Published : 10 Oct 2019 12:15 PM
Last Updated : 10 Oct 2019 12:15 PM
கரு.ஆறுமுகத்தமிழன்
ஒட்டுமொத்த உலகமுமே இறைத் திருமேனிதான் என்று பொதுக் குறிப்பாகச் சொல்லப்பட்டாலும் தனிக்குறிப்பாகவும் சில திருமேனிகள் வழிபாட்டு மரபில் முற்படுத்தப்படுகின்றன. போகத் திருமேனி, ஓகத் திருமேனி, வேகத் திருமேனி என்று இவை வகைப்படுத்தப்படுகின்றன.
போகத் திருமேனி என்பது அம்மையப்பராக நிற்கும் இன்பக் கோலம். ஓகத் திருமேனி என்பது தென்முகநம்பியாக (தக்கணமூர்த்தியாக) நிற்கும் தவக் கோலம். வேகத் திருமேனி என்பது காலனைக் காய்ந்தது, காமனைக் காய்ந்தது, தக்கனைக் காய்ந்தது, திரிபுரம் எரித்தது போன்ற சினக் கோலங்கள். (ஆ.ஆனந்தராசன், சைவ சித்தாந்த விளக்கம், ப.91). இறையை இத்தனை வகையாகச் சித்திரித்துக் காட்டுவது ஏன்?
உங்கள் காலடிகளைக் கழுவினேன்
லத்தீனக் கவிஞர் ஓரேசு தனது கவிதைக் கலை (Ars Poetica or the Art of Poetry) என்னும் பாட்டில் சொல்கிறார்: ‘நான் அழ வேண்டும் என்பது உங்கள் விருப்பமானால், நீங்களே முதலில் துயரப்பட்டுக் காட்ட வேண்டும்.’ நாடகத்தில் நடிக்கிறவனுக்குத் துக்கம் வராவிட்டால் பார்க்கிறவனுக்கு எப்படி அழுகை வரும்? சிலுவைப்பாடுபடுவதற்கு முன்னால், கடைசி விருந்தில் ஏசு சீடர்களின் கால்களைக் கழுவித் துடைக்கிறார்.
‘ஆண்டவரே, நீர் இதைச் செய்யலாமா?’ என்றார்கள் சீடர்கள். கிறிஸ்து சொன்னார்: ‘நான் உங்களுக்குச் செய்தது என்ன என்று உங்களுக்குப் புரிந்ததா? நீங்கள் என்னைப் போதகர் என்றும் ஆண்டவர் என்றும் அழைக்கிறீர்கள். நீங்கள் அவ்வாறு கூப்பிடுவது முறையே. நான் போதகர்தான், ஆண்டவர்தான். ஆகவே ஆண்டவரும் போதகருமாகிய நான் உங்கள் காலடிகளைக் கழுவினேன் என்றால், நீங்களும் ஒருவர் மற்றவருடைய காலடிகளைக் கழுவக் கடமைப்பட்டிருக்கிறீர்கள். நான் செய்ததுபோல நீங்களும் செய்யுமாறு நான் உங்களுக்கு முன்மாதிரி காட்டினேன்.’ (திரு விவிலியம், யோவான், 13:12-15).
கடவுள் பல திருமேனிகளில் சித்திரித்துக் காட்டப்படுவதும் இதை நோக்கியதுதான். திக்குத் தெரியாத காட்டில் தேடித் தேடி இளைக்கும் உயிர்களுக்குத் தன்னையே வைத்து முன்மாதிரி காட்டுதல். நோக்கம், உயிர்களைப் போகத்திலும் ஓகத்திலும் வேகத்திலும் பொருத்துதல்; அறிவு உண்டாக்கித் திருத்துதல். போகம் உயிர்களைத் துய்க்கவைத்து நல்லது கெட்டதைப் பிரித்தறியும் பகுத்தறிவைத் தரும்; வேகம் ஆகாதவற்றைக் கண்டித்து ஒடுக்கும் முனைப்பைத் தரும்; ஓகம் ஆகின்றவற்றோடான பொருந்தலைத் தரும்.
கூத்தத் திருமேனியின் வகை
போகம், ஓகம், வேகம் ஆகிய வற்றைச் சித்திரிக்கும் மூவகைத் திருமேனிகளில் கூத்தத் திருமேனி எவ்வகைக்குப் பொருந்தி வரும்? மூவகைக்கும் பொருந்தி வரும். திருமேனிகளைச் சிறப்பித்துச் சொல்லாத திருமூலர் தானே உகந்து விளக்கிச் சொன்ன திருமேனி கூத்தத் திருமேனிதான்.
அங்கி, தமருகம், அக்குமா லை, பாசம்,
அங்குசம், சூலம், கபாலம், உடன்ஞானம்
தங்கு உபயம்தரும் நீல மும்உடன்
மங்கைஓர் பாகமாய் மாநடம் ஆடுமே.
(திருமந்திரம் 2780)
கூத்தத் திருக்கோலம் நான்கு கைகளுடன் சித்திரிக்கப்படுதலும் உண்டு; எட்டுக் கைகளுடன் சித்திரிக்கப்படுதலும் உண்டு. இந்தப் பாட்டில் திருமூலர் கூத்தனை எட்டுக் கைகளோடு சித்திரிக்கிறார்: தீ, உடுக்கை, உருத்திராட்ச மாலை, கட்டுக் கயிறு, அங்குசம், சூலம், கபாலம் ஆகியவற்றுடன் ஞானக் குறியீடாய் நீல மலரைக் கையில் தாங்கிய மங்கையை ஒரு பாகமாக்கித் திருநடம் ஆடுகிறான் கூத்தன்.
இவற்றில் தீ என்பது அழித்தல் தொழிலைக் குறிப்பதோடு, உயிர்களின் வினைப் பயனை, அதாவது பாவ-புண்ணியப் பலன்களைச் சுட்டெரித்தலையும் குறிக்கும்; இது வேகத் திருமேனியின் கூறு. உடுக்கை என்பது படைத்தல் தொழிலைக் குறிப்பதோடு, உயிர்களைப் பீடித்திருக்கும் மாயையைக் கையை விட்டு உதறுதலையும் குறிக்கும்; இது போக, வேகத் திருமேனிகளின் கூறு. உருத்திராக்க மாலை என்பது அருளல் தொழிலைக் குறிப்பதோடு, அறிவுறுத்தலையும் குறிக்கும்; இது ஓகத் திருமேனியின் கூறு.
கட்டுக் கயிறு என்பது அடையாளம் காட்டுதல்; உயிரைக் கட்டிவைக்கும் ஆணவம், கன்மம், மாயை என்னும் பாசங்கள் மூன்றும் இதன் வழி உயிருக்கு அடையாளம் காட்டப்படுகின்றன; இது ஓகத் திருமேனியின் கூறு. அங்குசம் என்பது யானையை அடக்கும் துறட்டி; இதுவும் அடையாளம் காட்டுதலே; உயிராகிய யானை புலன் இன்பத்தில் தோய்ந்து மதம் ஏறித் தடுமாறும்போது அடக்குவதற்கான அடையாளம் அங்குசம்; இது ஓகத் திருமேனியின் கூறு.
மூஇலைச் சூலம் என்பது அறிவு, விருப்பம், செயல் ஆகியவற்றில் உயிர்களை ஈடுபடுத்துவதற்கான அடையாளம்; இது போகத் திருமேனியின் கூறு. கபாலம் என்பது ஆணவத்தைத் தலை தூக்கவிடாமல் அழுத்தி, உயிர் விடுதலை பெறுவதற்கான அடையாளம்; ஓகத் திருமேனியின் கூறு. நீல மலர் என்பது அறியாமை நீங்கி அறிவு படர்வதற்கான அடையாளம்; அதைத் தாங்கியிருக்கும் மங்கை அருளின் பிம்பம்; இது போகத் திருமேனியின் கூறு. உயிர்களைப் போகப்படுத்தவும் வேகப்படுத்தவும் ஓகப்படுத்தவும் முன்வைக்கப்படும் குறியீடே கூத்து. ஆகவே கூத்து உகந்தானைப் பாடுகின்றார் திருமூலர்.
(திருமூலரைத் தொடர்வோம்)
கட்டுரையாளர், தொடர்புக்கு : arumugatamilan@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT