Published : 19 Mar 2020 10:13 AM
Last Updated : 19 Mar 2020 10:13 AM
பூவிருந்தவல்லியில் வைசிய குலத்தில் பணக்காரப் பெற்றோருக்கு மகனாகப் பிறந்தவர் திருகச்சி நம்பி. இவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் கஜேந்திரதாசர். குடும்ப வழக்கப்படி அவரது தந்தை சொத்துக்களைப் பிரித்து கொடுத்தார். கஜேந்திரதாசர், தன் பங்குக்கு வந்த சொத்துகளை விற்று, காஞ்சி அத்தி வரதனுக்கு நந்தவனம் அமைத்து பூமாலைகள் சமர்ப்பிக்கும் பணியைத் நாள்தோறும் செய்தார்.
காஞ்சியில் ஒரு நாள் வரதனின் திருமுக மண்டலம் வியர்த்திருந்ததை திருகச்சி நம்பிகள் பார்த்து அர்ச்சகரிடம் காரணம் கேட்டார். பிரம்மாவின் அக்னி குண்டத்தில் உதித்தவா் என்பதால் வியர்க்கிறது என்று பதில் கிடைத்தது. இவருக்கு ஆளவட்ட கைங்கரியம் ஏற்புடையதாக இருக்கும் என்று நாள்தோறும் பூவிருந்தவல்லியிலிருந்து காஞ்சிபுரம் அடைந்து வரதராஜனுக்கு ஆளவட்ட (விசிறி) கைங்கர்யம் செய்யத் தொடங்கினார். அதைக் காஞ்சி வரதரும் ஏற்றுக்கொண்டார். திருகச்சி நம்பி தாய்போலத் தன்மீது காட்டும் பரிவைக் கண்டு மனமிரங்கி வரதராஜன் அவருடன் உரையாடவும் தொடங்கினார்.
ஒரு சந்தர்ப்பத்தில் திருகச்சி நம்பிக்கு ஏழரை நாட்டுச் சனி பிடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அப்போது வரதனின் அருள் பெற்றவர் திருகச்சி என்பதால் சனி பகவான் தனது நிலையை பெருமாளிடம் வந்து விளக்கினார்.
நானும் நீயும் ஏழரை வருடங்கள் பிரியவேண்டுமென்ற உண்மையை வரதராஜன் திருகச்சி நம்பியிடம் விளக்கினார். திருகச்சி, குழந்தைபோல அதெல்லாம் முடியாது என்று மறுத்தார். வரதராஜ பெருமாளும் ஏழரை மாதம், ஏழரை வாரம், ஏழரை நாள், ஏழரை நாழிகை என்று குறைத்துக் கொண்டே வந்தார். கடைசியில் திருகச்சியும் ஒப்புக்கொண்டார்.
உடனே வரதராஜப் பெருமாள் ஒரு நாடகத்தை நடத்தினார். அதன்படி வரதராஜர் சிலையில் அணிந்திருக்கும் நகை காணாமல் போக திருகச்சி நம்பியை அரசன் சிறைப்பிடித்தான். ஏழரை நாழிகை ஆனபின்னர், பூமாலைக்குள் நகை இருப்பது தெரியவர அரசன் திருகச்சியை விடுதலைசெய்தான்.
ஒருமுறை, ராமானுஜர் தனது சந்தேகங்களைப் பெருமாளிடம் கேட்டுத் தீர்வு அறிய திருகச்சியை வேண்டினார். ஆலவட்ட கைங்கர்ய வேளையில் பெருமாளும் திருக்கச்சியாரும் உரையாடிக் கொண்டிருந்தபோது ராமானுஜரின் சந்தேகங்கள் கேட்கப்பட்டன. அதற்கு பெருமாள் பதிலாக ஆறு வார்த்தைகளை அருளினார்.
நானே பரதத்வம், பேதமே தர்சனம், சரணாகதியே உபாயம், சரீர முடிவில் மோக்ஷம், அந்திம ஸ்மிருதி அவசியமில்லை, பெரிய நம்பியை ஆச்சாரியனாகப் பற்றுக என்பதுதான் அந்த ஆறு வார்த்தைகள்.
இப்படியாக திருகச்சி நம்பிகளைப் போல் அடியாளுக்கு பக்தி, சிரத்தை, கைங்கர்யம் எதிலுமே ருசி இல்லையே என்று ராமானுஜருடன் தொடர்புடைய விஷயங்களை அவரிடமே ஏக்கத்துடன் தெரிவிக்கிறாள் திருக்கோளூர் பெண்பிள்ளை.
(ரகசியங்கள் தொடரும்) கட்டுரையாளர், தொடர்புக்கு : uyirullavaraiusha@gmail.com n உஷாதேவி n
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT