Published : 03 Oct 2019 10:29 AM
Last Updated : 03 Oct 2019 10:29 AM
உஷாதேவி
ராமாயணத்தில் சுகம் தரும் பகுதி சுந்தர காண்டம் என்று கூறுவார்கள். நமக்கு இடைவிடாத துயரங்கள் வரும்போது சுந்தர காண்டம் பாராயணம் செய்வது இந்துக்களிடையே மரபாக உள்ளது. சுந்தர காண்டத்தில் சீதையை அசோக வனத்தில் இராவணன் சிறை வைத்திருக்கும் போது, ராமனின் தூதுவனாகச் சமுத்திரத்தைத் தாண்டி வந்து இலங்கை முழுவதும் தேடி அசோகவனம் வந்து சிம்சுமார மரத்தில் உட்கார்ந்து சீதையிடம் பேசுவதற்காக அனுமன் காத்திருந்தான்.
அப்போது ராவணன் சீதையை நாடி வந்தான். ஆசை வார்த்தைகளைப் பேசுகிறான். சீதை மயங்காத நிலையில், அவரை அச்சுறுத்துகிறான். அசோக வனத்தைக் காவல் காத்த அரக்கிகளும் சீதாபிராட்டியைப் பயமுறுத்துகின்றனர். அந்த அரக்கிகளில் ஒருத்தியான திரிசடை இலங்கையின் ஒரே தர்மவானான வீடணனின் மகள் ஆவார். அவள் சீதைக்கு அனுகூலமாக நேரடியாகப் பேசாமல் அரக்கிகளிடம் தான் கண்ட கனவை உரைக்கிறாள்.
ஒரு குரங்கால் இலங்கை நகரமே எரியும் காட்சியைக் கண்டதாகவும், ராவணனும் இந்திரஜித்தும் சிவப்பு ஆடை உடுத்தி தெற்குத் திசை நோக்கிப் பயணம் போவதைப் பார்த்தாகவும் கூறுகிறாள். சீதை மிகவும் நல்லவள் என்றும், அவளை ஒன்றும் செய்யாதீர்கள் என்றும் அவளுக்கு மீட்சி காத்திருக்கிறது என்றும் சொல்கிறாள். சீதை கலங்காதிருக்கும்படியும், நம்மைச் சுற்றி எது நடந்தாலும் கடவுளிடம் செய்யும் பிரார்த்தனையால் உதவி வருமென்று ஒரு தாய் மகளுக்கு ஆறுதல் அளிப்பதைப் போலச் சொல்கிறாள்.
ராவணனின் அச்சுறுத்தலுக்குப் பயப்பட வேண்டாமென்றும், ஒரு பெண்ணின் சம்மதமில்லாமல் ராவணனால் அவளைத் தொடவே முடியாதென்றும், அவனது தலை சுக்குநூறாக உடைபடுமென்ற சாபத்தையும் சொல்லி ஆற்றுப்படுத்துகிறாள். சீதைக்குத் தோழியாக, தாயாக சத்தியத்தைச் சொல்லி சீதையைக் காப்பாற்றிக் கொடுத்த திரிசடையைப் போல ஆறுதல் அளிக்கும் பக்தி தனக்கு இல்லையே என்று திருக்கோளூர் பெண்பிள்ளை ராமானுஜரிடத்தில் பகிர்கிறாள்.
(ரகசியங்கள் தொடரும்)
கட்டுரையாளர்,
தொடர்புக்கு : uyirullavaraiusha@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT