Published : 05 Sep 2019 11:28 AM
Last Updated : 05 Sep 2019 11:28 AM

வல்வினைகள் தீர்க்கும் திருவேங்கடமுடையான்

இ.ஜெகநாதன்

அரியக்குடியில் அமைந்திருக்கும் திருவேங்கடமுடையான் திருத்தலம் வேங்கடாஜலபதியின் பூலோக உறைவிடங்களுள் ஒன்றாகும். இங்கு வழிபடுவது திருப்பதியில் வழிபடுவதற்குச் சமமாக கருதப்படுவதால் தென் திருப்பதி என்று அழைக்கின்றனர்.

இத்திருத்தலம் 450 ஆண்டு பழமையானது. இப்பகுதியைச் சேர்ந்த நாட்டுக்கோட்டை நகரத்தாரான சேவுகன் செட்டியார், திருப்பதி பெருமாள் மீது தீராத பக்தி கொண்டு, ஆண்டுதோறும் திருமலைக்கு பாதயாத்திரையாகச் சென்று காணிக்கை செலுத்தி வந்தார். அப்படி ஒருமுறை பாதயாத்திரைக்குச் சென்றபோது முதுமை காரணமாக திருமலையில் மயங்கி விழுந்தார்.

விழித்து எழுந்த அவருக்கு, திருமாலைக் காண திருப்பதிக்கு இனி வரமுடியாமல் போய்விடுமோவென்ற கவலை தொற்றியது. அப்போது காட்சியளித்த திருமால், ‘பக்தன் இருக்கும் இடத்திலே நான் இருப்பேன்; ஊர் திரும்பும்போது, எந்த இடத்தில் உடைந்த தேங்காயும், குங்குமமும் இருக்கிறதோ அங்கே குடியிருப்பேன்’ எனக் கூறி மறைந்தாராம்.
சேவுகன் செட்டியார், ஊர் சென்றபோது, உடைந்த தேங்காய், குங்குமம் இருந்த இடத்துக்கு மேலே கருடன் வட்டமிட்டு கொண்டிருந்தது. அந்த இடத்திலேயே ஆலயத்தை உருவாக்கினார் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இங்கு மூலவர் சுயம்புவாகக் காட்சி தருகிறார்.

கோபுரங்களில் ராமாயணம் மகாபாரதம்

திருவேங்கடமுடையான் கோயிலுக்கு இரண்டு ராஜகோபுரங்கள் உள்ளன. பெரிய ராஜகோபுரம் ஏழு நிலைகளுடன் 100 அடி உயரம், 30 அடி அகலம் கொண்டது. அடுத்ததாக உள்ள சிறிய ராஜகோபுரம், ரிஷி கோபுரம் என்று அழைக்கப்படுகிறது. ஐந்து நிலைகளுடன் 46 அடி உயரம், 34 அடி அகலம் கொண்டது. இந்தக் கோபுரங்களில் மகாபாரத, ராமாயணக் கதைச் சிற்பங்கள் உள்ளன.

கோயில் மதில் சுவரையொட்டி உட்புறம் 352 அடி நீளம், 195 அகலத்தில் வெளிப்பிரகாரம் உள்ளது. இங்கே மல்லிகை, முல்லை, ரோஜா, அல்லி, செண்பகம் போன்ற பூச்செடிகளும், பவழ மல்லி, பின்னைக்கிளை போன்ற மரங்களும் நிறைந்து காணப்படுகின்றன. உள்பிரகாரம் 192 அடி நீளம், 120 அடி அகலம் கொண்டது. பெரிய ராஜகோபுரத்துக்கும், ரிஷி கோபுரத்துக்கும் இடையே 90 அடி நீளம், 50 அடி அகலம் கொண்ட தசாவதார மண்டபம் உள்ளது.

பன்னிரெண்டு தூண்கள் உள்ளன. ஒவ்வொரு தூண்களிலும் தசாவதாரக் காட்சிகள், கருடன், அனுமார் சுதைச் சிற்பங்களும் உள்ளன. இந்த மண்டபத்தில் இருந்தபடியே ரிஷி கோபுரத்தைத் தரிசிக்கும் வகையில் கண்ணாடிகளைப் பொருத்தியுள்ளனர். இந்த மண்டபத்தில் வடமேற்கு மூலையில் உற்சவ மண்டபம் உள்ளது.
தசாவதார மண்டபத்தைத் தொடர்ந்து ரிஷி கோபுரத்தைக் கடந்து உள்ளே சென்றதும் மகா மண்டபம் உள்ளது. இதில் அழகிய சிற்பங்களுடன் 178 தூண்கள் உள்ளன. இம்மண்டபத்தில் நுழைந்தவுடன் முகப்பில் பலிபீடமும், அதை அடுத்து கொடி மரமும் உள்ளன.

நின்ற கோலத்தில் திருவேங்கடமுடையான்

கொடி மரத்தையடுத்து பெருமாளை நோக்கி வணங்கியவாறு கருடாழ்வார் உள்ளார். அவர் சன்னிதிக்கு வலதுபுறம் தெற்கு நோக்கியவாறு ராமர் சன்னிதி உள்ளது. இதில் ராமர், லட்சுமணர், சீதை, அனுமன் ஆகிய நால்வரும் உள்ளனர். ராமர் சன்னிதிக்கு மேற்கே தேசிகர் சன்னிதி உள்ளது. மகா மண்டபத்தின் தென்கிழக்கு மூலையில் மடப்பள்ளி உள்ளது.

தொடர்ந்து அர்த்த மண்டபமும், கருவறை முன்மண்டபமும் உள்ளன. கருவறையில் நின்ற கோலத்தில் திருவேங்கடமுடையான், ஸ்ரீதேவி, பூதேவியுடன் கிழக்கு நோக்கி காட்சியளிக்கிறார். மூலவர் சன்னிதிக்கு வடகிழக்கு மூலையில் சேனை நாயகர் சன்னிதி உள்ளது. தெற்கே அலர்மேல்மங்கை தாயார் சன்னிதியும், வடக்கே ஆண்டாள் சன்னிதியும் உள்ளன. வடகிழக்கு மூலையில் தெற்கு நோக்கி பள்ளியறையும், மேற்கு நோக்கி யாகசாலையும் உள்ளன.

மூலிகை ஓவியங்களுடன் ஏகாதசி மண்டபம்

வெளிப்பிரகாரத்தில் மகா மண்டபத்தின் வடபுறம் பிரம்மாண்டமான ஏகாதசி மண்டபம், ஓடு வேயப்பட்டு அழகிய மரவேலைப்பாட்டுடன் காணப்படுகிறது. நூறு ஆண்டுகளுக்கு முந்தைய அழகிய மூலிகை ஓவியங்கள் இன்றும் பொலிவு இழக்காமல் உள்ளன. கலைச் செறிவுள்ள தூண்களாக அமைக்கப் பட்டுள்ளன. இதன்மூலம் ஓவியக் கலைக்கும் இக்கோயில் பக்கபலமாக இருந்துள்ளது. ஏகாதசி மண்டபம் அருகிலேயே சொர்க்கவாசல் கதவும் உள்ளது.

ஈசான மூலையில் கருடன்

ஏகாதசி மண்டபத்துக்கு முன்புறம் கோயில் மேல்தளத்தில் ஈசான்ய மூலையில் கருடபகவான் இருப்பதால் மூலைக்கருடன் என்று அழைக்கப்படுகிறார். கோயிலின் இடது பக்கத்தில் திருக்குளத்தைத் தோண்டியபோது அங்கிருந்த ஒரு மரத்தை வெட்டியபோது அங்கேயிருந்த முனீஸ்வரரைச் சாந்தப்படுத்துவதற்காக கருடன் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. மூலைக்கருடனுக்கு மாதந்தோறும் சுவாதி நட்சத்திரத்தில் திருமஞ்சனம் நடைபெறும்.
மூலைக்கருடன் சன்னதிக்கு நேர் எதிர் கருடதீர்த்தம் என்ற திருமஞ்சன புஷ்கரணி உள்ளது. இந்த ஊருணி வற்றாத பொய்கையாகத் திகழ்கிறது. திருமால் திருமஞ்சனத்துக்கு இந்த ஊருணியில் தீர்த்தம் எடுக்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x