Published : 19 Sep 2019 12:20 PM
Last Updated : 19 Sep 2019 12:20 PM
ஒரு நாள் மாலை, ஆளரவமற்ற சாலையில் முல்லா, நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது சில குதிரைகளில் ஆட்கள் அவர் எதிரே வந்ததைப் பார்த்தார். அவரது கற்பனை வேலைசெய்யத் தொடங்கியது. அவரை அடிமையாகப் பிடிக்கத்தான் குதிரையில் ஆட்கள் வருகிறார்கள் என்று நினைத்தார்.
வந்த வழியே ஓடிச்சென்று, ஓரத்தில் இருக்கும் சுவரொன்றில் ஏறி, இடுகாட்டில் குதித்தார். அங்கே காலியாக இருந்த குழியில் போய் கால்நீட்டிப் படுத்துக் கொண்டார். முல்லாவின் புதிரான செய்கையைப் பார்த்த குதிரைப் பயணிகள் அவரைப் பார்த்து பரிதாபப்பட்டு பின்தொடர்ந்து சென்றனர். குழியில் படுத்துக் கிடந்த முல்லாவைப் பார்த்து, “நீங்கள் இங்கே வந்து ஏன் படுத்துக் கிடக்கிறீர்கள். எங்களைப் பார்த்து ஏன் ஓடிப்போனீர்கள். ஏதாவது உதவி தேவையா?” என்று கேட்டனர்.
“நீங்கள் ஒரு கேள்வியைக் கேட்க முடிவதாலேயே அதற்கு நான் நேரடியான பதிலை அளித்துவிட முடியாது. எல்லாம் உங்களது பார்வையில் உள்ளது. எப்படியாக நீங்கள் கேட்டாலும் இதுதான் என் பதில். உங்களால் தான் நான் இங்கே இருக்கிறேன். என்னால் தான் நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்.”
பூனை எங்கே?
முல்லா நஸ்ருதீன் தனது நண்பர்களுக்கு விருந்தளிப்பதற்காக இறைச்சி வாங்கி, தன் மனைவியிடம் அளித்தார். சாப்பாடு தயாராகி மேஜைக்கு வந்தபோது இறைச்சியைக் காணவில்லை. முல்லாவின் மனைவி இறைச்சி முழுவதையும் சாப்பிட்டிருந்தார். முல்லா, தன் மனைவியிடம் சாப்பாட்டில் இறைச்சி எங்கே? என்று கேட்டார்.
பூனை சாப்பிட்டுவிட்டதாக முல்லாவின் மனைவி கூறினார். மூன்று பவுண்டு இறைச்சியையுமா? என்றார் நஸ்ருதீன். ‘ஆமாம்’ என்று சாதித்தார் அவர் மனைவி. அப்போது அங்கே தென்பட்ட பூனையைத் தூக்கி எடைபோட்டுப் பார்த்தார். பூனை மூன்று பவுண்டுகள் எடை இருந்தது.
‘இது பூனையின் எடை என்றால், இறைச்சி எங்கே?’ என்று கேட்டார் முல்லா. ‘இது வெறும் இறைச்சியின் எடைதான் என்றால் பூனை எங்கே’ என்று கோபத்துடன் கேட்டார் முல்லா.
- ஷங்கர்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT