Published : 15 Oct 2020 08:54 AM
Last Updated : 15 Oct 2020 08:54 AM
நம் தேவைகளுக்குப் போக மிகுதியான பணத்தை வைத்து நாம் செய்யக்கூடிய ஒரே நல்ல காரியம் என்ன என்பதை விளக்க இயேசு ஒரு கதை சொன்னார்.
ஒரு செல்வந்தருக்கு வலதுகையாக வியாபாரத்தையும் வரவு செலவுகளையும் நிர்வகிக்கும் பொறுப்பாளர் இருந்தார். அவர், நேர்மையின்றிச் செயல்பட்டதாக செல்வந்தர் ஒருநாள் உணர்ந்தார். கணக்கை யெல்லாம் ஒப்படைத்துவிட்டு நீ புறப்படலாம் என்று செல்வந்தர் சொல்ல, வீட்டுப் பொறுப்பாளருக்கோ பெரும் அதிர்ச்சி.
இந்த வேலை போய்விட்டால் எப்படிப் பிழைப்பது என்று அந்த ஆள் கவலையுடன் யோசித்தார். ‘வயலில் வேலை செய்ய என் உடம்பில் தெம்பில்லை. பிச்சை கேட்டுப் பிழைத்துக்கொள்ள என் மனதில் தெம்பில்லை. இந்த வேலையை விட்டுவிட்டு நான் புறப்படும்போது, பிறர் என்னை வரவேற்று தங்கள் வீடுகளில் தங்க அனுமதித்து, என்னை உபசரிக்க வேண்டும். அதற்கு ஒரு வழிதான் இருக்கிறது’ என்று யோசித்து செல்வந்தரிடம் கடன் வாங்கியிருந்த நபர்களை வரவழைத்தார். அவர்கள் வாங்கிய கடனைப் பற்றி விசாரித்தார்.
“நூறு குடம் எண்ணெய் கடன் வாங்கியிருக்கிறேன்” என்று சொன்னவரிடம், “ஐம்பது குடம் என்று மாற்றி எழுது” என்றார். “நூறு மூடை கோதுமைக் கடன் வாங்கியிருக்கிறேன்” என்றவரிடம், “எண்பது மூடை என்று திருத்தி எழுது” என்றார்.
செல்வந்தரிடம் கடன்பெற்றவர்கள் எல்லாம் நிர்வாகியை வாழ்த்திச் சென்றனர்.
ஏற்கெனவே நேர்மையின்றி நடந்து, ஊழல் செய்ததால் வேலையை இழக்கப்போகிற நிர்வாகி, வேலை பார்க்கும் கடைசி நாள்களிலும் ஆவணங்களை, பதிவுகளை மாற்றி தில்லுமுல்லு செய்தார். இவரை ‘நேர்மையற்றவர்’ என்று தெளிவாகச் சொல்லும் இயேசு, செல்வந்தர் முன்ஜாக்கிரதையுடன் செயல்பட்டதை மட்டும் பாராட்டிக் கதையை முடிக்கிறார்.
நிகழப் போவது என்ன என்பதை முன்பே உணர்ந்து, தன்னைக் காத்துக்கொள்ள என்னென்ன செய்ய வேண்டுமோ, அதை இப்போதே செய்வதுதான் முன்ஜாக்கிரதை.
நல்லோரைவிட தீயோரே முன்மதியுடன் செயல்படுகிறார்கள் என்ற உண்மையைச் சொன்ன இயேசு, பணத்தை முன்மதியுடன் கையாள்வது எப்படி என்பதை விளக்கினார். “நேர்மையற்ற செல்வத்தைக் கொண்டு உங்களுக்கு நண்பர்களைத் தேடிக்கொள்ளுங்கள்.” என்றார்.
நிகழப்போவது என்ன?
நம்மிடம் மிகுதியாக உள்ளதை இல்லாதோருக்குக் கொடுத்தால், நம்மீது அவர்கள் நன்றியுணர்வு கொண்ட நண்பர்களாக ஆகி விடுவார்கள் அல்லவா?
நிகழப்போவதை உணர்ந்து, அது நிகழும்போது நமக்கு நல்லதே நடக்கும் விதத்தில் இப்போதே செயல்படுவதுதானே முன்மதி? நிகழப் போவது என்ன? இறுதியில் நம் அனைவரின் வாழ்வும் ஒருநாள் முடியும். அதன்பிறகு நம் பணத்தைக் கொண்டு எதுவும் செய்ய இயலாது. அதனால், பணத்தை இப்போதே ஏழை, எளிய மனிதருக்குக் கொடுத்தால் - அமைதியையும் ஒற்றுமையையும் மனிதநேயத்தையும் மேம்படுத்தும் நல்ல காரியங்களுக்காகக் கொடுத்தால் - இவ்வாழ்வு முடிந்து, நாம் வானகம் சேரும்போது நம்மால் நலம் பெற்ற, வளம் பெற்ற, வாழ்வு பெற்ற மனிதரெல்லாம் நம்மை வரவேற்கக் காத்திருக்கும் நண்பர்களாக இருப்பார்கள் என்பதையே இக்கதையின் மூலம் இயேசு சொல்ல விழைந்தார்.
“இதுவரை நானும் என் மனைவியும் உழைத்துச் சேர்த்த பணத்தையெல்லாம் உலகெங்கிலும் நடைபெறும் மக்கள் நலப் பணிகளுக்காக, விலங்குகளைக் காக்கும் முயற்சிகளுக்காக வழங்கிவருகிறோம். சாகும் முன் எங்களிடம் உள்ளதையெல்லாம் கொடுத்துவிட்டு, வெறும் கைகளுடன் சாக விரும்புகிறேன்” என்று அறிவித்த அரிய மனிதர் ஃபிலிப் வாலன். இந்தியாவில் பெங்களூருவில் பிறந்து வளர்ந்து, பின்பு ஆஸ்திரேலியாவில் குடியேறி, அங்கு வாழும் இம்மாமனிதரை மேனகா காந்தி ‘வேறு கோளில் இருந்து இப்பூமிக்கு வந்துள்ள வான தூதர்’ என்று ஒருமுறை புகழ்ந்தார்.
“எல்லாவற்றையும் கொடுத்து விட்டு, வெறும் கையுடன் சாக விரும்புகிறேன்” என்பது மிகுதியான பணத்தைக் கையாள்வதில் உள்ள முன்மதி. இல்லாதோருக்கும் நல்ல காரியங்களுக்கும் இங்கே நாம் கொடுக்கக் கொடுக்க மறுஉலகில் அழியாச் செல்வத்தைச் சேர்த்துவைக்கிறோம்.
முன்மதியாளர்களா நாம்?
(தொடரும்)
கட்டுரையாளர், தொடர்புக்கு: majoe2703@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT