Published : 23 Jan 2020 01:54 PM
Last Updated : 23 Jan 2020 01:54 PM
தஞ்சாவூர்க்கவிராயர்
புராணங்களில் தர்மரைப் பற்றி ஒரு கதை சொல்லப்பட்டிருக்கிறது. தருமரை அழைத்துப் போக வானுலகிலிருந்து புஷ்பக விமானம் வந்து நின்றது. இந்திரன் முதலானோர் மலர் தூவி அவரை வரவேற்றனர். தர்மர் பின்னால் ஒரு நாய் ஓடி வந்தது.
பரிவுடன் அந்த நாயைப் பார்த்தார். அந்த நாயையும் புஷ்பக விமானத்தில் ஏற்றிக்கொள்ளுமாறு இந்திரன் முதலான தேவர்களிடம் வேண்டுகிறார். அது இயலாது என்று பதில் வருகிறது. நாயையும் ஏற்றிக் கொண்டால்தான் நான் வருவேன், இல்லாவிட்டால் பூவுலகில் இருந்து விடுகிறேன் என்று உறுதிபடக் கூறிவிட்டார். அவர் செய்த தர்மமே நாயாகப் பின்தொடர்ந்தது என்று விளக்கம் கூறப்படுகிறது. தன்னோடு வந்த நாய்க்கும் வீடுபேறு வேண்டும் என்று கேட்ட தயாள உள்ளமே அவரை தர்மராக அடையாளம் காட்டுகிறது.
உயிருக்கு உற்ற துணை
உலகில் மனிதன் தோன்றிய நாள் முதற்கொண்டு அவனுக்கு உற்றத் துணையாக நாய்கள் இருந்துவந்துள்ளன. பன்னெடுங்காலத்துக்கு முன்பே குகையில் வாழ்ந்த மனிதர்கள் பாறைகளில் தீட்டிய ஓவியங்களில் மனித உருவம் போன்ற கோடுகளுக்குக் கீழே நாய்களின் உருவமும் இடம்பெற்றுள்ளது. உண்மையில் நாய் என்று சொல்லவே நாக்கூசுகிறது. நாயை ஒரு வசைச் சொல்லாகப் பயன்படுத்தும் நாம்தான் அதை பைரவராகவும் வழிபடுகிறோம்.
1920களில் தஞ்சை மாவட்டத்தின் பல்வேறிடங்களிலும் தமிழ்நாட்டிலும் சுற்றித் திரிந்த மகான் பாடகச்சேரி சுவாமிகளின் வரலாற்றில் இரண்டு முக்கிய அம்சங்கள் மனத்தைத் தொடுகின்றன. முதலாவது நாய்களின் மீது அவர் காட்டிய அன்பும் அபிமானமும் மற்றொன்று சிதிலமடைந்த கோயில்களை எங்கு கண்டாலும் அவற்றை சீரமைத்து குடமுழுக்கு செய்விப்பதும். தாம் உணவு உண்ணும் முன்னதாக ஒரு கவளத்தை உருட்டி நாய்க்கு வைத்து அது உண்ட பின்பே தாம் உண்ணும் வழக்கம் அவரிடம் இருந்தது.
நாய்களுக்கு நமஸ்காரம்
சுவாமிகள் நாய்களை மனிதர்களாக மட்டுமல்ல மகான்களாகவே நடத்தினார் என்பதை மெய்ப்பிக்கும் சம்பவங்கள் பல உண்டு. அவற்றுள் ஒன்று இது. கோயிலில் வழிபாடு முடிந்ததும் அன்னதானம் வழங்க ஏற்பாடாகும். சொற்ப எண்ணிக்கையில் பக்தர்கள் வந்திருந்தாலும் இருநூறு முன்னூறு பேர்களுக்கு வடை, பாயசத்தோடு உணவு தயாரிக்கும்படி ஸ்வாமிகள் சொல்வாராம். அதே எண்ணிக்கையில் இலைகளும் போடப்படும்.
பந்தலுக்கு வெளியே சென்று கையிலிருந்த கழியால் சுவாமிகள் தரையில் தட்டவும் எங்கிருந்தோ நாய்களின் கூட்டம் ஓடிவரும். போட்ட இலைகளுக்குமேல் அதிகமாகவோ, குறைவாகவோ நாய்கள் வராது. சாப்பிடுங்கள் என்று சுவாமிகள் சொன்னவுடன் இலைகளுக்கு முன் உட்கார்ந்து சாப்பிடுமாம். இறுதியில் சுவாமிகள் நாய்களுக்கு முன்னால் நமஸ்கரித்து எழுந்து, தமது இருப்பிடங்களுக்கு போகச் சொல்வாராம். அவையும் வந்த மாதிரியே எழுந்து போய்விடும்.
ஒரு கவளம் சோறு
ஓர் அன்பர் தோலில் பரவிய வெண்புள்ளிகளால் வருந்தியிருக்கிறார். எந்த மருத்துவத்திலும் குணமாகவில்லை. அவர் சுவாமிகளை அணுகி தன் மனக்குறையைத் தெரிவித்தார் சுவாமிகள் அவரை அருகில் அழைத்து அவர் காதில் என்னவோ சொல்லி இதன்படி ஒரு மண்டலம் நடந்துவா என்று கூறவும் அன்பர் அவ்வாறே செய்தார். சில நாட்களில் வெண்புள்ளிகள் மறைந்தன. சுவாமிகள் அப்படி என்ன சொன்னார் என்று கேட்டதற்கு ‘தினம்தோறும் நீ சாப்பிடுவதற்கு முன்னால் நாய்க்கு ஒரு கவளம் சோறு போடு’ என்றாராம்.
தழைக்கும் ஜீவகாருண்யம்
கிண்டி ரயில் நிலையம் அருகில் 1927-ல் அவரால் சீரமமைக்கப்பட்ட ஆலயத்தில் காலண்டர் ஒன்றில் சுவாமிகளின் உருவமும் அவரைச் சுற்றிலும் நாய்க்கூட்டம் அவரை நோக்கித் தாவுவது போலவும் படம் உள்ளது. இப்போதும் அங்கு நாய்க்குட்டிகள் பாதுகாக்கப்படுகின்றன. வெளியே அம்மா நாய் தூங்கிக் கொண்டிருந்தது. ஆலய அர்ச்சகர் பாபு, ‘சுவாமிகள் காலத்திலிருந்தே இங்கே நாய்கள் இருக்கின்றன.’ என்று தெரிவித்தார்.
தனிமனிதராக தமிழ்நாட்டின் பல இடங்களிலும் அலைந்து திரிந்து பாழடைந்த கோவில்களைப் புதுப்பித்து குடமுழுக்குப் பணியையும் இடையறாது செய்து வந்திருக்கிறார். கும்பகோணம் நாகேஸ்வர சுவாமி ஆலயத்தின் குடமுழுக்குப் பணியின்போதுதான் இவரை வெளியுலகம் அறிந்தது.
நல்ல உயரம், ஒளிவீசும் கண்கள் கருத்த மேனி, ஆறடி உயரம், அகன்ற நெற்றியில் நிறைய திருநீறு இடுப்பிலும் கழுத்திலுமாக சுற்றிக்கொண்டிருக்கும் தூய வெண்ணிற வேட்டி. இருப்பின் முன்புறம் திருப்பணி காணிக்கைக் காசுகளுக்காக ஒரு பித்தளைச் செம்பு.
கோயில் திருப்பணிக்காக பக்தர்களை அணுகும் போது ‘காசாகக் கொடுங்கள்! கல்லாகக் கொடுங்கள்! சுண்ணாம்பாகக் கொடுங்கள்!’ என்று வேண்டுவாராம்.
இவர் சீரமைப்புப் பணி மேற்கொண்ட ஆலயங்களின் பிரகாரத்தில் அல்லது கோபுரத்தில் சுதையால் ஆன இவரது திருவுருவச் சிலையைக் காணலாம். தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் கோயில் ஆலயப் பிரகாரத்தில் இவரது சிலையும் வாழ்க்கைக் குறிப்பும் காணப்படுகின்றன.
கோவில் திருப்பணிக்காக பணம் பெற்றுக்கொண்டதற்கு துல்லியமாக கணக்கெழுதி வைத்திருந்தார் சுவாமிகள். பண விஷயத்தில் கறாராக இருந்திருக்கிறார். கணக்கு நோட்டின் நடுப்பக்கத்தில் ‘சித்ரபானு வருஷம் மாசி மாதம் 3ம் தேதி ரூ 450 பெற்றுக் கொண்டேன். ஆண்டவர் துணை. மெய் போதும்மே பா.ராமலிங்க சுவாமி என்ற குறிப்பு காண்கிறது.
வள்ளலார் வழி வந்த சீடர் என்றே தம்மை கூறிக்கொண்டார். வள்ளலார் வழியில் ஏழைகளுக்கு கூழ்காய்ச்சி ஊற்ற ‘கூழ்சாலை’ நடத்தியிருக்கிறார்.
கும்பகோணம் அருகில் வலங்கைமானுக்கும் நீடாமங்கலத்துக்கும் இடையில உள்ள பாடகச்சேரி கிராமத்தில் பல ஆண்டுகள் வசித்திருக்கிறார். இதனாலயே இவருக்கு பாடகச்சேரி சுவாமிகள் என்ற பெயர் ஏற்பட்டது. இவரது உற்ற நண்பராக இருந்த ஐகோர்ட் சாமியாருக்கும் இவருக்கும் சேர்த்து திருவொற்றியூரில் இரண்டு ஜீவசமாதிகள் உள்ளன.
மடத்தின் மேல் சிட்டுக்குருவிகளின் கூட்டம் பார்க்க ஆச்சர்யமாக இருந்தது. நகர் பகுதிகளில் ஏறத்தாழ காணாமல் போய்விட்ட சிட்டுக்குருவிகள் இங்கு வசிப்பானேன்?
(காருண்யம் கொள்வோம்) கட்டுரையாளர்,
தொடர்புக்கு : thanjavurkavirayar@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT