Published : 19 Dec 2019 12:56 PM
Last Updated : 19 Dec 2019 12:56 PM
பாழ் என்பது அமங்கலச் சொல்லாய் விளங்கிக் கொள்ளப்படுகிறது. ‘நீ பாழாய்த்தான் போவாய்’, ‘எல்லாவற்றையும் பாழாக்கிவிட்டாய்’, ‘பாழுங் கிணற்றில் தள்ளிவிட்டீர்களே’ என்றெல்லாம் அது வசவில் பயன்படுத்தப்படும் சொல்லாகிவிட்டதே இதற்குக் காரணமாக இருக்க வேண்டும்.
சிவத்தைப் பாழ் என்று சொல்வதும்கூட ஒருவேளை கடிந்துகொள்ளப்படும். செம்பொருளாகிய சிவத்தை, இறையைப் பாழ் என்று சொல்லலாமா என்று ஒருவேளை தடை சொல்லக்கூடும்.
இறையைப் பாழாக்கி வாழ்த்துவது மரபுதான். பரிபாடலில் அப்படித்தான் இறையைப் பாழாக்குகிறார் கடுவன் இளஎயினனார்:
பாழ்என, கால்என, பாகுஎன, ஒன்றுஎன,
இரண்டுஎன, மூன்றுஎன, நான்குஎன, ஐந்துஎன,
ஆறுஎன, ஏழுஎன, எட்டுஎன, தொண்டுஎன,
நால்வகை ஊழிஎண் நவிற்றும் சிறப்பினை
(பரிபாடல், 3:77-80)
பாழில் தொடங்குகின்றன எண்கள்: பாழ் = 0; கால் = 1/4 ; பாகு = 1/2; ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு, ஏழு, எட்டு, தொண்டு (ஒன்பது). முளைவிடாத நிலை பாழ், முளைவிட்ட நிலை கால், விட்ட முளை இன்னதென்று பாகுபடுத்தப்பட்ட நிலை பாகு; பிறகு தோன்றுவது ஒன்று முதல் தொண்டு (ஒன்பது) வரை வகுக்கப்படும் உலகம். ஊழிகள் (யுகங்கள்) நான்கு என்று சொல்லப்படுகின்றன. நால்வகை ஊழிகளிலும் இந்த எண்கள், இறைவா! உன்னையே சிறப்பித்து நிற்கும்.
‘எந்த ஊர் என்றவனே! இருந்த ஊரைச் சொல்லவா? அந்த ஊர் நீயும்கூட அறிந்த ஊர் அல்லவா!’ என்று கண்ணதாசன் எழுதிய திரைப்பாட்டு ஒன்று. அந்தத் திரைப்பாட்டுக்குப் பல்லவி கொடுத்த முதற்பாட்டு இந்தத் தனிப்பாட்டு:
எந்தஊர் என்றீர்! இருந்தஊர் நீர்கேளீர்!
அந்தஊர்ச் செய்தி அறியீரோ-அந்தஊர்
முப்பாழும் பாழாய் முடிவில்ஒரு சூனியமாய்
அப்பாழும் பாழ்என்று அறி.
(தனிப்பாடல் திரட்டு, திருவள்ளுவர் பெயரில் உள்ள தனிப்பாடல்கள், 6)
அறிமுகமில்லாதவனைப் பார்த்து எந்த ஊர் என்கிறீர்கள்; சொல்கிறேன். ஆனால் அது என்ன நீங்கள் அறியாத ஊரா? உலகத்தில் உள்ளவர்கள் எல்லோரும் முளைத்து வந்த ஊர் அந்த ஊர்தானே? நல்லது. அந்த ஊரின் விவரம் சொல்கிறேன்: பாழ்கள் மூன்று; அந்த மூன்று பாழ்களின் முடிவில் ஒரு பாழ்; எண்ணிப் பார்த்தால் பாழுக்கும் அப்பாலாய் நிற்கின்ற அதுவும் ஒன்றுமில்லாப் பாழே. எந்த ஊர் என்றவரே! முப்பாழுக்கும் அப்பால் இருக்கும் பாழூரே நம் ஊர் என்று அறிக.
முப்பாழுக்கு அப்பால் இருக்கும் பாழே இறுதிப் பாழ் என்பது சரி. அதென்ன முப்பாழ்? அவை யாவை? திருமூலர் விளக்குகிறார்:
மாயப்பாழ், சீவன், வியோமப்பாழ் மன்பரன்
சேயமுப் பாழ்எனச் சிவசத்தி யில்சீவன்
ஆய வியாப்தம் எனும்முப்பாழ் ஆம்அந்தத்
தூய சொரூபத்தில் சொல்முடிவு ஆகுமே.
(திருமந்திரம் 2496)
மாயப் பாழ், சீவப் பாழ், வியோமப் பாழ் என்பனவே அந்த முப்பாழ்கள். அந்த முப்பாழையும் தாண்டிய நிலை பாழ் என்னும் சொல்லும் அற்றுப் பாழாய்ப் போன நிலை.
நல்லது. முப்பாழ் என்பவை யாவை என்று கேள்வி வைத்து அவற்றுக்கு மாயப் பாழ், சீவப் பாழ், வியோமப் பாழ் என்று பெயர் சூட்டிக் காட்டிவிட்டால் சரியாய்ப் போயிற்றா? அவை என்ன என்று விளக்க வேண்டாமா? கீழ்க்கண்டவாறு விளக்கலாம்:
உலகத்தில் இருக்கும் நாம் உலகத்தின் உண்மை கண்டு அப்பாலே போதல் மாயப் பாழ்;
உயிராய் இருக்கும் நாம் உயிரின் உண்மை கண்டு அப்பாலே போதல் சீவப் பாழ்;
அருளைத் தேடும் நாம் அருளின் உண்மை கண்டு அப்பாலே போதல் வியோமப் பாழ்.
இந்த முப்பாழையும் நீங்கினால் இன்ன தென்று சொல்ல முடியாத செம்பொருள். ‘வாக்கும் மனமும் இல்லா மனோலயம்.’ அங்கே காண்பவர் இல்லை; காட்சி இல்லை; காணப்படும் பொருளும் இல்லை. அதைப் பாழ் என்று சொல்லாமல் வேறென்ன சொல்ல?
(பாழில் உறைவோம்)
கட்டுரையாளர், தொடர்புக்கு: arumugatamilan@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT