Published : 12 Sep 2019 10:49 AM
Last Updated : 12 Sep 2019 10:49 AM

உட்பொருள் அறிவோம் 29: கஜேந்திரனின் மோட்ச அனுபவம்

சிந்துகுமாரன்

திரிகூட மலைக்காடுகளில் வசித்துவந்த ஒரு யானைக் கூட்டத்தின் தலைவன் கஜேந்திரன். ஒரு நாள் வெயிலில் தன் கூட்டத்துடன் அலைந்து களைத்து, தாகத்துடன் தாமரைகள் நிறைந்த பெரியதொரு குளத்துக்கு யானைக்கூட்டம் வந்தது.

தாமரை மலர்களின் மகரந்தத்தின் சுவை நிரம்பிய நீரைத் தாகம் தீரக் குடித்து முடிக்கும் வேளையில் குளத்தில் இருந்த முதலை ஒன்று, கஜேந்திரனின் காலைக் கவ்விக் கொண்டது. கஜேந்திரன் தன் வலிமையனைத்தையும் திரட்டித் தன்னை விடுவித்துக்கொள்ள முயற்சித்தது. முதலையும் விடவில்லை. வெகுநேரம் இந்தப் போராட்டம் நடந்தது. கஜேந்திரனின் வலிமை குறைந்துகொண்டே வந்தது. ஒரு கட்டத்தில் இனிமேல் தன்னால் தாக்குப் பிடிக்க முடியாது என்ற உணர்வு ஏற்பட்டது. முதலை, யானையரசனைத் தண்ணீருக்குள் இழுக்கத் தொடங்கியது. தன் வலிமையின்மேல் இருந்த நம்பிக்கையை முழுவதுமாக இழந்துவிட்ட நிலையில், அனைத்துக்கும் மூலகர்த்தாவான பரம்பொருளே கதி என்று, ‘ஆதிமூலமே’ எனப் பெருங்குரலெடுத்து கஜேந்திரன் கூப்பிட்டது.

கந்தர்வனாய் மாறிய முதலை

நாராயணமூர்த்தி , யானையின் தீனக்குரல் கேட்டுத் தன் கருடவாகனத்தின் மீதேறி விரைந்து வந்தான். தன் சக்கராயுதத்தை வீசி முதலையின் தலையைக் கொய்தெறிந்தான். அடுத்த கணம் முதலை இருந்த இடத்தில் ஒரு கந்தர்வன் கைகூப்பி நின்றிருந்தான்.

யானையாக இருந்த கஜேந்திரனும் அவன் காலைப் பிடித்த முதலையும் சாபத்தின் விளைவாக இந்த நிலையில் இருந்தனர். யானை முற்பிறவியில் இந்திரத்யும்னன் என்னும் அரசன். அகத்திய முனிவரிடம் அசட்டையாக நடந்துகொண்டதன் விளைவாக அவர் சாபத்தால் யானையாகப் பிறவி கொண்டிருந்தான். முதலையாக வந்திருந்தது ஒரு கந்தர்வன். அவனும் தேவலா என்னும் முனிவரின் சாபத்தினாலேயே முதலையாகப் பிறவியெடுத்தான். இருவரும் சாபவிமோசனம் அடைவதற்காகவே இந்த நிகழ்வு நடந்தது.

எப்படிக் கிட்டும் மோட்சம்

நீர்நிலை என்று வந்தாலே அது ஆழ்மனத் தளங்களைத்தான் குறிக்கும். முதலை என்பது மறைந்திருக்கும் ஞானத்தைக் குறிக்கிறது. உள்ளே நாம் அடக்கிவைத்திருக்கும் அச்சம், கோபம் போன்ற எதிர்மறை உணர்ச்சிகளைத் தூண்டி வெளியே கொண்டுவரும் முக்கியமான வேலையை அது செய்கிறது. வெளிப்பார்வைக்கு எதிரியாகத் தோற்றம் கொண்டு உள்ளே இருக்கும் சக்தியையும் உள்ளொளியையும் வெளியே கொண்டுவர உதவும் விதமாக இருப்பது அது. நம் அக இருளில் தவறென்று கருதி நாம் மறைத்து வைத்திருக்கும் நம் ஆகிருதியின் நிழலான பகுதிகளை அறிவுணர்வின் வெளிச்சத்துக்குக் கொண்டு வரும் தோழன் அது. அந்தப் பகுதிகளை நம் சுயத்துடன் சேர்த்துக்கொள்ளும்போதுதான் நாம் நம் முழுமையை அடைய முடியும்.

நல்லது - கெட்டது என்று நாம் செயற்கையாகப் பிரித்து வைத்திருக்கும் உண்மைகளை வெளியே கொண்டுவந்து இரண்டையும் ஒரே விஷயத்தின் இருவேறு துருவங்களெனக் கண்டுகொள்ளும் ஆழ்ந்த பார்வையை இது தூண்டுகிறது. முதலை காலைப் பிடிக்காமல் இருந்தால் எவ்வாறு கஜேந்திரனுக்கு மோட்ச அனுபவம் கிட்டியிருக்கும்?
யானை என்பது மனவலிமை, விழிப்புணர்வு போன்ற தன்மைகளின் குறியீடு.

தேடலின் தொடக்கத்தில் கட்டுக்கடங்காத ஆழ்மனச் சக்திகள், கட்டறுத்துச் செய்யும் அத்துமீறல்கள் போன்றவற்றை யானை குறிக்கிறது. ஆனால் போகப் போக, வளர்ந்துவரும் அறிவுணர்வின் வெளிச்சத்தில் மதம் அடங்கி, சக்தியை தன்னியல்பாக அடக்கி வைத்துக்கொண்டு, உறுதியும் வலிமையும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் மென்மையுடன் நடமாடும் ஞானத்தின் சின்னமாக யானை இருக்கிறது.

சாபமும் சாபவிமோசனமும் புராணங்களில் வழக்கமாக வரும் நிகழ்வுகள். சாபம் என்பது எப்போதுமே பிரக்ஞையின் மேல்நிலையிலிருந்து கீழ்நிலைக்குத் தள்ளப்படுவதாகவே இருக்கிறது. விமோசனம் அடைந்ததும் மீண்டும் சுயநிலையை அடைவது நடக்கிறது. தேவர்கள் மனிதர்களாகப் பிறவியெடுப்பதும், மனிதர்கள் விலங்குகளாகப் பிறப்பதும் தத்தம் நிலையிலிருந்து அவர்கள் கீழே தள்ளப்படுவதைக் காட்டுகிறது.

ஒவ்வொரு கணமும் நாம் ஒவ்வொருவருக்கும் இது நடந்துகொண்டேதான் இருக்கிறது. நாம் புரிதல் இல்லாமல் ஏதோ ஒரு செயலைச் செய்கிறோம். அதன் விளைவாகச் சறுக்கிக் கீழே விழுகிறோம். துயரத்தையும் துன்பத்தையும் அடைகிறோம். மீண்டும் முயற்சியெடுத்துப் படிப்படியாக மேலேறுகிறோம். மேல்நிலைகளுக்குச் செல்வதற்கு உண்மையாக முயற்சி செய்யும்போது ஆழ்மனச் சக்திகள் உதவிக்கு வருகின்றன. மாபெரும் இடரை நாம் எதிர்கொள்ள நேரும்போது வெறும் ஆழ்மனச் சக்திகளின் வலிமை போதாது.

அம்மாதிரியான சந்தர்ப்பங்களில் அனைத்துச் சக்திகளுக்கும் மூலாதாரமாக இருக்கும் ஆதிசக்தியின் குறுக்கீடு அவசியமாகிறது. மனத்தின் நோக்கங்களை முழுமையாக விடுத்துச் சரணடைந்து, ஆதிசக்தியின் ஆதரவுக்காகக் குரல் கொடுக்கும்போது, அந்தப் பேருதவி கிடைக்கும்; அப்போதுதான் எல்லாவற்றுக்கும் ஆதிமூலமான உணர்வுநிலை, நாம் இருக்கும் தளத்துக்கு இறங்கி நுழைந்து தேவையான மாறுதல்களை உண்டாக்கும்.

(ஆதிமூல விசாரணை தொடரும்) கட்டுரையாளர்,
தொடர்புக்கு : sindhukumaran2019@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x