Published : 12 Dec 2019 11:08 AM
Last Updated : 12 Dec 2019 11:08 AM

அகத்தைத் தேடி 12: என்னுள் நிரம்பிய கடவுள்

தஞ்சாவூர்க் கவிராயர்

கடவுளைக் காண குருவின் துணை வேண்டும். ஆனால் குருவையே கடவுளாக வழிபட்டு குருபக்தியின் உச்சத்தைத் தொட்டார் ஒரு சீடர். இவரது பெயர் சசிமகராஜ். அவரது குரு ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர்.

இவருடைய குருபக்தியில் மெய்மறந்த விவேகானந்தர் தாம் சூட்டிக் கொள்ள தேர்ந்தெடுத்த ராமகிருஷ்ணானந்தா என்ற பெயரை இவருக்கே சூட்டி மகிழ்ந்தார். சசி என்று ராமகிருஷ்ண பரமஹம்சரின் தொண்டர் குழாத்தில் அறியப்பட்டவரான சசிமகராஜ், அன்று முதல் சுவாமி ராமகிருஷ்ணானந்தா ஆனார். சென்னை ராமகிருஷ்ண மடத்தை நிறுவியவர் இவரே.

ஆங்கிலத்திலும் சம்ஸ்கிருதத்திலும் புலமைபெற்ற ஆத்மஞானி. அறிவியலிலும் தத்துவ ஞானத்திலும் கரை கண்ட வேதாந்தி. அவர் வாழ்க்கையில் எவ்வித அற்புதங்களும் நிகழ்த்தவில்லை. அவருடைய வாழ்க்கையும் சேவைகளும் மாபெரும் அற்புதமாக நம்முன்னர் விரிந்துள்ளன. எஃப்.பி.ஏ. படிப்பதற்காக கல்கத்தா சென்றாலும் கல்லூரிப் படிப்பை இவர் முடிக்கவில்லை. படிக்கும் போதே தன் நண்பர்கள் சிலருடன் ராமகிருஷ்ண பரமஹம்ஸரை தட்சிணேஸ்வரத்தில் தரிசிப்பதற்காகச் சென்றார். அப்போது பரமஹம்ஸர் அங்குள்ளவர்களிடம் பேசிக் கொண்டிருந்தார்.

ஆத்மஞான போதனை

செங்கற்களும், கூரை ஓடுகளும் அவை சுடப்படுவதற்கு முன்னரே அவற்றின் மீது வணிக முத்திரை பொறிக்கப்படும். சுடப்பட்டபின் அம்முத்திரைகள் அவற்றின் மீது அழியாது நிலைத்திருக்கும். இது போலவே சின்னஞ்சிறு வயதிலேயே சிறுவர்களுக்கு, பெற்றோர் ஆத்ம ஞானத்தை போதிக்க வேண்டும். ஆனால் அவர்களோ படிப்பை முடிக்கும் முன்னரே பிள்ளைகளுக்குத் திருமணம் செய்து வைத்துவிடுகிறார்கள். அந்த இளைஞர்களுக்குக் கடவுளைப் பற்றிய நினைவு எப்படி வரும்? ஒரு இளைஞர் குறுக் கிட்டார்.

“அப்படியானால் கல்யாணம் செய்துகொள்வது தவறு என்கிறீர்களா? அது கடவுள் விருப்பத்துக்கு மாறானதா?”
பரமஹம்ஸர் பக்கத்திலிருந்த சிறுவனிடம் அலமாரியில் ஒரு புத்தகத்தைச் சுட்டிக்காட்டி அதனை எடுத்து வருமாறு கூறினார். அது பைபிள். அதிலிருந்து சில வரிகளை வாசிக்குமாறு கூறினார். சிறுவன் வாசித்தான்.

“தாயின் வயிற்றிலிருந்து அண்ணகர்களாகப் பிறந்தவர்களும் உண்டு. மனிதர்களால் அண்ணகர்களாக ஆக்கப்பட்டோரும் உண்டு. பரலோக ராஜ்ஜியத்தின் நிமித்தம் தங்களை அண்ணகர்ஆக்கிக் கொண்டவர்களும் உண்டு. இதை ஏற்றுக்கொள்ள வல்லவன் ஏற்றுக் கொள்ளக் கடவன்”.
“புனித பால் எழுதிய இந்த வசனத்தை நான் உங்களுக்காகச் சொல்லவில்லை. எனக்கும் சசிக்குமாக சொன்னேன்” என்றார். ராமகிருஷ்ணர். பின்னாளில் சசி துறவு பூணப் போவதை முன்னறிந்து சூசகமாகச் சொன்னார் பரமஹம்ஸர்.

வந்திருந்த இளைஞர்களில் சசியே மூத்தவர். அவரை நோக்கி ராமகிருஷ்ணர் கேட்டார்.
“ கடவுளை ஏதேனும் ரூபத்தில் வழிபடுகிறாயா? அல்லது அரூப வழிபாடு செய்கிறாயா?”
“கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பதே எனக்கு சந்தேகமாக இருக்கிறது. என்னவென்று உங்களுக்கு பதில் சொல்வது?” என்று கேட்டார் சசி.
பரமஹம்ஸர், சசியின் பதில் கேட்டு மகிழ்ச்சி அடைந்தார். ஏனெனில் அந்த பதிலில் இறைவனுக்கான ஒரு இளைஞனின் தேடல் புலப்பட்டது.

பக்தி போய்விடும்

சிறிது காலம் கழிந்தபின் சசி படிப்பைக் கைவிட்டு பரமஹம்ஸரின் சீடராகிவிட்டார். சசியும் நரேந்திரரும் (பின்னாளில் விவேகானந்தர்) பாரசீகத்து சூஃபி ஞானியர், கவிதைகள் ஆகியவற்றை சேர்ந்து படித்து இன்புறுவது வழக்கம். சூஃபி ஞானிகள் பற்றி நன்றாகத் தெரிந்துகொள்ள பாரசீக மொழியைக் கற்க முனைந்தார் சசி. ஒருநாள் படிப்பில் ஆழ்ந்திருந்த அவர் குருநாதர் மூன்றுமுறை அழைத்தும் வரவில்லை. அவர் வந்தபின்னர் பரமஹம்ஸர், “பாரசீக மொழி பயில்வதற்காக உன் கடமைகளைக் கவனிக்க மறந்தால் பக்தி உன்னைவிட்டுப் போய்விடும்” என்றார் பரமஹம்ஸர். உடனே கையிலிருந்த புத்தகங்களை கங்கையில் எறிந்துவிட்டார்.

சாந்தோக்ய உபநிஷத்தில் சீடன் சத்ய காமாவை குரு, தனது மாடுகளை மேய்த்துவரச் சொல்கிறார். அவ்வாறே மாடுமேய்க்கச் சென்று ஞானநிலை கிடைக்கப் பெற்றவர் சத்யகாமா. சசியும் குருநாதருக்கு பணிவிடை செய்வதையே வழிபாடாகக் கொண்டார். 1886-ல் ராமகிருஷ்ண பரமஹம்ஸர் மறைந்தார். மரணப் படுக்கையில் இருந்த குருநாதருக்கு விசிறிக்கொண்டே இருந்தார் சசி. குருநாதர் மறைந்து அவர் உடலுக்கு எரியூட்டிய பின்னரும் பரமஹம்ஸரின் படத்துக்கு விசிறுவதை அவர் நிறுத்த வில்லை.

சென்னை வருகை

சுவாமி ராமகிருஷ்ணானந்தா நீராவிக் கப்பல் மூலமாகச் சென்னைக்கு வந்து சேர்ந்தார். காஞ்சிபுரத்துக்கும் பெரும் புதூருக்கும் சென்று அங்கிருந்த பல வைணவப் பெரியோர்களைச் சந்தித்து உரையாடி ராமானுஜரின் வாழ்க்கை வரலாற்றை வங்க மொழியில் எழுதினார்.
அப்போது தூதுவளை என்ற மூலிகைச்செடி ஆன்ம வளர்ச்சிக்கு துணைபுரியும் என்று தமிழக சித்தர்கள் கூறியிருப்பதை உணர்ந்து அதை மயிலாப்பூருக்கு கொண்டுவந்து ராமகிருஷ்ண மடத்தில் பயிரிட்டு வளர்த்தார்.

பிற்காலத்தில் சுவாமிகள் தங்கியிருந்த மடத்தின் கூடத்தில் கூட்டமும் சந்தடியும் மிகுந்தது. ஒரு மூலையில் அமைதியாக அமர்ந்திருந்த சுவாமிகளை அடியார்கள் நெருங்கி இதைப் பற்றி கூறி வருந்தியபோது அவர் புன்னகைத்தபடி சொன்னார்.
“என்னுள் கடவுள் நிரம்பி இருக்கிறார். யார் வந்தாலும் அவர்களை உணரும் தேவை எனக்கில்லை”.

(தேடல் தொடரும்)
கட்டுரையாளர், தொடர்புக்கு :
thanjavurkavirayar@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x