Published : 18 Jun 2020 08:39 AM
Last Updated : 18 Jun 2020 08:39 AM
தஞ்சாவூர்க் கவிராயர்
தமிழகத்தின் புகழ்பெற்ற இஸ்லாமிய ஞானிகளில் சூஃபி பாடலாசிரி யர்களாக மலர்ந்தவர்களில் தக்கலை பீரப்பா, மஸ்தான் சாகிபு ஆகிய இருவர் குறிப்பிடத்தகுந்தவர்கள்.
ஏகத்துவச் சர்க்கரை
இந்திய ஆன்மிகப் பண்பாடு என்ற பாலில் தூவப்பட்ட ஏகத்துவச் சர்க்கரையே சூஃபி ஞானம் என்று வட இந்திய சூஃபி ஞானி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
சைவம் தழைத்த தென்காசியில் பிறந்த தக்கலை பீரப்பாவின் திருநெறிநீதம் நூற்பாடல் வரியொன்று.
எல்லாப் பொருளையும் கருவொன்றுக்குள்
ஏழு கடலுள்ளே படைத்தவராய்
அல்லா அடியாரின் நபி உம்மத்தில்
அறிந்தோ ரொலியாகக் கூறினேனே!
கருவொன்றில் ஏழுகடல் என்ற கற்பனை தமிழ்நாட்டுச் சித்தர் பாடல் மரபில் எழுந்ததாகவே இருக்கிறது.
ஏன் தொழுவதில்லை?
தக்கலை பீரப்பா பற்றிய செவிவழிக் கதைகள் பல உண்டு. இவர் இஸ்லாமியராக இருந்தாலும் அந்தச் சமயத்தின் மரபுகளைப் பின்பற்றாமல் வாழ்ந்து வந்தார்.
இவர் தொழுவதில்லை என்ற குற்றச்சாட்டை இவர்மீது சுமத்தி இவரைக் கண்டிக்க மார்க்க அறிஞர் சதக்கத்துல்லா அப்பாவை அழைத்து வந்தனர்.
தறி நெய்துகொண்டிருந்த பீரப்பாவை நோக்கி, நீர் இன்னும் தொழப் போகவில்லையா என்று அதிகாரமாகக் கேட்டார் சதக்கத்துல்லா அப்பா.
அப்போது பீரப்பா பதிலேதும் பேசாமல் தறியின் கீழே கை காண்பித்தாராம். அனைவரும் எட்டிப் பார்த்தார்கள். அங்கே பீரப்பா மக்காவில் நின்று தொழுதுகொண்டிருந்தார். அற்புதங்களின் கதை என்று இதை விலக்கிவிடாமல் கதையின் குறியீடு கவனிக்கத்தக்கது.
இக்காலத்தில் சர்தார் முகிலன் திருவாங்கூர் மீது படையெடுத்துவர, கேரள வர்மனின் வெற்றிக்காக பீர் முகம்மது அப்பா தன் தவவலிமையால் கடந்தை வண்டுகளின் கூட்டத்தை ஏவிவிட்டதாகக் கூறப்படுகிறது. கடந்தை வண்டுகளின் சீற்றத்தை எதிர்கொள்ள முடியாது, முகிலனின் வீரர்கள் புறமுதுகிட்டோடி மறைந்தனர். முகிலனின் படை வீரர்கள் கடந்தை வண்டுகளால் தாக்கப் பெற்ற இடத்தில் ஒரு நீண்ட நெடிய சின்னம் உள்ளது. இதன் அருகில் உள்ள சமாதியை முகிலன் சமாதி என்கின்றனர்.
மெய்ஞ்ஞானியான பீரப்பா
கற்றுத்தெளிதலே இறைவனின் பேராற்றலை உணரும் உபாயம் என்பது இவரது முடிவு. ‘கல்வியின் ஊங்கில்லை சிற்றுயிர்க்கு உற்றதுணை’ என்பது குமரகுருபரர் வாக்கு.
பதினெண்ணாயிரத்துக்கு மேற்பட்ட பாடல்களை எழுதியவர் பீரப்பா. தமிழ்ப்புலமை, இஸ்லாமிய மார்க்க அறிவு, ஆன்மிகச் சித்தாந்தத் தெளிவு, தவநெறிகள் பற்றிய ஞானம் எல்லாம் ஒரு சேரப் பெற்றவர் தக்கலை பீரப்பா. அரபு மற்றும் மலையாள மொழியறிவும் கொண்டவர்.
இவரது பாடல்களில் காணப்படும் பல மெய்ஞ்ஞானக் கருத்துகள் பாரசீக இஸ்லாமிய அறிஞர், கவிஞர் ஜலாலுதீன் ரூமியுடன் ஒப்பு நோக்கத்தக்கவை.
தேடல்தொடங்கியது
பீர் முஹம்மது அப்பா பிள்ளைப் பருவத்திலேயே பெற்றோரைப் பிரிந்து தென்காசியிலிருந்து வெளியேறினார். ஏதோ ஒரு சக்தி அவரை உந்திச் சென்றது. ஏறத்தாழ 95 ஆண்டுகள் அடர்ந்த காடுகளிலும் உயர்ந்த மலை முகடுகளிலும் தனிமைத் தவத்தில் ஈடுபட்டார் என்று கூறப்படுகிறது. ஆனை மலைப் பகுதியில் இவர் பதினைந்து ஆண்டுகாலம் தவத்தில் ஈடுபட்டிருந்ததாகக் குறிப்புள்ளது. அவரது தவவாழ்வு நிகழ்ந்த அப்பகுதி இன்று பீர்மேடு என்று வழங்கப்படுகிறது.
சித்தர் வரிசையில் பீர் முஹம்மது
பதினெண் சித்தர்கள் அருளிச் செய்த பெரிய ஞானக் கோவை என்னும் நூல் தொகுதியில் பீர் முஹம்மது அப்பாவின் ஞான ரத்தினக் குறவஞ்சியும் இடம் பெற்றுள்ளதால் பீர் முஹம்மது அப்பாவும் சித்தராகவே ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளார்.
ஞானப்பூட்டு, ஞான விகட சமர்த்து, பிசுமில் குறம், ஞான ஆனந்தக் களிப்பு, திருநெறி நீதம், ரோசுமீசாக்கு மாலை ஆகியன அவர் எழுதிய பலநூறு நூல்களில் சில.
பெண்ணே பிரபஞ்சம்
ஆன்மிக மார்க்கங்கள் பெரும்பாலும் பெண்களை ஆன்மிக சாதனைகளுக்குத் தடையாகவே கருதியிருக்கின்றனர். பீரப்பா மறந்தும் பெண்ணைத் திட்டவில்லை, தூற்றவில்லை.
பீரப்பாவின் பாடல்கள் பலவற்றிலும் பெண் உடல் பற்றிய எவ்வித வர்ணனைகளும் இல்லை. பீரப்பா விழிகளையே அதிகம் வர்ணிக்கிறார். கண்ணையே முன்னிறுத்திப் பாடுகிறார். கண்கள் வழியே கடவுளையே தேடுபவராய், அவரது பாடல் வரிகளில் புதுமை பூத்திருக்கிறது.
காமத்தை இழித்துப்பேசாது அது பிரபஞ்ச இயற்கை என்று பிரகடனம் செய்கிறார். குண்டலினி சக்தியையே ஒரு பெண்ணாக உருவகிக்கிறார். பிரபஞ்ச மகா சக்தியே நமக்கு உள்ளிருந்து பெண்ணாக எழுகிறது என்கிறார். பெண்ணை அறிவில் குறைந்தவளாகச் சித்தரிக்கும் மரபிலிருந்து விலகி பெண்மையைப் போற்றுகிறார்.
பீரப்பாவின் ஞானக் குறவஞ்சியில் பிரபஞ்சத்தின் தோற்றம், உயிரின் இயல்பு, ஆன்மாவின் பயணம், கியாமத் நாள் போன்ற ஆன்மிகச் சொல்லாடலை ஆண் கேள்விகேட்க பெண் பதில் சொல்வதாகவே அமைத்திருக்கிறார்.
ஆன்மிகத்தில் மட்டுமின்றி இலக்கியத் திலும், தக்கலை பீரப்பா செய்த மாபெரும் புரட்சி இது என்றே அறிஞர்கள் கூறுகின்றனர்.
(தேடல் தொடரும்)
கட்டுரையாளர், தொடர்புக்கு : thanjavurkavirayar@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT