Published : 17 Oct 2019 01:38 PM
Last Updated : 17 Oct 2019 01:38 PM
ஐ. ஜோப் தாமஸ்
நாயன்மார்களில் காலத்தால் முந்திய காரைக்கால் அம்மையார் ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் என்று நம்பப்படுகிறது. சைவ நூலான திருமறையில் அவரது பாடல்கள் இடம்பெற்றுள்ளன. நல்ல வசதியான குடும்பத்தில் பிறந்து புனிதவதி என்ற பெயர் கொண்டு வளர்ந்த இவருக்குச் சிறு வயதிலேயே சிவனிடம் மிக்க ஈடுபாடு ஏற்பட்டது. வனப்புடைய இளம்பெண்ணாக வளர்ந்த பின் இவர் லட்சுமிக்கு ஒப்பிடப்பட்டார்.
காலாகாலத்தில் பரமதத்தன் என்ற வணிகர் ஒருவருக்கு மணம்முடிக்கப்பட்டார். சிறிது காலத்திலேயே தனது மனைவி தெய்விக அருள் பெற்றவர் என்பதை உணர்ந்த பரமதத்தன், அவரைவிட்டு விலகி, மதுரை சென்று அங்கு வேறு ஒரு பெண்ணை மணந்து தனக்குப் பிறந்த மகளுக்குப் புனிதவதி என்று பெயரிட்டு அங்கேயே வாழ்ந்துவந்தார்.
இவர் மதுரையில் வசிப்பதை அறிந்த புனிதவதியின் பெற்றோர், மகளுடன் அந்த நகருக்குச் சென்றனர். இவர்கள் வந்திருப்பதை அறிந்த பரமதத்தன், தன் மனைவி மகளுடன் அவர்களைச் சந்திக்கச் சென்றார். மூவரும் புனிதவதியின் கால்களில் விழுந்து வணங்கினார்கள்.
தான் புனிதவதியை விட்டுப் பிரிந்ததற்கு விளக்கம் கூறிய பரமதத்தன், அவர் தெய்விக அம்சங்கள் உடையவர் என்பதை உணர்ந்ததால் அவருடன் தாம்பத்திய உறவு கொள்ள முடியவில்லை என்றும், அதனாலேயே அவரை விட்டு விலகினேன் என்றும் கூறினார். இதைக் கேட்ட புனிதவதி, தன்னைப் பேயுருக் கொண்டவளாக மாற்ற வேண்டி சிவனிடம் மன்றாடினார். அவரது வேண்டுகோளுக்கேற்ப சிவன் அவரை உருமாற்றம் செய்தார்.
கைலாசப் பயணம்
அதன்பின் புனிதவதி கைலாசத்தை நோக்கிப் பயணம் மேற்கொண்டார். இமயத்தை அடைந்து, பின் அங்கிருந்து சிவனின் இருப்பிடத்தை அடையக் கைகளால் ஏற ஆரம்பித்தார். அவரது பக்தியின் தீவிரத்தைக் கண்ட சிவன் அவரை ‘அம்மையே’ என்று அழைத்து என்ன வேண்டும் என வினவினார்.
அதற்குப் புனிதவதி எனக்குப் பிறவாவரம் வேண்டும். அப்படியே பிறந்துவிட்டாலும், உன் கால்களருகே எப்போதும் இருந்து, நீ ஆடும்போது நான் பாடிக்கொண்டிருக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். அதற்குச் சிவன் திருவாலங்காட்டிற்கு அவர் சென்றால், அங்கே தனது நடனத்தைப் பார்க்கலாம் என்றார். மறுபடியும் அம்மையார் கைகளால் நகர்ந்தே திருவாலங்காடு சென்றார். அங்கே கோயிலில் நுழைந்ததும் கருவறையில் சிவன் நடனமாடுவதைக் கண்டார். இந்தப் புள்ளியில் புனிதவதியின் கதை முழுமையடைகிறது.
சிறிய செப்புருவம்
சிவன் நடனமாடும்போது கூடவே இருக்கும் வரம் அவருக்கு அருளப்பட்டதால் பல நடராஜர் கற்சிற்பங்களில் ஒருபுறம் காரைக்கால் அம்மையார் உருவம் காட்சிப்படுத்தப்பட்டிருப்பதைக் காண முடியும். ஊர்வலப் படிமமாகச் செப்புச் சிலைகள் உருவாக்கப்பட்டபோது அம்மையார் பேயுருவில் இருக்கும் சிறிய செப்புருவம் தனியாகச் செய்யப்பட்டு நடராஜர் செப்புத் திருமேனியுடன் வைக்கப்பட்டது. முந்தைய பிறவியில் அவர் நீலி என்னும் பேயுருக் கொண்ட தெய்வமாக பிறந்திருந்தபோது சிவன் அவளை மணந்திருந்தார். சில கோயில்களில் அம்மையாரின் உருவம் தனி ஊர்வலப் படிமமாகவும் செய்யப்பட்டது.
நாயன்மார்களின் படிமங்கள் ஒவ்வொன்றும் அவரவரைப் புனிதத் தளத்துக்கு உயர்த்திய நிகழ்வைச் சித்தரிக்கும் வண்ணமே உருவாக்கப்பட்டன. நாயன்மார்களைத் தாங்கள் புரிந்துகொண்டபடியே சிற்பிகள் வடிவமைத்தார்கள். எடுத்துக்காட்டாகக் கண்ணப்ப நாயனார் மூன்று வடிவில் காட்டப்பட்டுள்ளார். காரைக்கால் அம்மையார் சிலையைச் செய்வதற்குச் சிற்பிகள் பேயுருவையே தேர்ந்தெடுத்தனர். அம்மையார் தனது உருவத்தை விவரிப்பதைப் படித்தால், அவரை வேறு எந்த உருவில் காட்டுவதும் தெய்வக் குற்றமாகலாம் போலிருக்கிறது.
கொங்கை திரங்கி நரம்பெழுந்து
குண்டுகண் வெண்பற் குழிவயிற்றுப்பங்கி
சிவந்திரு பற்கள் நீண்டு பரடுயர்
நீள்கணைக் காலோர் பெய்பேய்
தங்கி அலறி உலறுகாட்டில்
தாழ்சடை எட்டுத்திசையும் வீசி
அங்கங் குளிர்ந்தனல் ஆடும் எங்கள்
அப்பன் இடந்திரு ஆலங்காடே
மெலிந்த கை கால்கள் துருத்திக் கொண்டிருக்க, தரையில் குத்தவைத்து உட்கார்ந்திருக்கும் அம்மையாரின் உருவம், தீக்கிரையான ஒரு வீடுபோல் இருக்கிறது. அவரது தொய்வுற்ற தோள்கள், எலும்பே உருவான உடல் ஒரு இறுக்கத்தை உருவாக்குகின்றன. நெரித்த புருவமும் புடைத்துக் கொண்டிருக்கும் விலா எலும்புகளும் உடலின் வறட்சியைக் கூட்டிக் காண்பிக்கின்றன.
லட்சுமி போன்று எழிலார்ந்த அழகுடன் இருந்த உருவம் இன்று உருக்குலைந்து குழி விழுந்த கண்கள், உலர்ந்த உதடுகளுடன் காய்ந்து போன மரம் போலிருக்கிறது. படிமம் வைக்கப்பட்டிருக்கும் சதுர பீடமும் அலங்காரமற்று இருக்கிறது. தன்னைப் பற்றி அம்மையார் பதிவு செய்திருந்த விவரிப்பைச் சிற்பி வெற்றிகரமாக ஒரு உருவாகப் படைத்துவிட்டார் என்றே சொல்ல வேண்டும்.
சோழர் காலச் செப்புப் படிமங்கள் ஐ. ஜோப் தாமஸ் |
(‘சோழர் காலச் செப்புப் படிமங்கள்’ நூலிலிருக்கும் கட்டுரைகளில் ஒன்று. மொழிபெயர்ப்பு:
சு. தியடோர் பாஸ்கரன்)
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT