Published : 24 Sep 2020 08:45 AM
Last Updated : 24 Sep 2020 08:45 AM
ஸ்ரீராமர் காட்டில் சீதையைத் தேடிச் செல்லும் வழியில் கபந்தனின் வழியாகத் தன்னை நோக்கித் தவம் செய்துவரும் சபரியைத் தெரிந்துகொண்டார்.
பம்பை நதிக்கரையில் மதங்க மகரிஷி ஆசிரமம் இருந்தது. மதங்கரின் சிஷ்யையாக இருந்தவர் சபரி. மதங்கர் திருநாட்டை அலங்கரிக்கச் செல்லும்போது ஆசிரமத்திலே தங்கி இருக்கச் சொல்லி சபரிக்கு உத்தரவிட்டார். “உனக்கு காட்சி கொடுக்க ஸ்ரீராமர் வருவார். அதுவரை நீ பூவுலகிலேயே இருக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார். அதன்படி, ஸ்ரீராமனை எதிர்பார்த்து சபரி ஆசிரமத்தில் இனிய கனிகளைச் சேமித்துவைத்துக் காத்திருந்தாள்.
சபரி, நாள்தோறும் தான் பறிக்கும் கனிகளில் மிகவும் சுவையான கனிகளை ருசித்துப் பார்த்து எடுத்து வைத்துக்கொண்டாள். மதங்க மகரிஷி உயிர்விடும்போது, தானும் இறந்து விடுவதாக சபரி அவரிடம் கூறினாள். ஆனால், மதங்கரோ தனக்குக் கிடைக்காத இறைகாட்சி சபரியைத் தேடி வருமென்றும், திரேதா யுகத்தில் மகாவிஷ்ணுவே மண்ணில் ராமன் என்னும் மனிதனாக அவதரித்து ராவணவதம் நிகழ்த்த இருப்பதையும் கூறினார். ஸ்ரீராமன், தனது சகோதரன் இலக்குவனுடன் சபரி இருக்கும் ஆசிரமம் தேடிவருவார் என்று உறுதியளித்தார்.
மதங்க மகரிஷி கூறிய சொல்லை நம்பிக் காத்திருந்தாள் சபரி. தினமும் ஆசிரமத்தை சுத்தம்செய்து மெழுகி, தரையைப் பூக்களால் அலங்கரித்துக் கோலமிட்டு, தீபமேற்றி, ஸ்ரீராமனின் பாதம் படக் காத்திருந்தாள்.
அந்த மூதாட்டி சபரியைப்போல், நான் இறைவனின் வருகைக்காகக் காத்திருக்கும் பொறுமை இல்லாதவளாக வாழ்கிறேனே என்று மனம் வருந்துகிறாள் நமது திருக்கோளூர் பெண் பிள்ளை.
(ரகசியங்கள் தொடரும்)
கட்டுரையாளர், தொடர்புக்கு: uyirullavaraiusha@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT