Published : 12 Aug 2021 03:20 AM
Last Updated : 12 Aug 2021 03:20 AM

அகத்தைத் தேடி 61: “காண்டாமிருகம்போல் இரு”- யாழ்ப்பாணத்துச் சுவாமிகள்

ஈழத்துக்கென்றே ஒரு சித்தர் மரபு இருந்திருக்கிறது. பொது வாழ்விலிருந்து முற்றிலுமாக தம்மை விலக்கிக்கொண்டு வாழ்ந்த இச்சித்தர்கள் இலக்கியத்திலும், ஏட்டிலும் இடம்பெறாது போயினர். கடந்த இரண்டு நூற்றாண்டுகளில் ஈழத்தில் வாழ்ந்த சித்தர்கள் பற்றிய வரலாறு செவி வழிச்செய்தியாக மட்டுமே கிடைக்கிறது.

யோகர் சுவாமிகள், செல்லாச்சி அம்மையார், சித்தானைக்குட்டி சுவாமிகள், பெரியானைக்குட்டி சுவாமிகள், நயினாதீவுச் சுவாமிகள், கடையிற் சுவாமிகள் உள்ளடக்கிய 16 ஈழத்துச் சித்தர்கள் பற்றிய வரலாற்றுக் குறிப்புகள் இதுவரை கிடைத்துள்ளன.

கடையிற் சுவாமிகளின் சீடர்களில் ஒருவர் செல்லப்பா சுவாமிகள். செல்லப்பா சுவாமிகளுக்கு ஒரே ஒரு சீடர்தான் இருந்தார். அவர்தான் யாழ்ப் பாணத்துச் சுவாமிகள் என்று அழைக்கப்படும் யோகர் சுவாமிகள்.

நான்கு மகாவாக்கியங்கள்:

செல்லப்பா சுவாமிகளிடம் யோகர் சுவாமிகள் நான்கு வாக்கியங்கள் மட்டுமே உபதேசமாகப் பெற்றார்.

இந்த நான்கு மகா வாக்கியங்களும் சகல சாத்திரங்களின் சாரத்தை உள்ளடக்கியவை. ஆகவே இவை மகாவாக்கியங்கள் என்று அழைக்கப்பட்டன. தேவையான சந்தர்ப்பங்களில் தம்மைத் தேடிவரும் பக்தர்களிடம் பொருத்தமான ஒரு வாக்கியத்தைச் சொல்லி மெளன முறுவது யோகர் சுவாமிகளின் வழக்கம்.

1. ஒரு பொல்லாப்புமில்லை

2. எப்பவோ முடிந்த காரியம்

3. நாம் அறியோம்

4. முழுதும் உண்மை

வேதாந்தமோ, சித்தாந்தமோ எதன் வழியில் இந்த வாக்கியங்களுக்குப் பொருள் கூறினாலும் அந்த வழியை பூரணமாக வெளிப்படுத்தும் கூற்றுகளாக இந்த மகா வாக்கியங்கள் அமைந்திருக்கின்றன. இதுவே இவ்வாக்கியங்களின் தனிச்சிறப்பு.

மகாவாக்கியங்களின் உட்பொருள்

சர்வம் பிரம்ம மயம் என்பது வேதாந்த சாரம். சர்வமும் பிரம்ம மயம் என்றால் இங்கு என்ன பொல்லாப்பு நிகழ முடியும்? ஆதலால் ஒரு பொல்லாப்புமில்லை.

சிந்தித்து சிந்தித்து சிவனிலே ஐக்கியமாதலே சீவன் முக்தி. சிவனுடன் கலப்பதே இறுதி என்பது எப்போதோ முடிந்த காரியம்.

அப்படி உள்ள காரியம் - பிரம்மம். அது சிந்தனை இறந்தது. சிந்தனைக்கு அப்பாற்பட்டது. மாயையில் கட்டுண்டு கிடப்பதால் அதனை நாம் அறியோம்.

அனைத்தும் சத்தாய் இருப்பதால் முழுதும் உண்மை. இது வேதாந்த விளக்கம்.

ஆங்கிலக் கல்வி ஏற்படுத்திய ஆன்மிக நாட்டம்

இலங்கை மாவிட்டபுரத்தில் 1872-ம் ஆண்டு மே மாதம் 29-ம் தேதி அம்பல வாணன் என்ற சைவப் பெரியாருக்கும் சின்னாச்சி அம்மையாருக்கும் பிறந்தார். பெற்றோர் இட்ட பெயர் யோகநாதன் என்பதாகும். தந்தையாரிடம் சைவ சமய சாத்திரங்களைக் கற்றாலும், யோகநாதனின் முறையான கல்வி கத்தோலிக்கப் பாடசாலையில்தான் ஆரம்பமானது.

இவரது சித்தப்பா கிறித்தவ மதத்தைத் தழுவியவர். ஆகவே யோகநாதன் கத்தோலிக்கப் பாடசாலையில் சேர்க்கப்பட்டார். கல்லூரியில் இவர் பெயர் ‘ஜோன்’ என்று எழுதப்பட்டது. பாடசாலையில் கிறித்தவ சமயமும் உறவினர் வீட்டில் சைவ சமயமும் ஆகிய இரு சமயங்களின் மீதும் பற்று கொண்டவர் ஆனார். இயேசுநாதரின் மலைப்பிரசங்கம் இவர் மனதில் ஆழப் பதிந்து மனம் ஆன்மிகத்தின்பால் திரும்பி யது. சமயங்கள் குறித்த சமநோக்கு சிறு வயதிலேயே அரும்பிவிட்டது. ஆனால் எட்டாம் வகுப்புடன் படிப்பு நின்றது.

மலைநாட்டில் வேலை செய்த சமயம் சிவனொளிபாதம் என்னுமிடத்தில் அதிகாலை வேளையில் சூரியோதத்தைக் கண்டு பரவசம் எய்திய யோகநாதன் மெய் மறந்த நிலையில் மெல்ல முணுமுணுத்தான் அல்லது பிரம்மத்தின் பேராற்றல் அவனைப் பேசவைத்தது. ‘இந்த உடம்பு சிவன் சொத்து. அவனே என்னில் நிறைந்து நானாய் ஆகி சிவனாய் நிற்கிறான்...நான் சிவம். நான் சிவம்’ அவ்வளவுதான். சிறுவன் சித்தன் ஆக வேண்டும் என்பது எப்போதோ முடிந்த காரியம்.

செல்லப்பா சுவாமிகளுடன் சந்திப்பு

யோகர் தனது 32-வது வயதில் நல்லூர்த் தேரடியில் செல்லப்பா சுவாமிகளைச் சந்தித்தார்.

செல்லப்பா சுவாமிகளை பக்தர் கூட்டம் மொய்த்தபடி இருக்கும். செல்லப்பா சுவாமிகள், கதிர்வேலுச்சாமி, யோகநாதன் மூவரும் சேர்ந்து ஒன்றுகூடிக் களிப்பர். சமையல் செய்வர். சமையல் முடியும் தருணம் சட்டிபானையை உடைத்து கைகொட்டிச் சிரிப்பர். கொழும்புத்துறை வளவில் இருந்த ஒரு கடையைத் திருத்தி, குடிசை ஒன்றை அன்பர் ஒருவர் கட்டிக் கொடுத்து சுவாமிகள் அதில் தங்குமாறு வேண்டினார். சுவாமிகள் தமது இறுதிக் காலம் வரை அக்குடிசையில் வாழ்ந்தார். சுவாமிகளைத் தேடி பெருங்கூட்டம் குடிசைக்கு முன்னால் தினந்தோறும் திரண்டது.

பலதரப்பட்ட மனிதர்கள் அவரைத் தேடி வருவார்கள். வாழ்வில் தாங்கள் அனுபவிக்கும் துன்ப துயரங்களுக்கு அவர் அருட்பார்வை தங்களின் மீது பட்டாலே போதும்; அவை தொலைந்து போகும் என்று நம்பினார்கள். சுவாமிகள் அன்பர்களோடு பேசிக் கலந்து ஆறுதல் அளிப்பதும் உண்டு. உனக்கும் எனக்கும் என்னடா வித்தியாசம்? நாங்கள் பிச்சைக்காரர்கள் தொந்தரவு செய்யாதே; ஓடு என்று ஏசிக்கலைப்பதும் உண்டு.

நிலையில்லாத வாழ்வியல் வளர்ச்சிக் காக அவரைத் தேடி வருவோரைப் பார்த்து ‘கடவுள் உங்களை வளர்க்கிறார். நீங்கள் கடவுளை வளருங்கள்’ என்று சொல்லி பெரிதாகச் சிரிப்பார்.

வலி எனும் வரப்பிரசாதம்

ஒரு முறை சுவாமிகள் கால் முறிவினால் யாழ்ப்பாண வைத்தியசாலையில் இருந்தபோது அடியார்கள் சென்று பார்த்தனர். ஐயோ வலிக்கிறதா? என்று வினவினர். அப்போது அவர் புன்னகையுடன் கூறினார்.

“வலி ஒரு வரப்பிரசாதம். கருமம் அநுபவித்தே முடியும். எனக்கும் இந்த உடம்புக்கும் எவ்வித தொடர்பும் இல்லை”.

சுவாமிகள் ஒரு சிறு பையனிடம் அவன் நலம் விசாரித்தார். ஆனால் அவன் பேசாதிருந்தான். பார்த்தாயா? அவன் செய்வது சரி. அவன் ஒன்றும் சொல்லவில்லை என்றார் சுவாமிகள்.

சாதாரண மக்களிடம் அவர்களுக்குப் புரிந்த எளிய மொழியில் உரையாடி அவர்களின் உள்ளங்களில் ஆழமான வேதாந்தக் கருத்துக்களை விதைத்த யாழ்ப்பாணச் சுவாமிகள் தமது 92-வது வயதில் 1964-ல் மறைந்தார்.

(தேடல் தொடரும்)

தொடர்புக்கு: thanjavurkavirayar@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x