Published : 28 Nov 2019 11:30 AM
Last Updated : 28 Nov 2019 11:30 AM

அகத்தைத் தேடி 10: ஒளி உடம்பைத் தந்த சாது

எழுத்தாளர் தஞ்சை ப்ரகாஷின் ‘சும்மா’ இலக்கியக் கும்பலின் அரட்டையில் இலக்கியம் மட்டுமின்றி ஆன்மிகமும் இடம்பெறும். உண்மையைத் தேடும் எழுத்தைவிட, உயர்ந்த இலக்கியம் ஏதும் இல்லை என்பார் ப்ரகாஷ்.

“உங்களைப் பார்த்தால் இந்தியாவின் பழங்கால ரிஷிகளின் சாயல் தென்படுகிறது. நீங்கள் தியானம் செய்வது உண்டோ?” என்று கேட்டார் இலங்கையிலிருந்து வந்திருந்த எழுத்தாளர்.

எழுத்தே ஒருவகை தியானம்தானே என்று தாடியை நீவிச் சிரித்தார் ப்ரகாஷ்.

பேச்சின் நடுவே ஒருமுறை கலை விமர்சகர் தேனுகா, கும்பகோணம் கர்ணகொல்லை கீழத்தெருவில் வசிக்கும் சித்தபுருஷர் பற்றி குறிப்பிட்டார். சித்தரின் பெயர் சாது பொன். நடேசன்.

இல்லறத் துறவி

தேனுகா சாதுவைப் பற்றி சொன்ன தகவல்கள் சுவாரஸ்யமானவை. சாது பொன் நடேசனின் குருநாதர் பச்சைப்போர்வை சுவாமிகள். வைத்தீஸ்வரன் கோயில் ரயில் நிலையமே அவருடைய வாசஸ்தலம். சாதுவின் தொழில் பந்தல் போடுவது. அவருக்குக் குடும்பமும் இருந்தது.

சிறு வயதிலேயே கஸ்ரத், சிலம்பு, தண்டால், பஸ்கி என்று செய்து உடம்பு முறுக்கேறி இருக்குமாம். தோளில் அலையாக வெண்சிகை புரளும். பார்ப்பதும் பேசுவதும் கத்திரியின் அசைவை ஒத்திருக்கும். வாயிலிருந்து வெளிப்படும் வாக்கியங்கள் வெட்டுண்டு கீழே விழுவது போலிருக்கும். ‘சாமி சித்து விளையாடுவது உண்டா?’ என்று கேட்டார் பக்கத்திலிருந்த நண்பர்.

சாது தன் சொந்தங்கள் சில பேரை நாயாகவும், காடை, கெளதாரி போன்ற கூண்டுப் பறவைகளாகவும் மாற்றி வைத்திருந்தார் என்ற கதையும் உண்டு. “அவர் சொல்கிற எல்லாமே குருமுகமாக கற்றுக் கொண்டதுதான். வந்துதான் பாருங்களேன்.விரும்பினால் அவரிடம் தீட்சைகூட வாங்கிக் கொள்ளலாம்” என்றார் தேனுகா. நாங்கள் நாலைந்து பேர் சாதுவைத் தேடிக்கொண்டு புறப்பட்டோம்.

எங்களோடு ஒரு மருத்துவக் கல்லூரி மாணவரும் வந்தார். வழியெல்லாம் அவர் எங்களை கிண்டல் செய்துகொண்டு வந்தார். அவருக்கு சாமியார்கள் என்றால் பிடிக்காது. நாங்கள் பூ, வெற்றிலைப் பாக்கு, இனிப்பு, பழம், பெப்பர்மி்ண்ட் மிட்டாய்ப் பொட்டலம் எல்லாம் வாங்கிக்கொண்டு ஆசானைத் தேடிப் போனோம். குறுகலான சந்து. கூரை வீடுகள். சந்தின் முடிவில் ஒரு குடிசை. குனிந்துதான் உள்ளே நுழையவேண்டும்.

கயிற்றுக் கட்டிலில் சாது உட்கார்ந்திருந்தார். நரைத்த வெண்சிகை தோளில் புரண்டது. சிறுகக் கட்டிய வேட்டி, மேல் துண்டு கூட இல்லை. கரணை கரணையான உடம்பு. முகம் செதுக்கி வைத்த மாதிரி இருந்தது. வாங்க என்று வரவேற்றார். வாங்கி வந்தவற்றை அவர்முன் வைத்து வணங்கினோம். அவர் உட்கார்ந்திருந்த கட்டிலைச் சுற்றி என்னென்னவோ சீசாக்கள். எங்கு பார்த்தாலும் விசித்திரமான மருந்து நெடி.

சாதுவின் கண்கள் ஈட்டி மாதிரி எங்கள் ஒவ்வொருவர் மீதும் பாய்ந்து திரும்பின. குரலில் என்ன ஒரு காத்திரம். நாங்கள் எங்களை சுய அறிமுகம் செய்து கொள்ள முனைந்தோம். “வேண்டாம் உங்களைத் தெரியுமே!” என்ற பதில் கேட்டு அதிர்ந்தோம்.

“நான் கடவுளைப் பிடிச்சே தீரணும்னு அலைஞ்சவன். கஸ்ரத், சிலம்பு என்று பயிற்சிகளால் முரடனாகி கடவுளை பிடிச்சுரலாம்னு அஞ்சு வருஷம் அலைந்தேன். என் குரு பச்சைப் போர்வை சுவாமிகள் என்னைப் பார்த்துவிட்டு, ‘என்னாச்சு, உனக்கு’ என்று கேட்டார். ‘கடவுளைப் பிடிக்கப் போறேன்’ என்று முண்டா தட்டிக் காட்டினேன். ‘அட பைத்தியக்காரா அவர்தான் உன்னை ஏற்கெனவே பிடிச்சுட்டாரே. இப்படி கடவுள் கடவுள்னு அலைஞ்சால் என்ன அர்த்தம். அவர் உன்னைப் பிடிச்சுட்டார்னு அர்த்தம்.’ என்றார்.

“யாரோ பிடரியில் அடிச்ச மாதிரி இருந்தது. பச்சைப் போர்வையிடம் தீட்சை வாங்கிக் கொண்டேன். அதைத்தான் உங்களுக்குக் கொடுக்கப்போறேன்.

தீட்சை வாங்கிக்கிறது என்றால் சாமியாராப் போயிடறதுன்னு அர்த்தமில்லை. ஒரு தடவை உபதேசம் வாங்கிக்கொண்டு தீட்சை பெற்றுக்கொண்டால் தீராத நோயெல்லாம் தீர்ந்துவிடும். வியாபாரம் செய்யலாம். ஆபீசுக்கு போகலாம். காதல் பண்ணலாம். கல்யாணம் கட்டிக்கிடலாம். இந்தக் காரியங்களை சாதாரண மனுஷனைவிட உன்னதமாக செய்யலாம்.

ஒளி உடம்பு பெற்றுக்கொள்ள வந்துவிட்டீர்கள். உங்களுக்குக் கொடுப்பதற்காகத்தான் என்னை உட்கார்த்தி வைத்திருக்கிறது. ஆனால், யாருக்கு எப்போது கொடுக்க வேண்டுமென்று நான் தீர்மானிப்பது கிடையாது. உங்களுக்கு, இப்போது தீட்சை கிடைக்கவில்லை என்றால் வருத்தப்படாதீர்கள். தேடியது கிடைக்கும் வரை சென்மம் வந்துகிட்டே இருக்கும். இதுதான் உயிரோட யாத்திரைனு சொல்றது.”

ஒவ்வொருவராக அழைத்து காதருகே பிரணவ மந்திரத்தை ஓதினார். ஓம் திடவடிவில் காதுக்குள் ஊற்றப்பட்ட உணர்வு. பிருஷ்டத்திலிருந்து பிடரிவரை தொட்டு நீளமாக முதுகு வழியே மின்னல் போல் ஒரு இழையை உருவி எடுத்தார். “உடம்புபூரா பூசிவிட்டு விட்டேன்.உங்களுக்கெல்லாம் ஒளிஉடம்பு ஏற்பட்டு விட்டது. இனி நான் ரகசியமாகச் சொல்லிக் கொடுக்கப் போவது மாதிரி இருங்கள். ஏழு படிகள். ஏறுபடி இறங்குபடி. தலைக்குமேல் துரியவெளி அதற்குமேல் துரியாதீதம்”

திடீரென்று மழை வந்துவிட்டது. குளிர்காற்று வேறு. பக்கத்தில் அவர் காலடியில் படுத்தபடி அவர் பேசுவதைக் கவனித்துக்கொண்டிருந்த நாயின் உடம்புவெடவெடவென்று நடுங்கிக் கொண்டிருந்தது. சட்டென்று அறைக்குள் சென்று ஒரு உலர்ந்த சாக்குடன் திரும்பிய சாது, நாயின் உடம்புமீது அதைப் போர்த்திவிட்டார்.

(தேடல் தொடரும்....)
தஞ்சாவூர்க் கவிராயர்,
தொடர்புக்கு: thanjavurkavirayar@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x