Published : 23 Sep 2021 03:11 AM
Last Updated : 23 Sep 2021 03:11 AM
தீமை செய்வதற்கான தூண்டுதல்கள் மனித மனங்களில் தோன்றுவதில் வியப்பேதும் இல்லை. ஆனால் அது இயேசுவின் வாழ்விலும் நிகழ்ந்ததை பைபிள் விவரிக்கிறது.
இறைமகனாக இருந்தும் இயேசுவுக்கு இந்தச் சலனங்கள் வந்ததற்குக் காரணம், அவர் மனிதராகப் பிறந்து, மனிதர்களாகிய நமக்கு நிகழும் யாவற்றையும் அனுபவித்து உணர்ந்து கொள்ள வேண்டும் என்ற அவரது விருப்பமாக இருக்கலாம். முப்பது வயதில் இயேசு தனது போதனைகளைத் தொடங்கும் முன்னர் பாலை நிலத்தில் நாற்பது நாட்கள், ஏதும் உண்ணாமல் நோன்பு இருந்தார். நாற்பது நாட்கள் கடந்து, நோன்பை முடிக்கும் தறுவாயில் இயேசு பசியோடு இருந்ததில் வியப்பில்லை. அவ்வேளையில்தான் இந்தத் தூண்டுதல்கள் தொடங்கின.
அலகை அல்லது சாத்தான் தோன்றி, “நீர் இறைமகன் என்றால் இந்தக் கற்கள் அப்பம் ஆகும்படி கட்டளையிடும்" என்றான். அவர் பசியோடு இருப்பதை உணர்ந்து அப்பங்களைக் கொண்டு வந்து 'உண்ணும்' எனச் சொல்லவில்லை. இறைமகனுக்குரிய ஆற்றலால் அங்கு கிடந்த கற்களை அப்பங்களாக மாற்றும் அற்புதத்தை ஆற்றச் சொன்னான். இயேசு ‘அப்பம் மட்டுமா மனிதரை வாழவைப்பது? கடவுள் சொல்லும் ஒரு சொல்லால்கூட மனிதர் வாழ முடியும்' என்று சொல்லி இந்த முதல் தூண்டுதலை வென்றார்.
இறைத்தந்தை தனக்குத் தந்த ஆற்றலைப் பயன்படுத்தி இயேசு அற்புதம் நிகழ்த்தியது எதற்காக? நோயினால் வாடிய மானிடருக்கு குணமளிக்க, சாவு ஏற்படுத்திய துயரத்தில் வாடியவர்களுக்கு ஆறுதல் அளிக்க, உணவு வாங்க முடியாத இடத்தில் பசியால் வாடிய மக்களுக்கு உணவளிக்க அவர் அற்புதங்களை நிகழ்த்தினார். இயேசு தன் தேவைகளை நிறைவு செய்ய, தன் ஆசைகளை நிறைவேற்ற இந்த அரிய ஆற்றலை ஒருபோதும் பயன்படுத்தியதேயில்லை.
சோதிக்க வேண்டாம்
அதன்பிறகு, சாத்தான் எருசலேம் பேராலயத்தின் உயரத்தில் அவரைக் கொண்டு போய் நிறுத்தி, “நீர் இறைமகன் என்றால் கீழே குதியும். இவ்வளவு உயரத்தில் இருந்து குதித்தால் ஏற்படும் காயங்களைப் பற்றி நீர் கவலைப்பட வேண்டியதில்லை. ஏன்? நீர் உண்மையில் இறைமகன் என்றால் உமக்குக் காயம் ஏதும் ஏற்படாதவண்ணம் உம்மைக் காத்திடுமாறு கடவுள் தன் தூதருக்குக் கட்டளையிடுவார் என்று மறைநூலில் உள்ளது” என்றான். பதிலுக்கு இயேசுவும் மறைநூலில் உள்ள ஒரு அறிவுரையைப் பயன்படுத்தி, அலகையை அடக்கினார். “உன் கடவுளைச் சோதிக்க வேண்டாம்.” (இணைச்சட்டம் 6: 16)
முதல் தூண்டுதலில்கூட சிறிது அர்த்தம் இருந்தது. பசித்திருக்கும் நபரின் பசியைப் போக்க அப்பம் பயன்படும். ஆனால் ஆலயத்தின் உச்சியிலிருந்து கீழே குதிப்பதால் யாருக்கு என்ன பயன்? இவ்வளவு உயரத்திலிருந்து குதித்தாலும் இவருக்கு ஏதும் ஏற்படவில்லையே என்று இதைப் பார்த்து வியந்து பாராட்டு வோர் எழுப்பும் கரவொலிக்காக இது போன்ற சாகசச் செயல்களைச் செய்ய அவர் சர்க்கஸ் சாகசக் கலைஞரும் இல்லை. துன்புறும் மக்களின் துயரங்களை தீர்க்கத்தான் இறைமகன் தனது அரிய ஆற்றல்களைப் பயன்படுத்துவாரே தவிர, வீண் புகழுக்காக இது போன்ற ஆபத்தான வேடிக்கைகளில் ஒருபோதும் ஈடுபட மாட்டார்.
இரண்டாவது தூண்டுதலிலும் தோல்வியைச் சந்தித்த சாத்தான், இறுதியாக உயர்ந்ததொரு மலைக்கு இயேசுவை அழைத்துச் சென்று உலக அரசுகள், அவற்றின் மேன்மைகள் யாவற்றையும் காட்டி, “எனக்கு முன் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து என்னை வணங்கினால் இவை அனைத்தையும் உமக்குத் தருவேன்” என்றான்.
அப்பாலே போ சாத்தானே
தீமை செய்யுமாறு விடுக்கப்படும் தூண்டுதல்களில் எல்லாம் ஒளிந்திருக்கும் பொய்யை அக்கணத்திலேயே இயேசு கண்டுகொண்டார். உலகம் யாவும் அதைப் படைத்த கடவுளுக்கே சொந்தம். எனவே தன் முன் விழுந்து தன்னை வணங்கினால் அதெல்லாம் உனக்குத் தருவேன் என்பது தன்னிடம் இல்லாத ஒன்றைத் தருவதாகச் சொல்லி ஏமாற்றும் தந்திரம். அதனைப் புரிந்துகொண்ட இயேசு, ‘உன்னை வணங்குவதா? உனக்குப் பணிவதா? நாம் கடவுளை மட்டுமே வணங்கி, அவருக்கு மட்டுமே பணி செய்ய வேண்டும் என்று மறைநூல் சொல்வது உனக்கு தெரியாதா? அகன்று போ' என்று இயேசு விரட்ட சாத்தான் அகன்றான்.
தீமை செய்யுமாறு நம்மை அழைக்கும் இந்தத் தூண்டுதல்கள் யாரிடமிருந்து, எங்கிருந்து வருகின்றன? இறைவனிடமிருந்து வருவதில்லை என்பதை பலரும் எளிதில் ஏற்றுக் கொள்வார்கள். கடவுளும் அல்லாத மனிதனும் அல்லாத ஒரு படைப்பைத் தீமையின் மொத்த உருவமாகக் கருதி, அதற்கு சாத்தான் என்று பெயரிட்டு, தீமைக்கான தூண்டுதல்கள் யாவும் அந்த தீயோனிடமிருந்தே வருவதாகச் சிலர் நம்புகின்றனர்.
வேறு சிலர் இவை நம்மிடமிருந்தே, நம்மில் உள்ள தீய நாட்டங்கள், தீய ஆசைகளில் இருந்தே வருகின்றன என்று நம்புகின்றனர். இயேசுவின் பன்னிரு திருத்தூதர்களில் ஒருவரான யாக்கோபு இப்படிச் சொல்கிறார்: "ஒவ்வொருவரும் தம் சொந்த நாட்டத்தினாலேயே சோதிக்கப்படுகின்றனர். அது அவர்களைக் கவர்ந்து மயக்கி தன் வயப்படுத்துகிறது."
அப்பத்தின் உருவகம்
அப்பம் என்ற உருவகத்துக்குப் பின்னால் உணவு, உடை, உறைவிடம், பாலுறவு போன்ற உடல் சார்ந்த வேட்கைகள் உள்ளன. கோவில் கோபுரத்தில் இருந்து குதிப்பது, வெற்றுப் புகழுக்காகச் சற்றும் பயனில்லாத காரியங்களைச் செய்வதைக் குறிக்கலாம். சாத்தானை அடிபணிந்து வணங்குவது எதைக் குறிக்கலாம்? தீய நபர்கள் நமக்கு தரக்கூடிய காரியங்களுக்காக அவர்களுக்குப் பணிந்து, அவர்கள் சொல்லும் தீங்கைச் செய்யும் அவலத்தைக் குறிக்கலாம்.
சாதாரண மனிதர்களாகிய நாம் சில வேளைகளில் தீய தூண்டுதல்களுக்குச் செவிமடுத்து அவற்றைச் செய்வது மனித இயல்புதான். ஆனால், எந்த அளவுக்கு நாம் இந்தத் தீய தூண்டுதல்களையும் சபலங்களையும் சலனங்களையும் வெல்கிறோமோ, அந்த அளவுக்கு நமக்கும் நம்மைச் சார்ந்திருப்போருக்கும் மனிதர் அனைவருக்கும் நன்மை, மகிழ்ச்சி.
தூண்டுதல்களை, சலனங்களை வெல்வதற்கான வழியை இந்த நிகழ்ச்சி மூலம் இயேசு காட்டுகிறார். சாத்தான் ஒன்றைச் சொல்லி முடித்த மறுகணம் தயங்காமல், தாமதிக்காமல் அதற்கு மாற்றான, எதிரான ஒன்றை இயேசு உடனே சொல்லிவிடுகிறார். அவரைப் போலவே தீய ஆசை ஒன்று துளிர்த்த மறுகணம் அதை நாம் கிள்ளி எறிந்துவிட வேண்டும். தீமை நம்மிடம் பேசத் தொடங்கிய மறுகணம் நாம் செவிகளை மூடிக்கொள்ள வேண்டும். கவர்ச்சி உடை அணிந்து வரும் தீமை கண் சிமிட்டி அழைத்த மறுகணம், நாம் அங்கு நில்லாமல் எதிர்த் திசையில் ஓட வேண்டும். அங்கேயே நின்று தீமையோடு பேச்சை வளர்த்தால் ஆதாம், ஏவாள் போல நாமும் ஏமாறுவது நிச்சயம்.
(தொடரும்)
கட்டுரையாளர், தொடர்புக்கு : majoe2703@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT