Published : 12 Dec 2019 08:21 AM
Last Updated : 12 Dec 2019 08:21 AM

உயிர் வளர்க்கும் திருமந்திரம் 104: பாழே முதலாய் எழும்பயிர்

கரு.ஆறுமுகத்தமிழன்

சைவம் சிவத்தை வழிபடுவது. சிவம் என்ற பொதுப்பெயர் இட்டு வழங்கப்படும் ஒன்றைப் பல்வேறு வடிவங்களில், பல்வேறு வழிமுறைகளில், பல்வேறு கொள்கைப் பின்னணிகளில், பல்வேறு மெய்யுணர்வு நிலைகளில் தாம் உகந்த வகையில் வழிபடுவது; சிவத்தோடு கலந்து தோய்வது; சிவமாகவே ஆவது.

சைவத்தைச் சிலர் ஒற்றைப்படுத்த நினைத்தாலும் சைவத்தின் சாரம் பன்மை என்பதைக் கருதுக. சைவத்தின் பிரிவுகளுள் வீரசைவம் ஒன்று. தமிழ்நாட்டில் போற்றப்படுவது சித்தாந்த சைவம் என்றால் கர்நாடகத்தில் போற்றப்படுவது வீரசைவம் என்னும் பற்றுறுதிச் சைவம்.

கொள்ளேன் புரந்தரன் மால்அயன்;
வாழ்வு குடிகெடினும்
நள்ளேன் நினது அடியாரோடு அல்லால்;
நரகம் புகினும்
எள்ளேன்; திருவருளாலே
இருக்கப்பெறின், இறைவா,
உள்ளேன் பிறதெய்வம் உன்னை அல்லாது
எங்கள் உத்தமனே.

(திருவாசகம், திருச்சதகம், 5:2)

இந்திரன், திருமால், பிரம்மன் போன்ற தெய்வங்களை ஏற்க மாட்டேன்; குடியே கெட்டாலும் உன் அடியாரைத் தவிர வேறு யாரோடும் கூடமாட்டேன்; நரகத்துக்கே போனாலும் ‘இறைவா, இவ்வளவு தானா உன் பவிசு?’ என்று உன்னை எள்ளமாட்டேன்; ஒருவேளை இவ்வுலகில் தொடர்ந்து இருக்க நேர்ந்தால், உன்னைத் தவிர வேறு தெய்வத்தை எண்ண மாட்டேன் என்று மணி வாசகர் பாடுவது வீரசைவமாகிய பற்றுறுதிச் சைவம்.

குலம் இல்லை கால்வழிகள் இல்லை

சிவத்தின் மீதான பற்றுறுதியோடு முடிந்து போய்விடுவதல்ல வீரசைவம்; அந்தப் பற்றுறுதியைப் பிறவற்றிலும் படிய வைக்கச் சொல்வது. வீரசைவக் கணக்கில், சிவத்தைப் பற்றிக்கொண்டோர்க்குக் குலங்கள், கால்வழிகள் ஏதுமில்லை; கைக்கு எட்டிய கடவுளைப் பூசாரி வழியாகக் கும்பிடுவதில்லை; உழைப்போரே உயர்ந்தோர்—ஓதுவோர் அல்லர்; மனிதரை வேறுபடுத்தாது ஒத்திருந்து வாழ்வாரே உயிர் வாழ்வார்; மற்றையவர் செத்தாருள் வைக்கப்படும். வீரசைவ மரபின் ‘சிவசரணர்’ (சிவத்துக்கு ஆட்பட்டவர்கள்) என்னும் அடியார்கள் முந்நூறு பேர்; அவர்களில் அறுபது பேர் பெண்கள்; ஒருவர் நெசவாளர்; ஒருவர் சலவையாளர் என்பது, பேசிய கொள்கைகளை வீரசைவர்கள் பின்பற்றவும் செய்தார்கள் என்பதற்கு எடுத்துக்காட்டு.

செவ்வியல் மரபைப் போற்றும் வழக்கம் வீரசைவர்க்கு இல்லை. வேதங்கள் உள்ளிட்டவற்றை அவர்கள் வெளிப்படையாக மறுதலித்தார்கள். மாற்றாகத் தங்களுக்குள் கலந்துரையாடிக்கொண்ட எளிய மொழியிலான ‘வசனங்களை’ (உரைவீச்சுகளை) முன்வைத்தார்கள். இந்த வசனங்களின் தொகுப்புக்குச் ‘சூனிய சம்பாதனே’ என்று பெயர். சூனிய சம்பாதனே என்பது சூனியத்தைச் சம்பாதித்தல்.

பொருள் வழியில் ஈடுபட்டவர்கள் பொருளைச் சம்பாதிப்பார்கள்; அருள் வழியில் ஈடுபட்டவர்கள் எதனைச் சம்பாதிப்பார்கள்? சூனியத்தைத் சம்பாதிப்பார்கள். சூனியம் என்பது என்ன? ஒன்றுமில்லாமை; பாழ் (பூச்சியம்). அருள் வழியில் ஈடுபட்டவர்கள் ‘ஒரு நாமம் ஓர் உருவம் ஒன்றுமில்லாத’ எதையோதானே சம்பாதிக்கிறார்கள்? ‘பூச்சியத்துக்குள்ளே ஒரு ராச்சியத்தை ஆண்டுகொண்டு புரியாமலே இருக்கும்’ எதையோதானே சம்பாதிக்கிறார்கள்? பாழைப் பேசுகிறது திருமந்திரம்:

பாழே முதலாய் எழும்பயிர்; அப்பயிர்
பாழாய் அடங்கினும் பண்டைப்பாழ் பாழ்ஆகா;
வாழாச்சங் காரத்தின் மால்அயன் செய்திஆம்;
பாழ்ஆம் பயிராய் அடங்கும்அப் பாழிலே.

(திருமந்திரம் 429)

உயிர் என்னும் பயிர் எங்கிருந்து எழுந்தது? எங்கிருந்துமில்லை; ஒருவேளை இருந்தாலும் அது நமக்குத் தெரியாது; எனவே இப்படி வைத்துக்கொள்ளலாம்: உயிர் ஒன்றுமில்லாமையிலிருந்து / சூனியத்திலிருந்து / பாழில் இருந்து எழுந்தது. நல்லது.

உயிர் அடங்கும்போது எதிலே போய் அடங்கும்? வேலைக்காக வீட்டிலிருந்து புறப்பட்டு வந்தவர் வேலை முடிந்ததும் மீண்டும் அதே வீட்டுக்குத் திரும்புவதுபோலப் பாழில் இருந்து புறப்பட்ட உயிர் மீண்டும் அதே பழைய பாழுக்குத்தானே திரும்பும்? ஆனால் அது நடக்கவில்லை; இடையிட்டு அயனால் உருவாக்கப்பட்டு திருமாலால் காக்கப்பட்ட புதுப் பாழுக்குப் போய் அங்கே தங்குவதும் உலகத்துக்குத் திரும்புவதுமாய் இருந்தது.

உயிர் தான் புறப்பட்ட இடம் தெரியாமல் இடைவழியில் ஏதோ ஓரிடத்தில் தங்கக் காரணம் அறியாமை. அறியாமை நீங்கினால் புறப்பட்ட இடமாகிய பண்டைப் பாழுக்கே திரும்பி பாழோடு பாழாய் அங்கேயே அடங்கும்.

அது என்ன பண்டைப் பாழ்? அது தான் பெரும்பாழ்; செம்பாழ்; ஒரு நாமம் ஓர் உருவம் ஒன்றுமில்லாச் சிவப்பாழ்.

(சிவன் பால்…)
கட்டுரையாளர், தொடர்புக்கு : arumugatamilan@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x