிறது.

தலைவிக்கோ, தலைவனுக்கோ தாழ்வு வராமல் காக்கும் தகுதிறன் உடைய மறப்பண்புகளுடைய மூலப்படைகள் இருந்துள்ளமையை அன்னையின் முன்பும், அசுரன் முன்பும் இருபக்க வீரர்களும் மோதிக்கொள்வதிலிருந்து அறியலாம்.

பகைவனை நேருக்கு நேர் முழு ஆற்றலுடன் தாக்கும் நிலை இதில் காட்டப்பட்டுள்ளது. ஆண், பெண் அனைவரும் போர் பற்றிய விழிப்புணர்வு கொண்டு விளங்கியுள்ளனர். பெண்களும் போர்களில் ஈடுபட்டுள்ளனர். இப்போர் தைரியமிழந்த அசுரர்கள், உற்சாகத்துடன் பூதகணங்கள் என்ற முரண்பாடுகளுடைய இரண்டு குழுக்களிடையே நடைபெறும் போராகும். போர் நிகழ்ச்சியாயினும் அருள் சுரக்கும் பார்வை அன்னையின் மகத்துவத்தைக் காட்டுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x