Published : 31 Oct 2019 11:36 AM
Last Updated : 31 Oct 2019 11:36 AM
வி. இக்னேஷியஸ்
இயேசு பல்லாயிரக் கணக்கான மக்களுக்கு உணவு கொடுத்த பிறகு அந்த மக்களை எல்லாம் அவர் அனுப்பி விட்டார். தம் சீடர்களையும் அவர் அனுப்பி வைத்தார். “நீங்கள் படகிலே ஏறி அக்கரைக்குச் சென்று பெத்சாயிதா ஊருக்குப் போய்ச் சேருங்கள்” என்று சொல்லிவிட்டு, இயேசு தனியே ஒரு மலைப்பகுதிக்குச் சென்றார். மலைப் பகுதியிலே தனியே தங்கி இருந்து ஜெபிப்பதற்காகச் சென்றார். அவர் அப்படியாகத் தனியே ஜெபிக்கச் சென்ற பிறகு, அந்தச் சீடர்கள் படகு ஏறி பெத்சாயிதா ஊருக்கு கெனசரேத்து கடல் வழியாக போய்க்கொண்டிருந்தார்கள்.
பொழுது சாய்ந்த பிறகு படகு நடுக்கடலில் இருந்தது. இயேசுவோ தனியே கரையில் இருந்தார். அப்போது எதிர்க்காற்று அடித்தது. சீடர்கள் படகை வலிக்கப் பெரிதும் வருந்திக் கஷ்டப்பட்டுக்கொண்டி ருந்தார்கள். அப்பொழுது இயேசு கடல் மீது நடந்து வந்தார். கடல் மீது அவர் நடந்து வருவதைச் சீடர்கள் பார்த்தார்கள்.
இயேசு அந்தப் படகைக் கடந்து செல்ல விரும்பினார். இயேசு கடல்மீது நடப்பதைக் கண்டு அவர் இயேசு தான் என்பதை அந்த சீடர்கள் உணரவில்லை. ஏதோ ஒரு பேய் என்று சொல்லி, சீடர்கள் அலறினார்கள் என்று வேதாகமத்தில் மாற்கு நற்செய்தியில் காண்கிறோம். எல்லோருமே இயேசுவைக் கண்டு அஞ்சி கலங்கினார்கள். அப்படி அவர்கள் கலங்கி அலறும் பொழுது உடனே இயேசு அவர்களிடம் பேசினார்.
நடுக்கடலில் வரும்பொழுது தத்தளித்ததுபோல், எதிர்க் காற்று வீசியதுபோல் நம் வாழ்க்கையிலே நாம் தத்தளிக்க வேண்டியது நேரிடும். சிலநேரங்களில் நம்மை எதிர்த்து காற்று வீசுவதுபோல், பலவிதமான பிரச்சினைகள், சிந்திக்காத நேரத்தில், எதிர்பார்க்காத ஆளிடமிருந்து, எதிர்பார்க்காத திசையில் இருந்து நம்மை எதிர்த்து வரும்!
ஆண்டவர் நம் பக்கமாக நடந்துவருவார்.
கடலில் அவர் நடந்துவருவார். அன்று சீடர்கள் இயேசுதான் என்று கண்டுகொள்ள முடியாமல், ஏதோ பேய் பூதம் என்று சொல்லி அலறி அடித்ததுபோல், நாமும் சிலநேரத்திலே அலறிக் கொண்டிருப்போம். ஆனால் இயேசு, அவர்கள் பயந்து கலங்குகிறார்கள் என்று சொல்லி அவர்களிடம் பேசினார். நம்மிடமும் இயேசு பேசுகிறார். இப்போதும் பேசுகிறார். அவர் படகில் ஏறியவுடனேயே காற்று அடங்கியது! அவர்களுக்கு சந்தோஷம் ஏற்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT