Published : 17 Oct 2019 01:03 PM
Last Updated : 17 Oct 2019 01:03 PM
யுகன்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் கட்டைக்கூத்து, தெருக்கூத்து என நாட்டார் கலைகள் எங்கு நடந்தாலும் அதில் நிச்சயம் முகவீணைக் கலைஞர் சொ.சந்திரனின் இசை காற்றில் கலந்திருக்கும். காஞ்சிபுரத்தை அடுத்துள்ள அப்துல்லாபுரம் கிராமத்தைச் சேர்ந்த இவருக்கு முகவீணை வாசிப்பதில் 42 ஆண்டுகால அனுபவம் இருக்கிறது.
சந்திரனின் தந்தை பிரபல முகவீணைக் கலைஞர் சொக்கன். அவரிடம் இசை பயின்ற சந்திரன், காஞ்சிபுரத்தை அடுத்துள்ள புஞ்சை அரசந்தங்கல் கட்டைக்கூத்து குருகுலத்தில் முகவீணை ஆசிரியராகப் பணியாற்றி ஆண், பெண் இரு பாலருக்கும் பயிற்சியளித்து எண்ணற்ற முகவீணைக் கலைஞர்களை உருவாக்கியிருக்கிறார்.
குவைத், ஜெர்மனி, ஹாலந்து, பெல்ஜியம், சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளிலும், கேரளம், கர்நாடகம், ஆந்திரம், அசாம், மணிப்பூர், டெல்லி, ராஜஸ்தான், மும்பை, கொல்கத்தா போன்ற அண்டை மாநிலங்களில் நடந்த நிகழ்ச்சிகளிலும் முகவீணை வாசித்திருக்கும் கலைஞர் சந்திரன்.
கட்டைக்கூத்து குருகுல இயக்குநர்கள் ராஜகோபால், ஹன்னா ராஜகோபால் இணையரால் சிறந்த முகவீணைக் கலைஞராக பாராட்டப்பட்டு அவர்களிடமிருந்து பரிசுகளைப் பெற்றிருக்கும் சந்திரன், 1996-ம் ஆண்டு முதல் பேராசிரியர் இன்குலாப் எழுதி மங்கை அவர்களால் நெறியாள்கை செய்யப்படும் `ஔவை’ நாடகத்துக்கு முகவீணை இசைத்து வருபவர்.
“தங்களின் இசைப் பயணத்தில் மறக்கமுடியாத நிகழ்வாக எதை நினைக்கிறீர்கள்?” என்று அவரிடம் கேட்டோம். “கடந்த 2005ம் ஆண்டு காஞ்சிபுரம் அண்ணா அரங்கில், காஞ்சிபுரம் மாட்டம் கலைப் பண்பாட்டு மையமும், இயல், இசை நாடக மன்றம், தென்னக கலைப் பண்பாட்டு மையமும் இணைந்து கட்டைக்கூத்து குருகுல மாணவர்களால் நிகழ்த்தப்பட்ட `வெறியாட்டம்’ எனும் நாடகத்தில் முகவீணை வாசித்தேன்.
அந்த நிகழ்சியில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற வயலின் இசைக் கலைஞர் குன்னக்குடி வைத்தியநாதன், என்னை மனதாரப் பாராட்டினார். அதை என் வாழ்க்கையில் கிடைத்த பெரிய பாக்கியமாகக் கருதுகிறேன் என்றார். தற்போது தமிழ்நாடு, புதுச்சேரியில் நடக்கும் பல கலை நிகழ்சிகளிலும் இன்றைக்கும் ஓர் இளைஞரின் உற்சாகத்துடன் பங்கேற்கும் இவருக்கு வயது 65.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT