Published : 20 Feb 2020 11:41 AM
Last Updated : 20 Feb 2020 11:41 AM

உயிர் வளர்க்கும் திருமந்திரம் 112: தன்னை அறியும் அறிவே அறிவு

கரு.ஆறுமுகத்தமிழன்

கிரேக்கத்தில் டெல்பி (Delphi) என்று ஓரிடம். டெல்பி என்றால் கருப்பை என்று பொருள். அதுவே புவியின் மையப்புள்ளி என்றும் நிலமங்கையின் கொப்பூழ் (தொப்புள்) என்றும் கிரேக்கர்களால் நம்பப்பட்டது. கொப்பூழ் முடிச்சை அடையாளப்படுத்தும் வகையில், லிங்கம்போன்ற வடிவில், ஆம்பலஸ் (Omphalos) என்ற அமைப்பைக் கிரேக்கர்கள் அங்கு நிறுவியிருந்தார்கள். லிங்கம் ஆணின் அடையாளம் என்றால் ஆம்பலசு என்ற கொப்பூழ் பெண்ணின் அடையாளம்.

டெல்பி தொடக்கத்தில் தாய்த் தெய்வ வழிபாட்டுத் தலம். தாய்த் தெய்வத்தின் உரிமைக் காப்பாளாக அங்கே இருந்த பைத்தன் என்ற பெரும்பாம்பை அம்பெய்து கொல்கிறது அப்போலோ என்ற ஆண் தெய்வம். பைத்தன் பெரும்பாம்பு நஞ்சைக் கக்கிச் சாக, அப்போலோவின் ஆண்மைக்கு வசப்படுகிறது டெல்பி.

கிரேக்க வழிபாட்டு மரபில் டெல்பியின் இடம் இன்றியமையாதது. ஏனெனில், அது குறி சொல்லும் சாமியாடியின் (oracle) பீடம். டெல்பிக் கோவில் ஆண் கடவுளான அப்போலோவின் வசமானாலும் சாமியாடிக் குறி சொன்னவள் பெண்தான். பைத்தன் பெரும்பாம்பு சாகும்போது கக்கிய நஞ்சு பாறைப் பிளவுக்குள்ளிருந்து கசிந்து புகையும் மணமுமாக மேலெழுகையில், அதை முகரும் சாமியாடிப் பெண் தன்னிலை இழந்து அப்போலோவின் கைப்பாவையாகிக் குறி சொல்வாள் என்று நம்பிக்கை.

ஏதென்ஸ் நகரத்தின் மிகச் சிறந்த அறிவாளி யார் என்று ஒருமுறை கேட்கப்பட்டபோது சாக்ரடீஸ் என்று குறி சொன்னாளாம் சாமியாடி. இவை இருக்கட்டும். டெல்பிக் கோவில் கல்வெட்டில் 147 மூதுரைகள். இந்த மூதுரைகளை வழங்கியவர்கள் கிரேக்கத்தின் ஏழு பேரறிஞர்கள் என்பது நம்பிக்கை. எழுவரில் ஒருவர் சாக்ரடீஸ். 147 மூதுரைகளில் ஒன்று இது: ‘தன்னை அறிக’ (Know thyself).

வியக்கத்தக்க முரண். இருண்ட கருவறையில் சுடரொளிபோல, குறி கேட்டல் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் எழுந்து நிற்கும் கோவிலில், ‘தன்னை அறிக’ என்றொரு மணிச் சொற்றொடர். தன்னை அறிதல் என்பது நம்பிக்கையை விட்டு விலகும்போது நிகழ்வதல்லவோ? இத்தகு முரண்கள் நம் ஊர்க் கோவில்களிலும் நிகழும். கபாலிச் சிவன் கோவில் பிரதோச விழாவில் கீழ்வரும் பாடல் ஒலிக்கக் கேட்டதுண்டு:

ஓடிஓடி ஓடிஓடி, உட்கலந்த சோதியை

நாடிநாடி நாடிநாடி நாட்களும் கழிந்துபோய்,

வாடிவாடி வாடிவாடி மாண்டுபோன மாந்தர்கள்,

கோடிகோடி கோடிகோடி எண்ணிறந்த கோடியே.

(சித்தர் பாடல்கள், சிவவாக்கியர், 3)

உள்ளுக்குள் கலந்திருக்கும் ஒளியை அங்கும் இங்குமாக ஓடியும் தேடியும் களைத்துப் போய்க் கண்டறிய முடியாமல் வாடியிருக்கிற மாந்தர்களின் எண்ணிக்கை கோடி கோடி. சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார், செல்வர்.

தன்னை அறிக என்னும் மணிச் சொற்றொடர்பற்றிச் சாக்ரடீஸ் நடத்திய உரையாடல் பெரியது: ‘தன்னை அறிக என்கிறது டெல்பிக் கட்டளை. ஆனால், நானோ என்னை அறியாதவனாக இருக்கிறேன். என்னையே அறியாமல் மற்றவற்றை அறிய முற்படுவது கேலிக்குரியதல்லவோ?’

முன்னை அறிவினில் செய்த முதுதவம்

பின்னை அறிவினைப் பெற்றால் அறியலாம்;

தன்னை அறிவது அறிவாம்; அஃதுஅன்றிப்

பின்னை அறிவுஅது பேய்அறிவு ஆகுமே. (திருமந்திரம் 2318)

அறிவு என்பது முயற்சியால் விளைவது; தவம் என்று சிறப்பிக்கத்தக்க முயற்சி. அறிவுத் தவம். செய்த தவத்தின் மேன்மையை எவ்வாறு அறிவது? அந்தத் தவத்தால் விளைந்த அறிவைக்கொண்டே அறியலாம். பெற்ற அறிவு தன்னை அறியும் அறிவானால், அதற்காகச் செய்த முயற்சி தவம்தான். தன்னை அறியும் அறிவே அறிவு. ஏனைய அறிவெல்லாம் பேய் அறிவு. அதென்ன பேய் அறிவு? ஆவதைவிட்டு ஆகாதவற்றை அறிய அலையும் அறிவு.

தன்னை அறிதலுக்கென்ன இவ்வளவு முதன்மை? உயிர்களின் தேடுபொருள் விடுதலையே அல்லவா? தான் விடுதலைப்பட்டவரா அடிமைப்பட்டவரா என்பதை ஒருவர் எப்படி அறிவார்? தன்னிலை அறிய முற்படுகையில்தானே? ஆதலால் தன்னை ஆய்க; தன்னை அறிக.

(அறிதல் தொடரும்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x