Published : 23 Jan 2020 02:34 PM
Last Updated : 23 Jan 2020 02:34 PM
வா.ரவிக்குமார்
காதுகளுக்கும் கண்களுக்கும் இன்பமளிக்கும் எண்ணற்ற இசை, நாட்டிய விழாக்கள் இந்தாண்டும் சிறப்பாக நடந்தன. நம்முடைய கலைகளின் பாரம்பரியமான பெருமைகளை தெரிந்துகொள்வதற்கு உதவும் துறை சார்ந்த அறிஞர்களின் கருத்தரங்குகளும் பரவலாக நடந்தன.
இந்த அடிப்படையில், பழைமையின் பெருமையைப் பாதுகாப்பதோடு அறிஞர்களின் வாய்மொழியில் அதை ஆவணமாகவும் பதிவு செய்யும் பெரும் பணியை எந்த விதமான விளம்பர வெளிச்சமும் இல்லாமல் செய்துவருவது லலிதா ராமின் `பரிவாதினி’ அமைப்பு. அந்த அமைப்பின் சார்பாக அண்மையில் நடைபெற்ற கருத்தரங்கத்தில், பழங்காலத்தில் நாகஸ்வர மேதைகளாக இருந்த பலரும் இறைவனைப் புகழ்ந்து பல சாகித்யங்களையும் இசை உலகுக்கு அளித்திருப்பதை இஞ்சிக்குடி இ.எம். மாரியப்பன் பகிர்ந்து கொண்டார்.
அந்த மேதைகளின் வார்த்தைகளில் வெளிப்படும் பக்தி, இசையின் மேன்மை, ராகங்களின் நேர்த்தி, ஆலய வழிபாடுகளின் போது நாகஸ்வரம் வாசிக்கும் முறை போன்ற பல விஷயங்களும் அவரின் உரையில் நேர்த்தியாக வெளிப்பட்டன. அதிலிருந்து சில துளிகளை இங்கே தருகிறோம்.
திருக்கோயில்களில் நாகஸ்வர இசை இன்றியமையாதது. தேர்த் திருவிழா, திருவீதி ஊர்வலம், தெப்பத் திருவிழா இப்படி எல்லா ஆன்மிக விழா வைபவங்களிலும் நாதசுரம் வாசிக்கப்படுகிறது. இதில் சிவ ஆலயங்களிலும் வைணவ ஆலயங்களிலும் நாகஸ்வரம் வாசிக்கும் முறையில் சிறிய வித்தியாசம் இருக்கும்.
திருவீதி உலா வருதலின் போது பிரதானமாக ‘மல்லாரி’ எனும் நாகஸ்வரத்துக்கே உரித்தான தத்தகாரமான வரிகளற்ற இசைக்கூறு வாசிக்கபடுவதுண்டு. அது கம்பீர நாட்டை ராகத்தில் அமைந்திருக்கும்.
இறையிசை வெளிப்படும் கீர்த்தனைகள்
நம்முடைய நாதஸ்வர, தவில் வித்வான்களில் பலர் நிறைய கீர்த்தனைகள் இயற்றியும், பல அறிஞர்களின் பாடல்களுக்கு இசையமைத்தும் இருக்கின்றனர். அவற்றை நாம் ஆவணப்படுத்துவதற்கும் பாதுகாப்பதற்கும் தவறிவிட்டோம். நாகஸ்வர - தவில் மேதைகள் சிலரின் அரிய கீர்த்தனைகளை பார்ப்போம்.
நாகஸ்வர வித்வான் சிக்கல் எஸ். கே. கந்தசாமி பிள்ளை, பன்முகத் திறமையாளர். தமிழறிஞர் என்.எஸ். சிதம்பரம் அவர்களின் ‘பரம்பொருளே என்னை முகம் பாராய்’ என்ற கீர்த்தனையை ஆபோகி ராகத்தில் மெட்டமைத்திருக்கிறார். கொஞ்சும் தமிழ் பாடல் வரிகளுக்கு இராக பாவமும் ஞான பாவமும் பொங்க இசையமைத்து இருக்கிறார். ‘பாதகனாயினும் உனது அமிழ்தம் தாராய்’ என இறைவனை கெஞ்சும் இடத்தில் ஆபோகி ராகத்தின் ஸ்வரூபம் முழுமையாக வெளிப்படும்.
திருவீழிமிழலை சகோதரர்களில் இளையவரான டி.எஸ். கல்யாண சுந்தரம் பிள்ளையின் கீர்த்தனைகளில் திருவீழிமிழலை திருக்கோயில் புராணம் ஆங்காங்கே வரும்படி அமைத்திருப்பார். சுந்தர நாயகி, நாயகி கார்த்தியாயனி, திருமணி எனும் ஒரு குருமணியே போன்ற கீர்த்தனைகள் இசை உலகத்தில் புகழ்பெற்றவை.
நாகஸ்வர வித்வான் தருமபுரம் அ.கோவிந்தராஜன் கீர்த்தனைகளை விட வர்ணங்களை அதிகம் இயற்றியிருக்கிறார். இவரின் சுமனீச ரஞ்சனி ராக வர்ணம், மிகவும் புகழ் வாய்ந்தது. இவர் இயற்றிய கீரவாணி ராக கீர்த்தனையான ‘அருள்புரி வேலா ஆருயிர் சீலா’ ரசிகர்களுக்கு நெருக்கமான ஒன்று.
தவில் மேதை, பொறையாறு ஆர். வேணுகோபால் பிள்ளை, தவில் கருவியை நவீனப்படுத்தி வாசிப்பதற்கு சுலபமாக்கிய அறிவியல் நுட்பமும் தெரிந்த அறிஞர். இவர் உருவாக்கிய ஆனந்த பைரவி ராக கீர்த்தனையான ‘காணாத காட்சி கண்டேன் நித்திரையில்’ என்ற கீர்த்தனை நாகஸ்வரக் கலைஞர்கள் மத்தியில் மிகவும் புகழ் வாய்ந்தது. சுமார் முப்பது, நாற்பது வருடங்களுக்கு முன்பு இந்தக் கீர்த்தனையை நாகஸ்வரக் கலைஞர்கள் வாசிக்காத இடமே கிடையாது எனலாம்.
வேணுப்பிள்ளை இயற்றிய கீர்த்தனைகளில் மிக அரிதான ராகமான சாவித்திரி என்ற ராகத்தை மிக அழகாக கையாண்டு ஒரு கீர்த்தனையை உருவாக்கியிருக்கிறார் அந்தக் கீர்த்தனை ‘பாடல் கேட்குதய்யா பண்ணிசை புலவர்கள்’. இந்த ராகம் அரிதாக இருந்தாலும் கேட்போருக்கு மிக பழக்கப்பட்ட ஒன்றாக தோன்றும் அளவுக்கு அவ்வளவு எளிமையாக அந்த மெட்டை அமைத்துத் தந்திருக்கிறார் இந்த கீர்த்தனையில். இவற்றைப் போற்றிப் பாதுகாப்போம். அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சேர்ப்போம்.
நாகஸ்வர மேதை இஞ்சிக்குடி இ.எஸ். முத்துக் குமாரசாமி, சரஸ்வதி இணையருக்குப் பிறந்தவர் மாரியப்பன். இவருடைய சகோதரர்தான் நாகஸ்வர மேதை இஞ்சிக்குடி இ.எம். சுப்பிரமணியம். தன் அப்பாவிடமும் நாகஸ்வர மேதை திருமாகாளம் வீ.சோமாஸ்கந்தம் பிள்ளை அவர்களிடமும் இசைப் பயிற்சியைப் பெற்றவர் இஞ்சிக்குடி இ.எம். மாரியப்பன். இந்தியாவின் பல மாநிலங்களிலும் இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து, லண்டன், மற்றும் ஆஸ்திரியா போன்ற அண்டை நாடுகளிலும் நாகஸ்வர கச்சேரிகள் நடத்தியிருப்பவர் இஞ்சிக்குடி மாரியப்பன். |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT