Published : 16 Apr 2020 09:59 AM
Last Updated : 16 Apr 2020 09:59 AM
ஜேம்ஸ் மார்டின்
கோவிட் -19 வைரஸ் ஆயிரக் கணக்கான மக்களை ஏன் கொல்கிறது? இதுபோன்ற நோய்த்தொற்றுகள் ஏன் மனிதகுலத்தைச் சீரழிக்கின்றன? இத்தனை துயரம் மனிதர்களுக்கு ஏன்? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் நேர்மையான ஒரு பதில் இருக்குமானால், அது நமக்குத் தெரிய வில்லை என்பதுதான். என்னைப் பொறுத்தவரை, அதிகபட்சமான நேர்மையும் துல்லியமும் கொண்ட பதில் இதுதான்.
இயற்கை உலகின் ஓர் அங்கம்தான் வைரஸ் என்றும், அது உயிர் வாழ்க்கைக்குப் பங்களிப்புசெய்வதாகவும் சிலர் வாதாடலாம். ஆனால், இந்த அணுகுமுறை தனது நேசத்துக்குரிய துணையையோ நண்பரையோ இழந்து நிற்பவருக்கு முன்னால், தோற்றுப் போய்விடும். இறை விசுவாசிக்கு இதுபோன்ற வேளைகளில் எழும் முக்கியமான கேள்வி இது: உங்களால் புரிந்துகொள்ள முடியாத கடவுளை நம்ப முடியுமா?
நாம் அனுபவிக்கும் துயரங்களின் ரகசியங்களுக்கு விடை இல்லாதபோது, ஒரு இறை விசுவாசி எங்கே சென்று அடைக்கலம் தேட முடியும்? விடை கிறிஸ்துவாக இருக்கலாம்.
கிறிஸ்து முழுமையாக தேவனும் முழுமையாக மனிதனுமானவர் என்று கிறிஸ்தவர்கள் நம்புகின்றனர். சில வேளைகளில் மனித அம்சத்தை நாம் பாராமல் இருந்துவிடுகிறோம். நாசரேத்தில் பிறந்த இயேசு, நோய்கள் ராஜாங்கம் செய்த உலகில் பிறந்தார். தனது பிரசங்கங்கள் அனைத்திலும் நோயாளிகளை நோக்கி அவர் பேசினார். அவரது அதிசயங்களில் பெரும்பாலானவை நோய்களையும் ஊனங்களையும் குணப்படுத்திய சம்பவங்கள்தாம். மோசமான தோல் குறைபாடுகள், வலிப்பு, பார்வைக் குறைபாடு, காதுகேளாமை, பக்கவாதம் என அவர் தீர்த்த நோய்களைப் பற்றிய குறிப்புகள் உள்ளன.
பெருந்தோற்று நோய் அச்சமூட்டிக் கொண்டிருக்கும் நாட்களில், கிறிஸ்தவர்கள் இயேசுவை நோக்கி பிரார்த்தனை செய்யும்போது, அவர் கடவுளாக அனைத்து விஷயங்களையும் அறிந்தவர் என்பதுடன் மட்டுமல்லாமல், மனிதராக இங்கே வாழ்ந்து இங்குள்ள அனைத்து விஷயங்களை அனுபவித்தவர் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.
நோயுற்றவர்களை நேசத்துடன் கவனித்துப் பராமரிப்பதற்கான முன்மாதிரியாக கிறிஸ்துவை, கிறிஸ்துவர்கள் அல்லாதவர்களும் காண்பதற்கு இடமுண்டு. கிறிஸ்துவைப் பொறுத்தவரை நோயுற்ற மனிதனோ, இறந்துகொண்டிருக்கும் மனிதனோ வேற்றாள் அல்ல; அவன் குற்றம்சாட்டப்பட வேண்டியவனும் அல்ல, அவன் நமது சகோதரனோ சகோதரியா ஆவான் / ஆவாள். பரிகாரம் தேடும் ஒரு நபரை இயேசு சந்திக்கும்போதெல்லாம், அவரது இதயம் இரக்கத்தால் நெகிழ்ந்தது என்று நற்செய்திகள் சொல்கின்றன. இதுபோன்ற நெருக்கடிக் காலங்களில் நமது இதயங்கள் எப்படி நெகிழ்ந்து சேவையாற்ற வேண்டும் என்பதற்கான மாதிரிதான் இயேசு.
நியூயார்க்கின் 68-வது சாலையில் உள்ள தேவாலயத்தில் நான் பிரார்த்திக்கும் போதெல்லாம், நான் இயேசு கிறிஸ்துவின் சொரூபத்தின் முன்னர் சிறிது நேரம் நிற்பேன். அவரது கரங்கள் விரிந்து இதயம் தெரிய நிற்கிறார். பாரிஸ் சுண்ணச்சாந்தில் செய்யப்பட்ட சிலை அது. அது ஒரு பெரிய கலைப்படைப்பு அல்ல. ஆனால், அந்தக் கிறிஸ்துவின் சிலை என்னைப் பொறுத்தவரை அர்த்தமுடையது. ஏன் மக்கள் இறக்கின்றனர் என்பதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. ஆனால், பின்பற்றுவதற்கான ஒரு முன்மாதிரியை விட்டுச் சென்ற மனிதனை என்னால் பின்தொடர முடியும்.
கட்டுரையாளர், அமெரிக்காவில் வசிக்கும் இயேசு சபை அருட்பணியாளர்
(நியூயார்க் டைம்ஸில் வெளிவந்த கட்டுரையின் சுருக்கம்)
தமிழில் : ஷங்கர்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT