Last Updated : 01 Apr, 2021 03:15 AM

 

Published : 01 Apr 2021 03:15 AM
Last Updated : 01 Apr 2021 03:15 AM

இயேசுவின் உருவகக் கதைகள் 33: அமைதி ஏற்படுத்துவோர்

இயேசு மலை மீதமர்ந்து செய்த பிரசங்கத்தில் ஏழையரின் உள்ளத்தோர், இரக்கமுடை யோர்… பேறு பெற்றோர் என்றெல் லாம் சொல்லிய பின்னர், இப்படிச் சொன்னார். “அமைதி ஏற்படுத்துவோர் பேறு பெற்றோர். ஏனெனில் அவர்கள் கடவுளின் மக்கள் எனப்படுவர்.”

அமைதியைக் கெடுத்து, சண்டை, சச்சரவுகளை மூட்டி, பேரழிவுகளுக்குக் காரணமாக இருக்கும் மனிதர்கள் எல்லாச் சமுதாயங்களிலும் இருப்பதனாலேயே அமைதியை ஏற்படுத்துவோருக்கான அவசியம் இந்த உலகத்தில் தொடர்ந்து உள்ளது.

இப்படி அமைதியைக் கெடுத்து, சண்டை மூட்டுவோரில் இரு வகையினர் உள்ளனர். முதல் வகையினர், அகத்தில் அமைதி இல்லாதவர்கள். வாழ்க்கை அனுபவங்களால் சேதப்பட்டு, காயப் பட்டிருக்கும் நபர்கள் மனஅமைதியை இழந்து தவிக்கின்றனர். அமைதி இருக்க வேண்டிய மனத்தில் கோபமும் வெறுப்பும் பகையும் குடிவந்து விடுகின்றன. எனவே இவர்கள் போகும் இடமெல்லாம், வாழும் இடமெல்லாம் இவர்களின் மனம் போன்றே அமைதி இல்லாத, பகை நெருப்பு அணையாத, சண்டை ஓயாத இடங்களாக மாறி விடுகின்றன.

பகை நெருப்பில் குளிர்காய்பவர்கள்

அமைதியைக் கெடுத்து சண்டை மூட்டுவோரில் இரண்டாவது வகையின ருக்கு இந்த உளவியல் பிரச்சினை இல்லை. ஆனால் இவர்கள் தன்னலமும் பேராசைகளும் மிக்க ஆபத்தான மனிதர்கள். இவர்கள் வேண்டுமென்றே தன்னல நோக்கங்களுக்காக அமைதி யைக் கெடுத்து, சண்டை சச்சரவுகளை மூட்டி, எரியும் பகைநெருப்பில் குளிர் காய்பவர்கள்.

‘சமுதாயத்தில் அமைதி நிலவினால் எனக்கு என்ன இலாபம்? எனக்கு வேண்டும் என்று நான் ஏங்குபவை எனக்குக் கிடைக்க வேண்டுமானால், மக்கள் ஒன்றுபட்டு, ஒற்றுமையாய் இருக்கும் நிலை மாறி, பிரிந்து, பிளவுபட்டு சண்டையிட வேண்டும். இதுவரை யாரைத் தங்கள் சகோதரர்களைப் போலக் கருதி, நட்பு பாராட்டி ஒன்றுபட்டு வாழ்ந்தார்களோ, அவர்களையே பகைவர் களாக நினைக்கும் நிலை வந்துவிட்டால், இவர்களின் ஆதரவாளன், பாதுகாவலன் என்று காட்டிக் கொள்ளும் என்னை ஆதரிப்பார்கள்’ என்னும் மனநிலையே இவர்கள் செயல்களைத் தீர்மானிக்கிறது.

இதனால் தான், அமைதி ஏற்படுத்து வதைத் தங்கள் கடமையாகக் கருதும் நல்லவர்கள் எந்தச் சமுதாயத்திற்கும் மிக அவசியமானவர்களாக ஆகி விடுகின்றனர்.

இப்படி அமைதி ஏற்படுத்துவோரை கடவுளின் மக்கள் என்று இயேசு அழைப்பது ஏன்?

தந்தையைப் போல மகன்

தந்தையைப் போலத் தானே மகளும் மகனும் இருப்பார்கள்? இவர்கள் அமைதியை நாடி, அதன் அவசியத்தை உணர்ந்து, அதனை நிலைநாட்ட உழைப்பதற்குக் காரணம், நம் எல்லாருக்கும் தந்தையான கடவுளின் உள்ளத்தை அவர்கள் அறிந்தவர்கள். மனிதர்கள் அனைவரும் கடவுளின் பிள்ளைகள் என்றால், தன் பிள்ளைகள் அனைவரும் ஒற்றுமையாய், சகோதர, சகோதரிகளாய் வாழ வேண்டும் என்று தானே கடவுள் விரும்புவார்?

எனவேதான், இவர்கள் கடவுளின் மனத்தை உணர்ந்து, அவரின் விருப்பத்தை நிறைவேற்றப் பாடுபடும் அவரது தனிப்பட்ட அன்பிற்குரிய மக்களாகின்றனர். எங்கிருந்தாலும் அமைதியை ஏற்படுத்தி, கடவுளின் மக்கள் என்று அழைக்கப்படும் பேற்றினைப் பெற விரும்புவோர் எங்கிருந்து அந்த வேலையைத் தொடங்க வேண்டும்?

ஒவ்வொருவரும் தங்கள் மனத்திலிருந்து தான் அதைத் தொடங்க வேண்டும். தங்கள் மனத்தில் அமைதி ஏற்படுத்த முடியாதோர் எப்படி தாங்கள் வாழும் இடங்களில் அமைதி ஏற்படுத்த முடியும்?

மனத்தில் அமைதி பெறுவதற்கான வழிகளை இயேசு இதே மலைப் பிரசங்கத்தில் தெளிவுபடச் சொல்லி யிருக்கிறார். கோபத்தைக் கட்டுப் படுத்துவதன் அவசியத்தை உணர்த்த, “சினங்கொள்வோர் தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாவர்” என்றார். சொல் சார்ந்த வன்முறை தான் பல சண்டைகளின் தொடக்கம் என்பதால், “முட்டாளே, அறிவிலியே என்று சக மனிதர்களைப் பழிப்போருக்கு கடும் தண்டனைகள் உண்டு” என்றார். “பிறர் குற்றவாளிகள் என எளிதில் தீர்ப்பிட வேண்டாம்” என்றார். “பழிவாங்கும் எண்ணத்தை விரட்டி விட்டு, பகைவர்களுக்கு அன்பு காட்டுங்கள்” என்றார். மனத்தில் தொடங்கி, தெருவில் முடிகிற மோதல் களைத் தவிர்க்க கருத்துவேறுபாடுகள் உள்ளோரிடம் சமரசம் பேசி, உடன்பாடு செய்து கொள்ளுங்கள் என்றார்.

ஆலயத்தில் செய்யப்படும் வழிபாடு கூட சமுதாயத்தில் அமைதிக்கு உதவ முடியும் என்பதை உணர்த்த, “உங்கள் காணிக்கையைச் செலுத்த ஆலயத்திற்கு வரும் போது, உங்கள் சகோதரர், சகோதரிகள் எவருக்காவது உங்கள் மேல் ஏதோ மனத்தாங்கல் இருப்பது நினைவுக்கு வந்தால், காணிக்கையை ஆலயத்திலேயே வைத்து விட்டு, அவரைத் தேடிச் சந்தித்து, நல்லுறவு ஏற்படுத்திக் கொள்ளுங்கள். அதன்பின்பு ஆலயத்திற்குத் திரும்பி வந்து உங்கள் காணிக்கையைச் செலுத்துங்கள்” என்று சொன்னார் இயேசு.

நீதிதான் அமைதி

உள்ளத்தில் அமைதி கொண்டோர் தங்கள் இல்லத்திலும் பணியகங்களிலும், தங்கள் ஊரிலும் உலகிலும் அமைதி ஏற்படுத்த உழைப்பார்கள். நீதிதான் அமைதிக்கு அடித்தளம் என்பதை அவர்கள் புரிந்துகொள்கிறார்கள். எனவே அநீதி இருக்கும் இடங்களில் தான் அமைதி பறிபோய் விடுகிறது என்பதை உணர்ந்து கொண்டு, அநீதியை எதிர்த்துப் போராடி, நீதியை நிலை நாட்ட முயலுவார்கள். நீதி ஜெயித்தால் அமைதி தானா கவே வந்துவிடும் என்பதை இவர்கள் அறிந்துள்ளனர்.

இவர்களின் எண்ணிக்கை பெருகி, இவர்களது உழைப்புக்குப் பயன் கிடைத்தால் அமைதி தரணி எங்கும் கோலோச்சும்; அமைதி கொழிக்கும்; சமுதாயத்தில் கல்வி செழிக்கும்; கலைகள் வளரும்; வளங்கள் பெருகும்; வளர்ச்சியும் முன்னேற்றமும் வாய்க்கும்.

(தொடரும்) கட்டுரையாளர், தொடர்புக்கு : majoe2703@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x