Published : 17 Oct 2019 12:31 PM
Last Updated : 17 Oct 2019 12:31 PM
தஞ்சாவூர்க் கவிராயர்
வீரசேகர ஞானதேசிகத் தென்கொண்டார் என்பவர், ஒரு சாமானியர். மன்னார்குடியில் நிலக்கிழாராக செளகரியமாக வாழ்ந்துவந்தார்.
அவரது ஐம்பது வயதில் மனதில் ஏதோ ஒரு மருட்சி; திகைப்பு. அவ்வளவுதான். அகத்தைத் தேடி அகத்தை விட்டுப் புறப்பட்டுவிட்டார். அப்போது அவரைத் தடுத்தாட் கொண்டது ஸ்ரீரெட்டியபட்டி சுவாமிகளின் மார்க்கம். அவரை நான் சந்தித்தபோது அவர் 90 வயதைக் கடந்திருந்தார். மார்க்கச் சட்டத்தின்படி காலை 4 மணிக்கே எழுந்து பச்சைத் தண்ணீரில் தலைமுழுகி பழையது சாப்பிடுவார்.
ரெட்டியபட்டி சுவாமிகளின் பாடல்களை எங்கள் வீட்டு திண்ணையில் உட்கார்ந்து கணீரென்ற குரலில் பாடுவார். தாத்தா உங்களுக்கு வயசு என்ன என்று ஒரு முறை கேட்டபோது 40 என்றார். 50 வயதில்தான் அவருக்கு ரெட்டியபட்டி சுவாமிகளின் மார்க்கத்தில் ஈடுபாடு உண்டாயிற்றாம். ‘ஆகவே நான் உண்மையில் பிறந்தது அந்த வயதில்தான்’ என்பார்.
அவரை நாங்கள் பழையது தாத்தா என்போம். என்ன சாப்பிடுகிறீர்கள் என்று எப்போது கேட்டாலும் பழையது என்பார். பழைய சாதத்தைத்தான் பழையது என்று சொல்வதாக நினைத்துக்கொண்டு என் மனைவி ஒரு பாத்திரத்தில் பழையது கொண்டுவந்து வைத்தாள். பழையது தாத்தா இடி இடி என்று சிரித்தார். அம்மா வீட்டில் தேவாரம், திருவாசகம் பழைய புத்தகங்கள் இருந்தால் கொண்டுவந்து வையுங்கள். அதுதான் பழையது என்றார்
“வந்ததை ஒப்புக்கொள்வாய் மனமே
வந்ததை ஒப்புக்கொள்வாய்!
வந்ததெல்லாம் சிவன் தந்தது-என்றே
வந்ததை ஒப்புக்கொள்வாய்!”
ரெட்டியபட்டி சுவாமிகளின் அருட்பாடலை ராகத்துடன் பாடுவார். புத்தகம் கொடுத்தால் தலையில் வைத்துக்கொள்வார். எழுந்து நின்று காவடிபோல் ஒரு ஆட்டம். பிறகுதான் படிப்பார்.
குடும்பத்தாருடன் பிணக்கு
ஸ்ரீரெட்டியபட்டி சுவாமிகள் ஒரு ஜீவன் முக்தர். அருப்புக் கோட்டைக்கு அருகில் உள்ள ரெட்டியப்பட்டியில் பிறந்தார். படிப்பு, திண்ணைப் பள்ளிக் கூடத்தோடு சரி. சிறு வயதிலேயே சிலம்பம் முதலியன கற்று உடம்பை வளர்த்தபோது உயிர் வளர்க்கும் நெருப்பு உள்ளத்திலே பற்றியது. தமது ஊரிலிருந்த ஏழை மக்கள் அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான பொருட்களை அதிக விலை கொடுத்து வாங்குவதைக் கண்டு வருந்தி தூத்துக்குடிக்கு வண்டி கட்டிச் சென்று சரக்குகள் வாங்கி வந்து கொள்முதல் விலைக்கே ஏழைகளுக்கு கொடுத்து உதவினார். இதனால் குடும்பத்தாருடன் பிணக்கு உண்டாயிற்று.
வீட்டிலே இருந்து வெளியேறி மதுரை சென்று அங்கே ஒரு முகமதியர் கடையில் கணக்குப் பிள்ளையாக அமர்ந்தார். பின்னர் வியாபார நிமித்தம் பம்பாய் சென்ற போது அங்கு உள்ள கிறிஸ்தவ பாதிரியார்களிடமும், அரசாங்க அலுவலர்களுடனும் பழகி கிறிஸ்தவ சமய உண்மைகளை உணர்ந்தார். இவர் பணிபுரிந்த முகமதியர் கடையின் மூலம் இஸ்லாம் மதத்தின் கொள்கைகள், குரானில் உள்ள உயர்ந்த கருத்துக்கள் ஆகியவற்றையும் கண்டு அனைத்தும் ஒரு பேருண்மையை விளக்கும் அற்புதத்தைக் கண்டார். ஊரெல்லாம் சுற்றியபின் மதுரை முகமதியர் கடையிலே கணக்கராக மறுபடி அமர்ந்தபோது நிட்டை கூடியது.
12 ஆண்டுகள் தவம்
ஒரு நாள் வழக்கம்போல் கடையில் நிட்டையில் அமர்ந்த சுவாமிகள் சில நாட்கள் எழுந்திருக்கவே இல்லை. பின்னர் நிட்டை கலைந்து எழுந்து குற்றாலம் வந்து செண்பகா தேவி அருவிக்கு அருகில் உள்ள ஒரு குகையில் சென்று நிட்டையில் ஆழ்ந்தார். இது ‘ஒளவையார்
குகை’ என்று பெயரில் ஐந்து அருவியின் மேல் பகுதியில் அமைந்திருக்கிறது. இங்கே 12 ஆண்டுகள் கடும் தவம் புரிந்தார். பிறகு, தான் கண்டறிந்த உண்மைகளை எளிய அருட் சட்டங்களாக இயற்றினார்.
அதிகாலை எழுதல், பச்சைத் தண்ணீரில் முழுகுதல், மரக்கறி உணவு, இறைவனிடம் பிரார்த்தனை செய்து கொள்ளாமை, இறந்தவர்க்கு இரங்காமை, நோய் கண்டால் பச்சைத் தண்ணீரை மருந்தாய்க் கொள்தல் என்பவை அவற்றுள் சில.
பழையது தாத்தா அருட் சட்டங்களை தவறாது பின்பற்றுவார்.
பழையது தாத்தாவை ஒரு முறை சென்னையில் ரங்கநாதன் தெருவில் ரத்னா பேன்ஸ் அதிபர் நடத்தும் ரெட்டியபட்டி சுவாமிகள் திருவிழாவுக்கு அழைத்துச் சென்றேன். இரைச்சலும் சந்தடியும் மிகுந்த ரங்கநாதன் தெருவில் ஒரு அமைதித் தீவு இது.
‘கவலைகளிடமிருந்து எப்படி தப்பிப்பது தாத்தா?’ சில சமயம் கேட்பேன்.
‘கொசு நெருப்பை அண்டுமோ? நெருப்பாய் இரு’ என்பார்.
‘நெருப்பா?’
‘என் குருநாதனை சரணடைவாய்.. அருட்சட்டமே நெருப்பு’.
வீட்டிலிருந்து குழந்தைகள் முதல் பெரியவர் வரை யார் வெளியே சென்றாலும் “வெற்றி என்று சொல்லிவிட்டு போங்கள்” என்று விபூதி தருவார்.
வெற்றி என்று சிரித்துக் கொண்டே சொல்லிவிட்டுப் போவோம்.
திண்ணையில் உட்கார்ந்தபடி தாத்தா ஆனந்தமாகப் பாடுகிறார்.
“வெற்றி பெற்றோமென்று ஊதூது சங்கே!”
(தேடல் தொடரும்)
கட்டுரையாளர்,
தொடர்புக்கு: thanjavurkavirayar@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT