Published : 16 Sep 2021 03:11 AM
Last Updated : 16 Sep 2021 03:11 AM
நல்ல நண்பர்கள் வாய்த்த ஒரே காரணத்தால் நலம் பெற்ற ஒரு மனிதரைப் பற்றி பைபிள் பேசுகிறது.
இயேசு வளர்ந்த ஊர் நாசரேத். அதற்கு அருகிலிருந்த கப்பர்நாகும் என்ற ஊருக்கு இயேசு வந்து அங்குள்ளவர் ஒருவர் வீட்டில் தங்கியிருந்தார். அவர் அங்கிருக்கும் செய்தி ஊரில் பரவி, பெரும் கூட்டம் திரண்டு வந்தது. விரைவில் வீட்டினுள் மட்டுமின்றி, வெளியே வாசலிலும் இடம் இல்லை என்ற நிலை உருவானது. அவரது பேச்சை அங்கே கூடியிருந்த மக்கள் ஆர்வமாகக் கேட்டுக்கொண்டிருந்தனர்.
முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டு நடக்க இயலாமல் இருந்த ஒரு நபரைக் கட்டிலில் படுக்க வைத்து, அந்தக் கட்டிலைத் தூக்கிச் சுமந்துகொண்டு நான்கு பேர் வந்தார்கள். கட்டிலைக் கொண்டுபோய் இயேசுவின் முன்னே வைத்து, அதில் முடங்கிக் கிடக்கும் தங்கள் நண்பரைக் குணப்படுத்த வேண்டுமென்பதே அவர்களது எண்ணம்.
ஆனால் உள்ளேயும் வெளியிலும் அடைத்துக்கொண்டு அமர்ந்திருக்கும் மக்கள் அனைவரையும் தாண்டி கட்டிலை உள்ளே எடுத்துச் செல்வது எப்படி என்று புரியாமல் தவித்தனர். பிறர் மீது கொள்ளும் அன்பும் அக்கறையும் தடைகளைக் கண்டு தளர்ந்து விடாது. அன்பிருக்கும் மனத்துக்குத்தான் கற்பனையும் படைப்பாற்றலும் அதிகம். எனவே அவர்களுக்கு யாரும் நினைத்திராத ஒரு புதிய வழி தோன்றியது. வீட்டின் மேல் இருக்கும் கூரையைப் பிரித்து, நாம் மேலே நின்றுகொண்டு, நண்பன் படுத்திருக்கும் கட்டிலை மட்டும் கீழே இறக்கினால் சரியாக இயேசுவின் முன்னே வைத்துவிட முடியும் என்று திட்டமிட்டனர்.
அவர்களது நம்பிக்கையையும் விடாமுயற்சியையும் கண்டு மகிழ்ந்த இயேசு அவர்களுக்கு வெகுமதி அளிக்க விழைந்தார். அவர்கள் எதிர்பார்த்ததைவிடப் பன்மடங்கு மேலான வெகுமதி அது.
அந்த வெகுமதி எது?
அவர்களின் எதிர்பார்ப்பு என்னவாக இருந்திருக்கும்? முடக்குவாதத்தால் முடங்கிப் போன நண்பன் நலம் பெற்று மீண்டும் முன்புபோல் எழுந்து நடக்க வேண்டும் என்றுதானே அவர்கள் எதிர்பார்த்திருப்பார்கள்? அவர்களைப் போலத்தானே நமது எண்ணங்களும் எதிர்பார்ப்புகளும் உள்ளன? உடல்நலம் மட்டுமே பெரிதென நம்மில் பெரும்பாலானவர்கள் கருதுகிறோம். நமது உள்ளமும் ஆன்மாவும் நோயுற்று இருந்தால் அது நம் உடல் நலத்தையும் பாதிக்கும் என்பது நமக்குப் புரிவதில்லை. உயிர்களுக்கும் சகமனிதர்களுக்கும் எதிராக நாம் செய்யும் தீமைகள், பாவங்கள் யாவும் நமது ஆன்ம நலனைப் பாதிக்கின்றன.
யாரால் மன்னிக்க இயலும்?
இதனை நன்கு உணர்ந்த இயேசு கட்டிலில் கிடந்த அவரைப் பார்த்து, “மகனே, உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன” என்றார். அந்தக் கூட்டத்தில் இருந்த மறைநூல் அறிஞர் சிலர் இதைக் கேட்டுக் குழம்பினர். ‘கடவுள் ஒருவரைத் தவிர வேறு யாரால் பாவங்களை மன்னிக்க இயலும்?' என்பதே அவர்கள் மனத்தில் எழுந்த கேள்வி. அவர்கள் இதனை வெளிப்படையாகக் கேட்காவிட்டாலும், அவர்களின் எண்ணங்களை அறிந்த இயேசு அவர்களைப் பார்த்துக் கேட்டார். “இரண்டில் எது எளிது? எது கடினம்? முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட இவரிடம் ‘உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன' என்று சொல்வது எளிதா? இல்லை, ‘எழுந்து உன் படுக்கையைத் தூக்கிக்கொண்டு நட' எனச் சொல்வது எளிதா?" என்று கேட்டார்.
‘உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன' என்று சொல்வது எளிது. அவரது ஆன்மா நலம் பெற்றுவிட்டது என்பதை இவர்கள் எப்படிக் காண முடியும்? காண இயலாதது தானே ஆன்மா? உன் படுக்கையை எடுத்துக் கொண்டு நட என்று சொல்வதுதான் கடினம். ஏனெனில், அது அவர்களது கண்ணுக்கு முன்னர் நிகழ வேண்டும். முடக்குவாதத்தால் முடங்கிப் போன அந்த ஆள், அவர்கள் காணும் விதத்தில் எழுந்து நடக்க வேண்டும். ‘எளிதானதைச் செய்யும் ஆற்றல் எனக்கு உண்டு என்பதை நீங்கள் புரிந்துகொள்ளும் விதத்தில் கடினமானதைச் சொல்கிறேன். அது நடக்கிறதா இல்லையா எனப் பாருங்கள்' என்று சொல்லும் விதத்தில் நோயுற்றவரைப் பார்த்து, “நீ எழுந்து நட. உன் படுக்கையைத் தூக்கிக்கொண்டு உன் வீட்டுக்குப் போ" என்று இயேசு சொன்னதும், அந்த நபர் எல்லோரும் காண எழுந்து நின்றார். தன் படுக்கையை எடுத்துக்கொண்டு நடந்தார்.
இதனைப் பார்த்த கூட்டத்தினர் மலைத்துப் போனார்கள். தங்கள் நண்பருக்கு உடல் நலம் மட்டுமல்ல, ஆன்ம நலனும் கிடைத்துவிட்டதே என்று அந்த நண்பர்கள் நால்வரும் பெருமகிழ்ச்சி அடைந்திருக்க வேண்டும். உடல் நலமும் ஆன்ம நலனும் ஒருசேரப் பெற்ற அந்த நோயாளி, தன் மீது ஆழ்ந்த அக்கறையும், இறைவன் அனுப்பிய இயேசுவின் மீது ஆழ்ந்த நம்பிக்கையும் கொண்ட நான்கு பேர் தனக்கு நெருங்கிய நண்பர்களாகக் கிடைத்தது பெரும்கொடை என்று மகிழ்ந்து நன்றி கூறியிருக்க வேண்டும்.
இந்தப் பெரும் கொடையைப் பெற்றவர்கள் நம்மில் எத்தனை பேர்? நண்பர்கள் எல்லோருக்கும் இருக்கலாம். ஆனால் உண்மையில் நல்ல நண்பர்களோ, சிலருக்கே கிடைக்கும் அரிய கொடை.
தம் சீடர்களை நண்பர்கள் என்றுதான் இயேசு கருதினார். அவர்களில் ஒருவர் முப்பது வெள்ளிக்காசுக்காக நண்பரைப் போல முத்தமிட்டு, இயேசுவைக் காட்டிக் கொடுக்கிறார். நண்பன் என்று நம்பியவர்களை சுயலாபத்துக்காகத் தயக்கமேயின்றி ஏமாற்றுவோர், துன்பம் என்றதும் நண்பன் என்றும் பாராமல் ஓடி ஒளிந்துகொள்வோர், விளைவுகளை மறைத்துக் குற்றங்கள் செய்யத் தூண்டுவோர் எல்லோரும் நண்பர்கள் என்ற போர்வைக்குள்தான் ஒளிந்துகொள்கின்றனர்.
நாம் நலம் பெற நாம் செய்ய வேண்டியவற்றை, நம்மால் செய்ய இயலாத நிலையில் அக்கறையோடு, விடாமுயற்சியோடு நம்மை நல்வாழ்வை நோக்கி இட்டுச்செல்பவர்கள்தான் நல்ல நண்பர்கள்.
நல்ல நண்பர்கள் என்றுமே நம்பிக்கை மிகுந்தவர்கள். அப்படி நான்கு பேராவது நமக்கு இருப்பார்களா?
(தொடரும்)
கட்டுரையாளர், தொடர்புக்கு : majoe2703@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT