Published : 24 Sep 2020 08:51 AM
Last Updated : 24 Sep 2020 08:51 AM

சித்திரப் பேச்சு: கம்பீர கங்காதரர்

ஓவியர் வேதா

ஒயிலாக இடுப்பில் கைவைத்துகொண்டு எழிலுடனும், கம்பீரமாகவும், ஆறரை அடி உயரத்தில், புடைப்புச் சிற்பமாகக் காட்சியளிக்கிறார் கங்காதரர்.

இந்தச் சிற்பம் புதுக்கோட்டை மாவட்டம் திருகோகர்ணம் , ஸ்ரீ பிரகதாம்பாள் சமேத ஸ்ரீ கோகர்ணேஸ்வரர் ஆலயத்தில் உள்ளது. இந்தக் கோயில் பல்லவர்கள் பாணியில் ஒரே கல்லில், கர்ப்பக்கிரகம், அர்த்த மண்டபம், தூண்களுடன் சேர்த்துக் குடையப்பட்டுள்ளது.

ஸ்ரீ கோகர்ணேஸ்வரரை வணங்க நுழையும்போது இடதுபுறம் விநாயகர் சி ற்பமும் வலதுபுறம் கங்காதரர் சிற்பமும் உள்ளன. சிலையின் வலது கரம் கீழ் நோக்கி உள்ளங்கையைக் காட்டியபடி சின்முத்திரையுடன் காட்சியளிக்கிறது. வலது மேல்கரத்தில் ஜெபமாலை உள்ளது.

இடது மேல்கரம் ஜடாமுடியைப் பிடித்தபடி வேகமாகப் பாய்ந்து வரும் கங்கையை தாங்கிப் பிடிக்கத் தயாராக உள்ளதுபோல் அமைக்கப்பட்டுள்ளது. இடது கீழ் கரத்தை, வளைந்த இடுப்பின் மீது ஒயிலாக வைத்தபடி காட்சி தருகிறார்.

இறைவனின் ஜடாமுடியில் உள்ள பிறை நிலவும், அணிமணிகளின் அழகையும் காணும்போது பேளூர், ஹளபேடு சிற்பங்களின் பாணியை ஞாபகப்படுத்துகிறது. ஹொய்சாள சிற்ப பாணி அது. காதுகளில் மகர குண்டலங்களும், தோள்களிலும், கைகளிலும் உள்ள ஆபரணங்களும் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளன. இடுப்பில் உள்ள ஆடைகள் காற்றில் அசைவது போன்ற பிரமையை ஏற்படுத்துகின்றன. கால்களில் சிவபெருமானுக்கே உரிய தண்டையும் சிலம்பும் இல்லாமல் இருப்பது, சற்று அழகு குறைந்தாற்போல் உள்ளது. மேலிருந்து கங்காதேவி இறைவனை வணங்கியபடி இருப்பது மிகவும் சிறப்பு.

இந்தக் கோவில் ஏழாம் நூற்றாண்டில் முத்தரையர்களால், பல்லவர்கள் பாணியில் குடவரைக் கோவிலாக ஒரே கற்பாறையில் குடைந்து நிர்மாணிக்கப்பட்டது, நமது சிற்பிகளின் கலைத்திறன் எத்தகையது என்பதை இன்றளவும் உலகுக்குப் பறைசாற்றிக்கொண்டிருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x