Published : 27 May 2021 03:10 AM
Last Updated : 27 May 2021 03:10 AM
திருடன், முரடன், பேராசைக்காரன் என்றெல்லாம் நினைத்து மக்கள் வெறுத்து ஒதுக்கிய செல்வந்தர் ஒருவரை இயேசு தன் முதல் சந்திப்பிலேயே முற்றிலும் புதிய மனிதராக மாற்றிய நிகழ்ச்சியை பைபிள் விவரிக்கிறது.
எரிக்கோ எனும் நகரத்தில் வாழ்ந்த செல்வந்தர் சக்கேயு. இயேசுவின் காலத்தில் பாலஸ்தீனத்தை ஆண்ட ரோமப் பேரரசுக்கு மக்களின் வரிப் பணத்தை வசூலித்துத் தந்தவர்களுக்கு இவர் தலைவராக இருந்தார். தங்களின் சொந்த இனத்து மக்கள் என்றும் பாராமல், அவர்களை அதட்டி, மிரட்டி, தர வேண்டியதைவிட அதிகமாகவே வற்புறுத்தி வசூலித்து, அரசுக்குத் தந்தது போக, மீதியைத் தங்களுக்கென்று வைத்துக்கொண்ட இவர்களை மக்கள் பாவிகள் என்று வெறுத்து ஒதுக்கியதில் வியப்பேதும் இல்லை.
எரிக்கோவுக்கு இயேசு வந்திருக்கி றார், அவர் இந்த வழியாக வருகிறார் என்பதை அறிந்துகொண்ட சக்கேயு, அவரைப் பார்க்க விரும்பினார். இயேசுவைச் சுற்றி பெருங்கூட்டம் ஒன்று இருந்தது. குட்டையாக இருந்த அவரால் கூட்டம் மறைத்த இயேசுவைப் பார்க்க முடியாது என்பதை உணர்ந்து, பாதையில் இருந்த ஒரு மரத்தில் ஏறி அமர்ந்துகொண்டார்.
குட்டையாக இருந்த தன் நிலையும், கூட்டம் நிறைந்த அந்தச் சூழலும் இயேசுவைப் பார்க்க விடாமல் தடுக்கின்றன என்பதை உணர்ந்து மரத்தில் ஏறிப் பார்க்கும் அளவுக்கு இயேசுவப் பார்க்கும் ஆவல் சக்கேயுவிடம் ஆழமாக இருந்தது.
தகுதி உண்டா
ஆனால் இயேசு தன்னைப் பார்ப்பாரா என்ற கேள்வி அவர் மனத்தில் நிச்சயம் இருந்திருக்கும். தன்னைத் தேடி வந்தோரில் யாரையும் ஒதுக்காமல், அவர்களின் நோய்களை நீக்கும் அளவுக்கு, எத்தனை பேர் இருந்தாலும் அவர்கள் பசித்திருந்த வேளையில் அத்தனைப் பேருக்கும் உணவு தரும் அளவுக்கு நல்லவராகவும், அற்புதங்கள் ஆற்றும் அளவுக்கு இறையாற்றல் பெற்ற வல்லவராகவும் திகழ்ந்த இயேசு பாவி என்று மக்கள் பழித்து ஒதுக்கும் என்னைப் பார்ப்பாரா? என்னிடம் எதுவும் பேசுவாரா? அதற்கான தகுதி எனக்கு உண்டா?... என்ற கேள்விகள் தந்த வலியோடுதான் சக்கேயு மரத்தில் அமர்ந்திருக்க வேண்டும்.
அவர் இருந்த மரத்தின் அருகே வந்து நின்று, இயேசு நிமிர்ந்து பார்த்து, மரத்தில் அமர்ந்தவாறு தன்னையே பார்த்துக் கொண்டிருந்த சக்கேயுவிடம், “சக்கேயு, விரைவாய் இறங்கி வாரும். இன்று உமது வீட்டில் நான் தங்க வேண்டும்” என்றார்.
‘நிமிர்ந்து என்னைப் பார்த்தார்! என் பெயர் சொல்லி என்னை அழைத்தார்! நான் அழைக்காமலேயே பாவியான என் வீட்டிற்கு தங்க வருவதாகச் சொல்கிறார்!' என்ற புரிதல் தந்த பேரானந்தத்தில் சக்கேயு விரைந்தோடிப் போய் தன் வீட்டுக்கு வந்த இயேசுவை வரவேற்றார்.
இதை பார்த்தோரில் பலர் “பாவியின் வீட்டுக்குப் போயி ருக்கிறாரே!” என்று முணுமுணுத்தனர். ஆனால், அவர்களில் யாருமே எதிர்பாராத அதிசயம் சக்கேயு வின் வீட்டில் இயேசு இருந்தபோது நடந்தது.
இருளில் தெரியாத அழுக்கெல்லாம் ஒளி அருகில் இருக்கும்போது தெரிவதுபோல, இயேசு எனும் பேரொளி தன்னைத் தேடி வந்து, தன் வீட்டில் தன் அருகில் இருந்த அந்த வேளையில் இதுவரை தான் வாழ்ந்த வாழ்வின் அவலத்தை எல்லாம் உணர்ந்த சக்கேயு எழுந்து நின்றார். “ஆண்டவரே, என் உடைமைகளில் பாதியை ஏழைகளுக்குக் கொடுத்து விடுகிறேன். எவர் மீதாவது பொய்க்குற்றம் சுமத்தி, எதையாவது கவர்ந்து இருந்தால், நான் அதை நான்கு மடங்காகத் திருப்பிக் கொடுத்துவிடுகிறேன்” என்று அறிவித்தார்.
வருங்காலத்து சக்கேயு எந்தவிதத்திலும் கடந்த காலத்து சக்கேயுவைப் போல் இருக்கப் போவதில்லை என்பது இந்தச் சம்பவத்தினால் உறுதியாகி விட்டது.
மனிதர்கள் மாற முடியுமா? நிஜமாக, முழுமை யாக மாற முடியுமா? முடியும் என்றால் எப்போது, எதனால் மாறுகிறார்கள்?... என்பது போன்ற கேள்விகளுக்கு எல்லாம் இயேசுவின் வாழ்வில் நடந்த இந்த நிகழ்ச்சியில் பதில் இருக்கிறது.
மனிதனில் மாற்றம் சாத்தியமா
புகழ்பெற்ற பிரெஞ்சு எழுத்தாளரான விக்டர் ஹியூகோ எழுதிய பிரபலமான நாவலின் பெயர் ‘லெ மிசராபிள்.' மேடையில், திரையில் என்று பல வடிவங்களை இந்த நாவல் எடுத்திருக்கிறது. இந்தக் கதையின் நாயகன் ஜீன் வால்ஜீன் என்கிற ஏழை இளைஞன். அவன் தன் விதவைச் சகோதரியின் பிள்ளைகள் பசியால் வாடுவதைப் பார்க்கப் பொறுக்காமல் ஒரு ரொட்டியைத் திருடி விடுகிறான். அதற்காக அவனுக்கு ஐந்தாண்டு கால சிறைத்தண்டனை கிடைத்தது.
சிறையிலிருந்து தப்பிக்க முயன்றது, காவலர்களை எதிர்த்தது… என்று தண்டனைக் காலம் கூடிக்கொண்டே போக, மொத்தம் பத்தொன்பது ஆண்டுகள் சிறையில் இருந்துவிட்டு வெளிவரும் ஜீன் வால்ஜீனுக்கு எங்குமே தங்க இடம் கிடைக்கவில்லை. அருட்பணியாளர்களின் தலைவரான ஆயர் அவன் மீது இரக்கம் கொண்டு, அவனை வரவேற்று, உணவு தந்து, அவர் இல்லத்திலேயே தங்க இடமும் தருகிறார். நள்ளிரவில் விழித்துக்கொண்ட ஜீன் வால்ஜீன் ஆயர் இல்லத்தில் இருந்த வெள்ளித் தட்டுகள், பாத்திரங்களைத் திருடிக் கொண்டு ஓடிவிடுகிறான்.
அவனைப் பிடித்த காவல்துறையினர் உண்மை என்னவென்று தெரிந்துகொள்ள ஆயர் இல்லத்திற்கு அவனை அழைத்து வருகிறார்கள். அவனிடமிருந்த வெள்ளிப் பாத்திரங்களைக் காட்டி விசாரிக்க, நடந்ததைப் புரிந்துகொண்ட ஆயர், அவையெல்லாம் தான் அவனுக்கு அன்பளிப்பாகத் தந்தவை என்கிறார். அவனைப் பார்த்து “இவற்றோடு சேர்த்து உனக்கு நான் கொடுத்த வெள்ளி மெழுகுதிரித் தாங்கிகளை எடுத்துச் செல்ல ஏன் மறந்துவிட்டாய்?” எனக் கேட்டு அவற்றையும் எடுத்து வந்து தருகிறார்.
அந்த அனுபவம் அவனை முற்றிலும் புதிய மனிதனாக மாற்றிவிடுகிறது. தங்களின் செயல்களை நினைத்து, நினைத்து மருகும் இத்தகைய மனிதர்களை வெட்கமும் குற்ற உணர்வுமே வாட்டி வதைக்கின்றன. மற்ற மனிதர்கள் இவர்களை ஏசி இகழும்போது, அல்லது கண்டிக்கவோ தண்டிக்கவோ முயலும்போது, வெறுக்கவோ ஒதுக்கவோ முயலும்போது மாறாதவர்கள் இவர்கள். இப்படிப்பட்டவர்கள், தம்மை ஏற்றுக்கொண்டு மாறாத அன்பைத் தரும் மனிதரைக் கண்டால் முற்றிலும் மாறி விடுகிறார்கள்.
நமக்குத் தெரிந்த யாராவது ஒருவர் மாற வேண்டும் என்று விரும்புவோர் எல்லாரும் புரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான உண்மை இது.
(தொடரும்)
கட்டுரையாளர், தொடர்புக்கு : majoe2703@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT