Published : 18 Feb 2021 03:18 AM
Last Updated : 18 Feb 2021 03:18 AM
நூற்றியெட்டு முறை தாயாருக்குத் தோப்புக்கரணம் போட்டு வணங்கிய பின்னர் அன்றாட அலுவல்களைக் கவனிப்பது வல்லநாட்டு சுவாமிகள் என்று அழைக்கப்பட்ட சாது சிதம்பர சுவாமிகளின் வழக்கம். வறுமை காரணமாக மூன்றாம் வகுப்போடு படிப்பு நின்றது. வல்லநாடு மலையின் யானைக் காட்டில் ஆடு மேய்க்கத் தொடங்கினார். ஆடுகளோடு ஏற்பட்ட நட்பு அங்கே அலைந்த பிற உயிரினங்கள் மீதும் படர்ந்தது.
அந்தப் பகுதியில் இருந்த கருநாகத்தை இவர் தம் நண்பராகவே கருதினார். இருவரும் ஒரே கலயத்தில் உணவு அருந்துவது வழக்கம். அவரோடு ஆடு மேய்த்த நண்பர்கள் ஊரெல்லாம் இதைப் பற்றிச் சொல்லிவிட, இவரைக் கண்டு அதிசயமும் எதிர்காலம் குறித்த அச்சமும் பெற்றோருக்கு உண்டாயிறறு.
ஒருநாள் மலைமீது நடமாடிய சித்தர் ஒருவர், இவரை அழைத்து உப தேசித்து சிறுவனின் அகக் கண்ணைத் திறந்துவைத்தார். இல்லறத்தில் தங்கள் பிள்ளையை ஈடுபடுத்துவதற்குப் பெற்றோர் மணமுடித்து வைத்தனர். முதல் நாள் இரவே வீட்டை விட்டு வெளியேறி னார். மனைவியாக வாய்த்த பெண்ணும் கணவரைப் பின்தொடர்ந்தார். கணவன் ஈடுபட்டிருந்த ஆன்மிகப் பணியில் தன்னையும் ஈடுபடுத்திக்கொண்டார்.
யாசகம் எடுத்தார்
சுவாமிகள் அன்னக்காவடி எடுத்து, அவ்வாறு பெற்ற உணவை ஏழைகளுக்கு வழங்கினார். பெரிய குடும்பத்தைச் சேர்ந்த பிள்ளை பிச்சை எடுப்பதை, அவர் சமூகத்தினர் எதிர்த்தனர். சுவாமிகளின் அன்னக்காவடி இதற்கெல்லாம் அசைந்துக் கொடுக்கவில்லை. சுவாமி களைக் கொலைசெய்ய முயன்றனர். அதற்கு முன்னரே தன் உடலை எட்டுத் துண்டுகளாக்கிப் போட்டு நவயோகத்தில் இருந்தார் சுவாமிகள். ஊரார் இதைக் காண வந்தபோது, சுவாமிகள் குளித்துவிட்டு வந்ததுபோல் புன்சிரிப்புடன் அவர்களை வரவேற்றார்.
வல்லநாட்டு சுவாமிகள் என்ற பெயரில், வள்ளலாரின் ஜோதி வழிபாட்டில் தன்னை மறந்தார். குறுக்குத்துறை அமாவாசி பரதேசி இவரை அண்டி முக்திநிலை பெற்றார்.
எரிப்பது தவறு. சமாதியே சரி என்பது இவர் கருத்து. ஞானி மாதவானந்தா, ஐந்நூறு வயதுக்குமேல் வாழ்ந்ததாகக் கூறப்படும் யோகி சடை நஞ்சப்ப சுவாமிகள் போன்ற மகான்கள் இவரால் நிர்விகல்ப சமாதி அடைந்தனர்.
வல்லநாட்டு மலையில் தொடங்கிய வாசனை சுவாமிகளைத் தொடர்ந்தது. பொதிகை மலையில் வாழ்ந்ததாகக் கருதப்படும் வெள்ளை யானையுடன் நட்பாக இருந்தார். சதுரகிரி மலையில் வாழ்ந்த ஒற்றைக் கொம்பன் யானை, இவருக்கு உயிர் நண்பனாக இருந்தது. இந்தத் தெய்விக யானைகளின் உதவியோடு யோக நிலையின் பலபடிகளை அவரால் ஏற முடிந்திருக்கிறது.
பசித்தோரின் முகம் பார்
தம் காலில் பிறர் விழுவதைத் தடுப்பார். மீறி விழுந்து வணங்குவோர் கால்களில் தாமே விழுவார். பரம்பொருளைப் பார்க்க வேண்டுமெனில் பசித்தோர் முகம் பார் என்பது இவர் வாக்கு. ஏழைகளின் பசியாற்றுவதி லேயே எப்போதும் நாட்ட முடையவராக இருந்தார்.
ஊரைவிட்டு வெளியேறி காடுகளிலும் மலைகளிலும் கற்சிலைபோல் வீற்றிருப்பார். சதுரகிரி மலையில் இவர் அடிக்கடி உலவினார். அங்கு மதம் பிடித்த யானை ஒன்று இருந்தது. அந்த யானைக்கு இவரைப் பிடித்தது. சுவாமிகள் எப்போதும் சதுரகிரிக்கு சென்றாலும் அந்த யானை இவரைப் பார்க்க வரும். அது இறந்த பின்னர், யானையின் தலையை மட்டும் தனக்குத் தருமாறு பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் ஒரு விசித்திரமான வேண்டுகோளை முன்வைத்தார். அந்தத் தலையைக் கொண்டுவந்து பாறைக் காட்டில் உள்ள தனது தியான மடத்தில் வைத்து பூசை செய்துவந்தார் சுவாமிகள்.
இன்றும் அங்கே அந்தத் தலை இருப்பதாகவும் அந்தத் தலையைத் தொடும்போது அதில் ஓடும் சிலிர்ப்பை உணரமுடிவதாகவும் கூறப்படுகிறது. மணிகண்டன் என்ற மற்றொரு யானை நண்பனுக்கும் வல்லநாட்டு சித்தர் பீடத்தில் சமாதி உள்ளது.
வேட்டி, துண்டு அணிந்த எளிய தோற்றத்துடன் அடிக்கடி தலையை மொட்டையடித்துக்கொண்டு காட்சியளித்தார் வல்லநாட்டு சுவாமிகள். மண் சட்டியில்தான் சோற்றைப் பிசைந்து உண்ணுவார். எங்கு சென்றாலும் அங்கே துண்டை விரித்து உட்கார்ந்துகொள்வார். அவரிடம் மருந்து பெற்று குணமான நோயாளிகள், பணம் தர முற்பட்டால், பசித்தவனுக்குக் கொடு என்பார். ஏர்வாடியைச் சேர்ந்த முகமதியப் பெண் ஒருவர் தீராத வயிற்றுவலியால் அவதிப்பட்டார். சாப்பிடக்கூட முடியாத அவரைத் தமது அன்னதானத்தில் வந்து உண்ணுமாறு கூறினார் சுவாமிகள். அந்தப் பெண் சோற்றில் கைவைத்ததும் பசித்தது. அள்ளி அள்ளி உண்டார் அந்த முகமதியப் பெண்.
ஒரே வேளையில் பல இடங்களில் அவரைத் கண்டிருக்கிறார்கள். வல்லநாடு சித்தர் சாது சிதம்பர சுவாமி பீடத்தில் விளக்கொன்று எப்போதும் எரிந்துகொண்டிருக்கிறது.
அது அன்பெனும் விளக்கு. ஜீவ காருண்ய விளக்கு. அது அணையா விளக்கு.
(தேடல் தொடரும்)
கட்டுரையாளர் தொடர்புக்கு: thanjavurkavirayar@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT