Published : 18 Mar 2021 03:14 AM
Last Updated : 18 Mar 2021 03:14 AM
கட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள் பத்தொன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த மகான். கட்டிக்குளம் என்ற கிராமம் மானாமதுரைக்கு அருகில் உள்ளது. அக்காலத்தில் ராமேஸ்வரம் செல்லும் பக்தர்கள் இந்த ஊரில் தங்கிச் செல்வது வழக்கம். சாதுக்களும், ஞானிகளும், தேசாந்திரிகளும் தங்குவதற்காகவே இந்த ஊரில் ஏராளமான மடங்கள் இருந்தன.
சுவாமிகளின் பெற்றோருக்கு மட் பாண்டம் செய்வது பரம்பரைத் தொழில். சாதுக்களுக்கும், சந்நியாசிகளுக்கும் உணவு படைத்து உபசரிப்பதில் அவர்கள் குடும்பத்தினருக்கு ஆர்வம் இருந்தது. சிறுவனாக இருந்தபோதே மாயாண்டிக்கு ஆன்மிக நாட்டம் ஏற்பட இதுவே காரணமாக அமைந்தது.
வீட்டில் பரம்பரைச் சொத்தாக இருந்த வைத்திய நூல்கள், சித்தாந்த கிரந்தங்கள் பனை ஓலைச்சுவடிகளில் எழுதப்பட்ட சித்தர்களின் விந்தைப் பாடல் சுவடிகள் எல்லாவற்றையும் மாயாண்டி வியந்தும் விரும்பியும் வாசித்தான். மனசுக்குள் புதிய வெளிச்சம் புகுந்தது. காரணம் புரியாத களிப்பு உண்டாயிற்று. அவன் கால்கள் தாமாக கோயில்களை நோக்கி நடந்தன. கோயில்களின் தீப ஒளிச்சுடர்களில் அந்தகார இருட்டு பிரகாசித்தது. சிலைகளின் மெளனம் சிறுவனை ஆட்கொண்டது.
மாயாண்டியின் மனசுக்குள் நிகழும் மாற்றத்தை அறியாத பெற்றோர் அவனுக்கு மணமுடித்து வைத்தனர். வந்ததை சிவன் தந்தது என்று ஏற்றார் மாயாண்டி. உலகியலில் ஒட்டியும் ஒட்டாமலும் வாழத் தொடங்கினார். இரு குழந்தைகள் பிறந்தன. கோயில் வழிபாடு, தீர்த்த யாத்திரை, திருத்தலங்கள் செல்வது என்று அவரை அகத்தேடல் இழுத்துச் சென்றது.
பக்தியில் தோய்ந்த மனைவிக்கு கணவரின் மனப்போக்கு பிடித்தி ருந்தது. இல்லாவிட்டால் பழனி யாத்திரை செல்ல பணமில்லாமல் தவித்த மாயாண்டிக்கு கழுத்தில் அணிந்திருந்த நகைகளைக் கழற்றிக் கொடுப்பாரா? இல்லற வாழ்விலிருந்தும் தன்னை கழற்றித் தருமாறு மாயாண்டி கேட்டதைத்தான் மனைவியால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. மனைவி மட்டுமல்ல, உற்றார் உறவினர் எல்லோரும் அவரைச் சூழ்ந்துகொண்டு அவர் வெளியேற விடாமல் தடுத்து அவர் அணிந்திருந்த ஆடையைப் பற்றி இழுத்தனர். ஆடைகளை உதறிவிட்டு வெற்றுடம்போடு அவதூதராக நடந்தார் மாயாண்டி சுவாமிகள்.
செல்லப்ப சுவாமிகளிடம் தீட்சை
எந்த ஊரில் மலைகளைப் பார்த்தாலும் அங்குள்ள குகைகளில் தவத்தில் ஒடுங்குவார். இவரது யாத்திரை கன்னியாகுமரியில் இருந்து இமயம் வரை நீண்டது. சூட்டுக்கோல் செல்லப்ப சுவாமிகளிடம் தீட்சை பெற்றார். செல்லப்ப சுவாமிகள், தாம் மன்னர்முடி இராமலிங்க சுவாமிகளிடம் பெற்ற சூட்டுக்கோலை மாயாண்டி சுவாமிகளுக்கு அளித்து தமது சீடராக எற்றுக்கொண்டார். ஏழை படும் பாட்டைக் கண்டு மனமிரங்கி அவர் களுக்கு உதவிசெய்வது சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகளின் சுபாவம்.
ரொட்டி மடம்
ஒரு முறை ஊர் ஊராகச் சுற்றி வந்தபோது கூடத்துப்பட்டி என்ற குக்கிராமத்தில் மக்கள் பசியால் வாடினர். அவர்களிடம் மாவு வாங்கி ரொட்டிகள் செய்து கொடுத்தார் மாயாண்டி சுவாமிகள். மறுநாள் அவர்களின் பசிபோக்க மாவு இல்லை. ஆனால் சுவாமிகள் அங்கிருந்த மண்ணை எடுத்துப் பிசைந்து ரொட்டி சுட்டுக் கொடுத்தாராம். சுவாமிகள் கொடுத்த ரொட்டியை வாங்கிச் சாப்பிட்ட கிராமமக்கள் பசி தீர்ந்தனர். நன்றிக் கடனாக சுவாமிகள் பெயரில் மடம் கட்டி ஆடித்திருவிழாவின்போது பக்தர்களுக்கு சுவாமி ரொட்டி சுட்டுக் கொடுத்ததன் நினைவாக ரொட்டி பிரசாதமாக கொடுத்தனர். அம்மடத்திற்கு ரொட்டி மடம் என்றே இன்றளவும் பெயர் வழங்குகிறது.
ராமநாதபுரம் மன்னர் பாஸ்கர சேதுபதி சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகளின் பரமபக்தராக இருந்தார். அடிக்கடி சுவாமிகளை அரண்மனைக்கு அழைத்து விருந்தளித்து உரையாடு வது வழக்கம். ஒரு முறை அரண் மனையில் பெரிய விருந்துக்கு ஏற்பாடாகியிருந்தது. குறித்த நேரத்தில் வந்துவிடும் வழக்கமுடைய சுவாமிகள் அன்று வெகுநேரம் வரவில்லை. மிகவும் தாமதமாக அரண்மனைக்கு வந்து சேர்ந்தார். மன்னருக்கு மனக் குறை உண்டாயிற்று. ஏன் தாமதம் எல்லோரும் காத்திருக்கும்படி ஆயிற்றே என்றார் வருத்தம் தோய்ந்த குரலில்.
வரும் வழியில் ஒரு சேரிப் பெண்மணி என்னை அழைத்துக் கூழ் கொடுத்தாள். அதை உண்டு சேரி மக்களின் அன்பில் ஈடுபட்டு நெடுநேரம் இருந்துவிட்டேன் என்று அமைதியாக கூறினார் மாயாண்டி சுவாமிகள். சூட்டுக்கோலால் சூடு போடாமலே அங்கிருந்தோருக்கு சுரீர் என்றது.
மனநோயாளிக்கு மருந்து
கருங்குளம் என்ற ஊரில் பட்டணத்துப்பிள்ளை என்பவருக்கு மனநலம் பாதிக்கப்பட்டி ருந்தது. ஊராரும் உறவினரும் அவர் கைகால்களுக்கு விலங்கு பூட்டி ஓர் அறையில் அடைத்திருந்தனர். இதைத் தெரிந்துகொண்ட சுவாமிகள் நேராக அவருடைய வீட்டுக்குச் சென்றார். வீட்டார் சுவாமிகளை தடபுடலாக வரவேற்றனர்.
ஒரு தட்டில் சோறு கொண்டு வருமாறு செய்து தானும் சாப்பிட்டு பட்டணத்துப் பிள்ளைக்கு ஊட்டிவிட்டார். அவர் முதுகைத் தடவி உச்சிமுகர்ந்தார். அதுவரை உம்மென்றிருந்த அந்த மனநோயாளி புன்னகைத்தார். கைவிலங்கு, கால் விலங்குகளைக் கழற்றி அவரை விடுவித்த சுவாமிகளின் காலில் விழுந்து கண்ணீர் விட்டார் பட்டணத்துப் பிள்ளை.
இப்படிப்பட்டவர்களுக்கு மருந்து அன்பு மட்டுமே. இவர்களை விலங்கிட்டு வைக்காதீர்கள் அரவணைத்துக் கொள்ளுங்கள் என்று கூறிவிட்டுச் சென்றார் மாயாண்டி சுவாமிகள்.
சாதிபேதமற்ற சன்மார்க்க நெறி
மதுரை மூக்கையா சுவாமிகள், வேலம்மாள், முத்து மாணிக்கம் சுவாமிகள், மலையாச்சி, குந்தம்மாள், நரிவள்ளிமடம் ராகசாமி, சிந்துபடி அம்மாள், அன்னத்தாச்சி ஆகிய அருட் செல்வர்கள். சோமப்பா சுவாமிகள், திருமுருக கிருபானந்த வாரியார், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஆகியோர் இவரது அருள் பெற்று இவரால் அடையாளம் காணப் பட்டவர்கள்.
இவருக்கு சிங்கப்பூர், பர்மா முதலான தேசங்களிலும் பக்தர்களும் இவர் பெயரில் மடங்களும் இருந்தன. சுவாமிகள் பயன்படுத்திய சூட்டுக்கோலை இன்றும் திருப்பரங் குன்றத்துக்கு அருகில் உள்ள திருக்கூடல் மலையில் அவரது ஜீவ சமாதியில் காணலாம். செப்பால் ஆனது இந்தக்கோல். தீயோரைச் சுடும், நல்லோரைக் காக்கும் என்ற பக்தர்களின் நம்பிக்கையில் இது இன்றளவும் தகதகக்கிறது.
(தேடல் தொடரும்) கட்டுரையாளர், தொடர்புக்கு : thanjavurkavirayar@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT