Published : 10 Oct 2019 01:26 PM
Last Updated : 10 Oct 2019 01:26 PM
தாமஸ் பைரம்
குழந்தாய், நீ விரும்பும் அத்தனை புனித நூல்களையும் பற்றிப் பேசிப் பாராட்டிக் கொண்டிருக்கலாம். ஆனால், அனைத்தையும் நீ மறந்தாலொழிய உன்னை நீ கண்டறியவே போவதில்லை. ஏட்டுக்கல்வியின் பயனின்மையைப் புரிந்துகொள்ள, ஒரேயொரு புலப்பாட்டில் அறிவின் ரகசியப் புதிரை அஷ்டாவக்கிரர் அதிசயமான முறையில் அவிழ்த்துவிடுகிறார்.
பிற செய்யுள்களையும் படிக்கிறேன். அ்தன் வார்த்தைகள் எனது ஆச்சரியத்தைத் தூண்டியபடியேதான் உள்ளன. அவை பட்டவர்த்தனமாகப் பேசுகின்றன; அடக்கத்துடனும். மிகச் சிக்கனமாகவும், அதேவேளையில் பெருந்தன்மையுடனும் தெரிகின்றன. நான், கடலுக்கும் வானுக்குமான இடைவெளியின் நுனியில் ஏழு வயதுக் குழந்தையாக நின்றபோது அறியாததன் ரகசியத்தின் இதயத்தைத் தொட்டேன்.
அப்போது வீசிக்கொண்டிருந்த கடற்காற்றின் பெருங்களிப்பு ஒரு இசை அனுபவமாக மீண்டும் அஷ்டாவக்ர கீதை மூலமாக என்னில் கேட்கிறது. எண்ண எழுச்சி, எண்ணம் அடங்குதல் என்பதென்ன? தோன்றும் உலகம், தோன்றாத உலகம் என்பது யாது? அறிவு. தூய அறிவு. தூய்மையான வெளி, வானம், மெய்யறிவின் இதயம். அஷ்டாவக்ரரின் வார்த்தைகள் எல்லாம் சொல்லப்பட்ட பின்னர் தொடங்குகின்றன.
அவரின் வார்த்தைகள் தாளில் மிதக்கின்றன. அவை மறையும் புள்ளியிலேயே இருக்கின்றன. பனியின் முதல் உருக்கம் அவைதான், மலைகளின் மீது, தெள்ளிய நீரோடை மிருதுவான பளபளக்கும் கூழாங்கற்களின் மீதாகப் பாயத் தொடங்குகிறது. குளிர்கால வானத்தின் தெள்ளிய நீலம் திரிசூலத்தின் மீது கைலாசத்தின் மீது அன்னபூரணியின் மீது சுடர்கிறது. எனது சத்குருவான நீம் கரோலி பாபா, அஷ்டாவக்ர கீதையைத் தூய்மையான மறைநூல் என்று குறிப்பிடுகிறார். அதன் அழகெல்லாம் அதன் புலப்பாட்டுத் தன்மையில், அது தரும் பரவசம் மற்றும் மாசற்ற தூய்மையில் உள்ளது.
ஜனக மன்னருக்கும் அஷ்டாவக்கிரருக்கும் நடைபெறும் சம்வாதமாக இது எழுதப்பட்டுள்ளது. ஆனால், இது ஒரு இலக்கிய உத்தியே. இந்த கீதை அஷ்டாவக்கிரரின் குரலை மட்டுமே கொண்டது. பரிவும் சமரசமற்ற தெளிவும் கொண்ட தனிக்குரல் அது. தனது வழியை அறிந்துகொண்ட அதைப் பகிர்வதற்கு மட்டுமே ஆசைப்படும் ஒரு மனிதனாக அஷ்டாவக்கிரர் பேசுகிறார். அவரது கீதமோ அவரது அனுபவத்தின் நடைமுறைப் பதிவு. வர்ணிக்க இயலாத தீவிர உண்மைகளின் ஆவணம் அது.
நாம் எல்லாருமே ஒன்று. அந்த ஒன்றின் சுயம் தூய்மையான அறிவாலானது. இந்தச் சுயம்தான் இந்த மாசற்ற அறிவுதான் கடவுள். மற்றவை எல்லாம் மாயை, சிறிய சுயங்கள், உலகம், பிரபஞ்சம் எல்லாம். ‘நான்’ என்ற எண்ணத்தின் வழியாகவே தனி அடையாளம் என்ற கருத்தினாலேயே மேற்சொன்ன அனைத்தும் தோன்றுகின்றன. அந்தச் சிறிய ‘நான்’ தான் லௌகீக உலகத்தைக் கண்டுபிடிக்கிறது.
அங்கேதான் நமது அறியாமை வாழ்வதற்கான அத்தனை போராட்டங்களையும் நடத்துகிறது. நிஜமான தன் ‘ஒருமை’-யை உணர்ந்து கற்பனையான தனி அடையாளத்துடன் பிணைத்துக் கொண்டு அவசியங்கள், மதிப்பீடுகளுடன் அல்லாடுகிறது. தேர்வுகள், விருப்புகளின் உயிராகப் பழக்கத்தில் கட்டப்பட்டு ஒன்றையொன்று எதிராகப் பாவித்துக் கொண்டு துயருறுகிறது.
நிறைவை எட்டிய உயிர்
ஆனால், நமது உள்ளார்ந்த இயல்போ தூய்மையானதும் தேர்வேயற்ற முற்றறிவும் ஆகும். நாம் ஏற்கெனவே எப்போதைக்குமாக நிறைவையெட்டிய உயிர் ஆகும். அதை உணர்வது மிகவும் எளிது என்கிறார் அஷ்டாவக்கிரர். நீயே அறிவின் பரந்த வெளி, தூய்மையான நிலைத்த இருப்பு, அங்கே பிறப்பும் இல்லை போராட்டமும் இல்லை, ‘நான்’-ம் இல்லை என்கிறார். அப்படியிருக்கும் நிலையில் நாம் சுத்த அறிவுக்குத் திரும்ப வேண்டிய அவசியம் என்ன? தனியாக உணர்வதன்? மாயையை எப்படி உதறப்போகிறோம்?
ஆனந்தமாக இரு. உன்னை நேசி. பிறர் மீது தீர்ப்புகளை அளிக்க வேண்டாம். மன்னி. எப்போதும் எளிமையாக இரு. எந்தப் பாகுபாடும் வேண்டாம். தேர்வின் பழக்கத்தை விடு. மனம் அமிழட்டும். தேர்வதையும் விரும்புவதையும் விடு. உனது சுய அறிவில் நாட்டம்கொள். உடம்பு, புலன்களோடு அடையாளம் காண்பதை விடு. தியானம், சேவை போன்ற பிடிமானங்களையும் விடு. விட்டுவிடும் ஆவலையும் விடு. துறத்தலுக்கான விருப்பத்தையும் விடு. எதையும் வேண்டாமெனத் தள்ளவும் வேண்டாம். எதையும் ஏற்கவும் வேண்டாம். சும்மா இரு. எல்லாவற்றுக்கும் மேலாக சந்தோஷமாக இரு. முடிவில் விஷயங்களின் இயல்பை நீயே அறிந்துகொள்ள முடியும்.
அஷ்டாவக்கிர கீதை - சில துளிகள்
பற்பல நூல்களைப் பன்முறை புகன்றாலுங் (ரமணாச்ரமம் வெளியிட்ட அஷ்டாவக்ர கீதையிலிருந்து எடுக்கப்பட்ட |
( ‘தி ஹார்ட் ஆப் அவேர்னெஸ்’, அஷ்டாவக்ர கீதை மொழிபெயர்ப்பு நூலுக்கு, மொழிபெயர்ப்பாசிரியர் தாமஸ் பைரம் எழுதிய முன்னுரையின்
ஒரு பகுதி இது.)
தமிழில்: ஷங்கர்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT