Published : 31 Oct 2019 12:33 PM
Last Updated : 31 Oct 2019 12:33 PM
‘விருந்தோம்பலில் யாரும் என்னை அடித்துக்கொள்ள முடியாது,’ என்று தன் தேநீர்க்கடை நண்பர்களிடம் சொல்லி பெருமைப்பட்டுக்கொண்டார் முல்லா.
‘ஓ, அப்படியென்றால், மிகவும் நல்லதாய்ப் போயிற்று. எங்கள் அனைவரையும் இன்று இரவு விருந்துக்கு உன் வீட்டுக்கு அழைத்துச்செல்’ என்றார் அந்த கும்பலில் இருந்த பேராசைக்காரர் ஒருவர்.
தேநீர்க்கடையில் இருந்த மொத்த கும்பலையும் அழைத்துக்கொண்டு தன் வீட்டுக்கு நடக்கத்தொடங்கினார் முல்லா.
வீட்டை நெருங்குவதற்கு சற்றுமுன் நின்று, ‘நான் உள்ளே சென்று என் மனைவியிடம் தெரிவித்துவிட்டு வருகிறேன். அதுவரை நீங்கள் இங்கே சற்று காத்திருங்கள்’ என்றார் முல்லா.
அவர் மனைவியிடம் விஷயத்தைச் சொன்னதும், ‘வீட்டில் உணவு எதுவும் இல்லை. அவர்களைத் திருப்பி அனுப்பிவிடுங்கள்,’ என்றார்.‘என்னால் அதை செய்யமுடியாது. விருந்தோம்பலில் சிறந்தவன் என நான் வாங்கி வைத்திருக்கும் பெயர் கெட்டுபோய்விடும்’ என்றார் முல்லா. ‘அப்படியென்றால், நீங்கள் மேலே சென்றுவிடுங்கள்.
நான் நீங்கள் வெளியே சென்றுள்ளீர்கள் என்று அவர்களிடம் சொல்லிவிடுகிறேன்,’ என்றார் முல்லாவின் மனைவி.
ஒருமணிநேரம், வெளியே காத்திருந்த விருந்தினர்கள் பொறுமையிழந்துபோய், வீட்டுக்குமுன் வந்து, ‘எங்களை உள்ளே விடு, முல்லா,’ என்று கத்தினார்கள். முல்லாவின் மனைவி வெளியே வந்தார்.
‘முல்லா வெளியே போயிருக்கிறார்,’ என்றார் அவர். ‘ஆனால், நாங்கள் அவர் வீட்டுக்கு உள்ளே செல்வதைப் பார்த்தோம். ஒருமணிநேரமாக உங்கள் வீட்டுக் கதவின்முன்தான் நின்றுகொண்டிருக்கிறோம். அவர் வெளியே வரவில்லையே’ என்றனர் அவர்கள்.
முல்லாவின் மனைவி அமைதியாக இருந்தார். இதை மேல்மாடி ஜன்னலில் இருந்து பார்த்துகொண்டிருந்த முல்லாவால் பொறுமையாக இருக்க முடியவில்லை. ‘நான் பின்கதவு வழியாகப் போயிருக்க முடியாதா?’ என்று அவர்களைப் பார்த்து கத்தினார் முல்லா.
- யாழினி
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT