Published : 05 Mar 2020 08:08 AM
Last Updated : 05 Mar 2020 08:08 AM
உஷாதேவி
ரத்னாகரன் என்ற பெயருடைய பெரும் கொள்ளைகாரன் ஒருவன் , காட்டுவழியாக பயணம் செய்துகொண்டிருந்த நாரதரிடம் கொள்ளையடிக்க முயற்சித்தான். நாரதர், தன்னிடம் எந்தப் பொருளும் இல்லை என்றும் தன்னிடம் இருப்பதை யாரும் வழிப்பறி செய்யவும் முடியாது என்றும் கூறினார். தன்னால் கொள்ளையடிக்க முடியாத ஒரு பொருள் உண்டா என்று ரத்னாகரனுக்குச் சந்தேகம் தோன்ற, அதை நாரதரிடம் கேட்டான்.
நாரதர் ரத்னாகரனிடம், நீ இப்படிப் பாவம் செய்து உன் குடும்ப உறவுகளை காப்பது போலே, உன் உறவுகள் உன் பாவ சுமையை ஏற்றுக்கொள்வார்களா என்று கேட்டுவா என்றார். வீடு திரும்பிய ரத்னாகரன் தனது தாய், மனைவியிடம் பாவத்தைப் பங்கிட்டுக்கொள்ளும்படி கேட்டான். தாய், மனைவி உட்பட்ட எந்த உறவும் தயாராக இல்லை. இதைக் கேட்டு மனம்வெதும்பி நாரதரிடம் திரும்பி முறையிட்டான். தன் பாவத்துக்கு விடுதலை உண்டாவென்று கேட்க நாரதர் அவனுக்கு ராம நாமத்தின் மேன்மையைக் கூறினார்.
ராம நாமம் சொல்லத் தெரியாமல் விழித்த ரத்னாகரனிடம் அருகில் இருந்த மராமரத்தைக் (பலா மரம்) காட்டி “மரா மரா” என ஜபிக்குமாறு கூறிச் சென்றார். விடாது “மரா மரா” எனக் கூறிக் கொண்டே கண் மூடி அமர்ந்தான், அவன் மீது கரையான் புற்று கட்டி மூடியது. புற்றுக்குள் இருந்து ராம, ராம என்னும் ஒலி மட்டும் எழுந்தது. அவன் முன்னே பிரம்மா தோன்றி, கமண்டல நீர் தெளித்து எழுப்பினார்.
ஆதி கவியாக வருவாய் என்ற வரம் அளித்தார். அவ்வாறே இருபத்தி நான்காயிரம் சுலோகம் கொண்ட ராமாயணம் என்னும் காவியத்தையும், காயத்ரி மந்திர விரிவாக்கத்தையும் ரத்னாகரன் எழுதினார், புற்றிலிருந்து புதுப்பிறப்பு எடுத்ததால் வால்மீகி என பெயர் பெற்றார்.
ஸ்ரீராமன், சீதையை மீட்டு அயோத்தியில் பட்டாபிஷேகம் முடித்து, அரசாளும்போது சீதையின் புனிதத்தில் ஒரு குடியானவன் குறை கண்டான் என்பதால் கற்புக்கரசியான சீதையை காட்டுக்கு அனுப்பிவிட்டார். காட்டில் தனியாக நின்ற சீதை வால்மீகி ஆசிரமத்தில் அடைக்கலம் ஆனாள். அங்கு ராமனின் இரு புதல்வர்கள் அவதரித்தார்கள். வால்மீகி குழந்தைகளை தர்ப்பை புல்லால் ஆசீர்வதித்து. இலவன், குசன் எனப் பெயரிடுகிறார்.
ராம நாமம் ஜெபித்து. ராமனின் புதல்வர்களான லவ, குசனுக்கு அனைத்து விதமான கல்வி, கலைகளையும் கற்பித்து அவர் இயற்றிய ராமாயணத்தை லவ குசனைக் கொண்டு அயோத்தியின் வீதிகளில் அரங்கேற்றவும் செய்தார். வால்மீகிக்குக் கிடைத்த அந்தப் பாக்கியங்களைப் போல், நான் மேன்மையடையவில்லையே சுவாமி என மனம் வருத்தமுறுகிறாள் நம் திருக்கோளுர் பெண் பிள்ளை.
(ரகசியங்கள் தொடரும்)
கட்டுரையாளர், தொடர்புக்கு: uyirullavaraiusha@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT