Published : 02 Apr 2020 09:19 AM
Last Updated : 02 Apr 2020 09:19 AM
நஃப்பீஸ் கான்
இறைத்தூதர் முஹம்மது, உமருக்கு ‘அல் ஃபரூக்’ என்ற பெயரை வழங்கினார். ‘அல் ஃபரூக்’ என்றால் சரி, தவறைப் பிரித்தறிபவர்’ என்று அர்த்தம். ஒரு முறை, இறைத்தூதர், “அல்லா, உமரின் நாவிலும், இதயத்திலும் உண்மையை வைத்திருக்கிறார். எனக்குப்பிறகு, உண்மை என்பது உமர் எங்கிருந்தாலும் அங்கிருக்கிறது,” என்று சொன்னார்.
இந்தப் பண்புகள் எல்லாம் உமர் ஃபரூக்கைத் தனிச்சிறப்புவாய்ந்தவராக மாற்றியது. இந்த உலக வரலாற்றில், சிறந்த அரசர்கள், ஆட்சியாளர்கள், நிர்வாகிகள் போல அவருக்கும் தனித்துவமான இடமிருக்கிறது. அவர் மற்றவர்களைப் போல லௌகீக லட்சியத்தால் வழிநடத்தப்பட்டவரில்லை. அவர் அல்லாவின் நம்பிக்கையால், இறைத்தூதரால், புனித நூலான திருக்குர்ஆனால் வழிநடத்தப்பட்டவர்.
அவர் உலகின் பெரிய மாகாணத்தின் தலைவராக இருந்திருக்கிறார். ஆனால், அவர் ஒரு சாமானிய மனிதரைப் போல எளிமையான பழக்கங்களையும் வாழ்க்கைமுறையையும் கொண்டிருந்தார். அவரது குடிமக்களில், அனைவரும் அவரை எப்போது வேண்டுமானாலும் நேரடியாக அணுகும்படித் தன்னை வைத்திருந்தார்.
பொ.ஆ. 582-ல், மக்காவில் உமர் பிறந்தார். அவருடைய தந்தை கத்தாப், தாயார் கன்டமா இருவரும் குரைஷ் இனத்தில் ‘அதி’ என்ற பிரிவைச் சேர்ந்தவர்கள். இந்தப் பிரிவிலிருந்துதான் நீதிபதிகளும், தூதர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். குரைஷ் இனத்தவருக்குள் பிரச்சினை வரும்போதெல்லாம், அதைத் தீர்த்துவைக்க இவர்கள்தாம் நடுவர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். அவர்களின் பேச்சுத்திறனாலும், நீதி வழங்கும் பண்பாலும் சமூகத்தில் அவர்களுக்குப் பெரிய மரியாதை இருந்தது.
சிறுவனாக இருந்தபோது, தன் வயதிலிருக்கும் மற்றச் சிறுவர்களைப் போல உமரும் ஓட்டகங்கள், ஆடுகள் மேய்ப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். ஆனால், மக்காவின் மற்றச் சிறுவர்களைப் போல் அல்லாமல், அவர் படிக்கவும் எழுதவும் கற்றுக்கொண்டார். அந்த நேரத்தில், மக்காவில் எழுத படிக்க தெரிந்தவர்கள் வெறும் பதினாறுபேர் மட்டும்தான் இருந்தனர். இது ஒரு பெரிய சாதனை.
உமர் வளர்ந்தபோது, உயரமான, வலிமையான, ஈர்க்கக்கூடிய ஆளுமையாகத் திகழ்ந்தார். அவர் சிறந்த மல்யுத்த வீரராக, வாள் வீரராக, குதிரை சவாரி செய்பவராக இருந்தார்.
உமர், நேர்மையாக, வலிமையான நம்பிக்கைகளை உடையவராக இருந்தார். அவர் சிறந்த அறிவாளியாக விளங்கினார். எளியவர்களுக்கு உதவுவதற்கு எப்போதும் தயாராக இருந்தார். அவர் அனைவரிடமும் கற்றுக்கொள்வதற்கு எந்தச் சூழ்நிலையிலும் தயாராக இருந்தார். தன் தவறுகளை அறிந்து திருத்திக்கொள்வதற்கு அவர் ஆர்வமாக இருந்தார்.
அவர் தன் முன்னோர்களின் பண்பான பேச்சுத்திறன், அறிவாற்றலிலும் அவர்களைப் போலவே சிறந்து விளங்கினார். குரைஷ் இனத்தவருக்குத் தூதராக, நடுவராகச் செயல்படுவதில் அவருக்கு எந்தச் சிரமும் ஏற்படவில்லை.
ஒரு வெற்றிகரமான வணிகராக, அவர் ஈராக், சிரியா, பெர்ஷியா, ஏமன் போன்ற வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொண்டிருந்தார். இந்தப் பயண அனுபவம் அவருக்கு மக்களின் இயல்பு, தேவை, பிரச்சினைகளை அறிந்துகொள்வதற்கு உதவியாக இருந்தது.
- தொடரும்
தமிழில்: கனி
(நன்றி: குட்வர்ட் பதிப்பகம்)
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT