Published : 05 Aug 2021 03:16 AM
Last Updated : 05 Aug 2021 03:16 AM
அன்புத் தாய் தன் பிள்ளைகளை நடத்துவது போலத்தான் இயேசு தம் சீடர்களைப் பரிவோடு பார்த்துக்கொண்டார். அவரது அழைப்பை ஏற்று, எல்லாவற்றையும் விட்டுவிட்ட, அவரையே எல்லாமுமாகக் கருதி, எப்போதும் அவரோடு இருந்தவர்கள் அவரின் சீடர்கள். எனவே ஒரு தந்தைக்குரிய பாசத்தோடும் தாய்க்குரிய பரிவோடும் இயேசு தம் சீடர்களைக் கவனித்துக் கொண்டார்.
இந்த பரிவும் அன்பும் பல விதங்களில் வெளிப்பட்டது. ஒரு சமயம் களைப்பின் மிகுதியால் படகின் ஒரு மூலையில் அமர்ந்த வண்ணம் இயேசு அயர்ந்து தூங்கியபோது, திடீரென காற்றும் புயலும் சீறியெழுந்து படகை அலைக்கழித்தன. சீடர்கள் அச்சம் மேலிட அவரை எழுப்பினார்கள். அவர் எழுந்து நின்று காற்றைக் கடிந்து கொண்டார். கடலை, தன் குழந்தையை அதட்டுவதுபோல அதட்டினார். அவை அடங்கின. அமைதி பிறந்தது.
இன்னொரு சமயம் மீன் பிடிக்கப் போன சீடர்கள் இரவெல்லாம் வலை வீசித் தேடியும் எதுவும் கிடைக்காத ஏமாற்றத்திலும் களைப்பிலும் சோர்ந்து போனார்கள். அந்தத் தருணத்தில் இயேசு வந்து நின்று, படகின் வலப்புறம் வலையை வீசச் சொன்னார். அவர்கள் அப்படியே செய்ததும் வகைவகையாய் எண்ணற்ற மீன்கள் வந்து வலையில் விழுந்தன.
ஒருமுறை இயேசு கரையில் அடுப்பு மூட்டி உணவு தயாரித்தார். இரவெல்லாம் மீன் பிடிக்க முயன்று களைத்துப்போய் வரும் சீடர்களை தாயைப் போன்று அன்போடு, "உண்ண வாருங்கள்" என்று அழைத்தார்.
இந்த நிகழ்வும் சீடர்கள் மீது இயேசுவுக்கிருந்த பரிவையும் அக்கறையையும் தெளிவாக வெளிப் படுத்தியது.
இயேசு அனுப்பிய சீடர்கள்
அவர் செய்ய விரும்பிய பணியை தனியொருவராய் அவரே செய்ய முடியாது என்பதனால் தானே சீடர்களை அழைத்துத் தன்னோடு அவர் சேர்த்துக் கொண்டார்? எனவே ஒரு சமயம் அவரது சீடர்களை இருவர் இருவராய் பல ஊர்களுக்கு அனுப்பினார். தான் செய்தது போன்றே இறையாட்சியை அறிவிக்கவும், நோயுற்றோரைக் குணப்படுத்தவும், தீய சக்திகளை விரட்டவும் அறிவுறுத்தி அவர்களை அனுப்பினார்.
சிறிது காலம் அப்பணியைச் செய்த சீடர்கள் திரும்பி வந்து பணி செய்யச் சென்ற ஊர்களில் தாங்கள் செய்தவற்றை எல்லாம் இயேசுவிடம் பகிர்ந்தார்கள். உழைத்து, களைத்துப் போய் வந்தவர்களுக்கு என்ன தேவை என்பதை உணர்ந்த இயேசு, "பாலை நிலத்தில் உள்ள தனிமையான ஓர் இடத்துக்குச் சென்று சற்று ஓய்வெடுங்கள்" என்றார். இயேசுவையும் அவரது சீடர்களையும் எண்ணற்ற மனிதர்கள் தேடி வந்து கொண்டே இருந்ததால் சீடர்களுக்கு உண்ணக்கூட நேரம் கிடைக்கவில்லை என்பதை அவர் அறிந்திருந்தார்.
ஓய்வு தேவை
தனிமையான ஓரிடத்தில் சீடர்களுக்கு ஓய்வைத் தவிர வேறு என்ன கிடைக்கும்? ஓய்வு அவசியம் என்பது இயேசுவுக்கு மட்டுமல்ல, அவரின் இறைத் தந்தைக்கும் புரிந்திருந்தது. பைபிளின் தொடக்க நூல் என்ன சொல்கிறது? உலகைப் படைக்க ஆறு நாட்கள் உழைத்த இறைவன் ஏழாம் நாள் ஓய்வு எடுத்தார் என்கிறது. இறைவனுக்கே ஓய்வு தேவை என்றால் அவர் படைத்த மனிதர்களுக்கு அது இன்றியமையாதது என்பதை எளிதில் புரிந்துகொள்ளலாம்.
இதனால்தான் ஓய்வு நாள் என்பது யூத மக்களுக்கு மிக முக்கியமான ஒன்றாக இருந்தது. வெள்ளிக்கிழமை மாலை கதிரவன் மறையும் நேரத்திலிருந்து சனிக்கிழமை மாலை கதிரவன் மறையும் வரை ஒரு நாள் முழுவதையும் ஓய்வு நாளாக அனுசரிப்பது கடவுள் அவர்களுக்குத் தந்த சட்டம் என்று அவர்கள் நம்பினர்.
ஓய்வு எடுப்பதற்கு மனிதர் யாவருக்கும் இறைவன் தந்த இயல்பான வழி ஆழ்ந்த தூக்கம். தூக்கமின்மையும் தூங்க இயலாமையும் உடல் நலத்தையும் மன நலத்தையும் மிகவும் பாதிக்கின்றன என்பதை அறிஞர்கள், மருத்துவர்கள் அனைவரும் ஒருமித்துச் சொல்லுகின்றனர்.
‘தங்கள் நிறுவனத்துக்காக உழைக்கும் பணியாளர்கள் அனைவரும் நன்கு உண்பது மட்டுமல்லாமல், நன்கு உறங்கினால்தான் அவர்கள் நலமோடு வாழ முடியும். அவர்கள் நலமோடு வாழ்ந்தால்தான், நமது நிறுவனம் நலமாக, வளமாக தொடர்ந்து இயங்க முடியும்' எனும் அடிப்படை உண்மையை மறந்து போகிற நிறுவனங்கள் இன்று நிறைய உள்ளன. தருகிற ஊதியத்தைச் சொல்லி, பின்னிரவிலும் கூட்டங்களில் பங்கேற்க வேண்டும், எந்த நேரத்தில் அழைப்பு வந்தாலும், அலைபேசியை எடுத்துப் பதிலளிக்க வேண்டும் என்பது போன்ற நிர்ப்பந்தங்களால் தூக்கத்தை இழந்து, அதனால் உடல் நலத்தையும், மன நலத்தையும் இழக்கும் நபர்கள் எத்தனை பேர்!
இயேசுவின் சீடர்களும் போதுமான தூக்கம் இன்றி துயரப்பட்டிருக்க வேண்டும். அவர்கள் உண்பதற்குக்கூட நேரம் கிடைக்கவில்லை என்பது பதிவு செய்யப்பட்டிருக்கிறது. உண்பதற்கே நேரம் கிடைக்காதபோது, உறங்க எங்கே நேரம் கிடைக்கும்?
தூக்கம் தவிர ஓரிடத்தில் கிடைக்கக்கூடியது தனிமை. தனிமை உணர்வு என்பது எதிர்மறையான ஒன்று என்று நாம் நினைக்கிறோம். ‘எனக்கென்று இங்கே யாருமில்லை. என்னோடு சிலர் இருந்தாலும் என் மீது உண்மையான அன்பும் அக்கறையும் யாருக்கும் இல்லை. எனவே நான் தன்னந்தனியாகவே இருக்கிறேன்' என்பது அழிவுக்கு இட்டுச் செல்லும் ஆபத்தான ஓர் எதிர்மறை உணர்வாகும். இதை ஆங்கிலத்தில் 'லோன்லினெஸ்' (loneliness) என்கின்றனர்.
ஆனால் இன்னொரு வகையான தனிமை இருக்கிறது. எப்போதும் பிறரோடு பேசிக்கொண்டே இருப்பதால், எப்போதும் பேச்சும் சத்தமும் சூழ்ந்து இருப்பதால் ஏற்படும் எதிர்மறை விளைவுகளைப் புரிந்து, நாமே தேடும் இதமான தனிமை ஒன்று இருக்கிறது. இதனை ஆங்கிலத்தில் ‘சாலிட்யூட்' (solitude) என்கின்றனர்.
அமைதியில் நடப்பது என்ன
கூச்சலும் சத்தமும் இல்லாத அமைதியான சூழலில் நிம்மதியாகவே இருக்க முடியாத சிலர் உள்ளனர். நிசப்தமும் அமைதியும் இவர்களை அச்சுறுத்துகின்றன. பேசவும் சத்தம் போடவும் ஆட்கள் இல்லை என்றால், இவர்கள் தொலைக்காட்சியை, வானொலியை, காணொலிகளைத் துணைக்கு அழைத்து இவை எழுப்பும் சத்தத்தில் நிம்மதி காண்கின்றனர். ஆழ்ந்த அமைதி சிலரை அச்சுறுத்துவதற்குக் காரணம் அந்தச் சூழல் நம்மையே நாம் எதிர்கொள்ள நிர்ப்பந்திக்கிறது. ஆட்கள் யாரும் இல்லாத வேளையிலும் எங்கும் இருக்கும் இறைவன் நம்மோடு இருப்பதால் அவரின் பிரசன்னத்தில் நம் வாழ்வை, நம் மனத்தை, நம் மனத்தின் இருளை, நம் பேச்சில் உள்ள கடுமையை, நம் செயல்களில் உள்ள கொடுமையை எல்லாம் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. இதில் இருந்து தப்பிக்கவே சிலர் அமைதியைத் தவிர்க்க முயல்கின்றனர்.
தனிமையில்தான் நம்மை நாம் எதிர்கொண்டு, நம்மில் உள்ள இருளை அகற்ற இறை ஒளியைத் தேட முடியும். எனவே “தனிமையான ஓர் இடத்துக்குப் போய் சற்று ஓய்வெடுங்கள்” என்பது இயேசுவின் சீடர்களுக்கு மட்டுமல்ல, நம் அனைவருக்கும் சொல்லப்பட்ட அறிவுரையாகவே நாம் கருதலாம்.
(தொடரும்)
கட்டுரையாளர், தொடர்புக்கு : majoe2703@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT