Published : 05 Sep 2019 10:10 AM
Last Updated : 05 Sep 2019 10:10 AM
திருநெல்வேலி மாவட்டத்தில் தாமிரபரணி நதிக்கரையில் உள்ள திருக்குருகூரில் வேளாளர் குலத்தில் வந்த காரியார் என்பவருக்கும் உடையநங்கைக்கும் வைகாசி விசாகத்தில் அவதரித்தவரே சடகோபர் என்ற நம்மாழ்வார். பிறந்த போதே பட் என்று சடமாகிய காற்றை உதைத்து தள்ளியதால் ஸ்ரீ சடகோபர் எனப்பட்டார்.
ஏழை, ஏதலன், கீழ்மகன் என்று எண்ணாது இரங்கும் தன்மை உடையவன்; அப்படிப்பட்ட எளிமையுடையவன்; ஜீவாத்மாக்களாகிய நாம் அவனது திருவடிகளைப் பற்றினால் நம் குற்றங்களை மன்னித்து நமக்கு அருள்வான் என்று அவனது தாராளக் குணத்தைக் காட்டி தன்னைச் சிறியன் என்று சொல்வதற்கு ‘அவன் சிறியன்’ என்கிறார் ஆழ்வார்.
குழந்தை பிறந்ததிலிருந்து பால் அருந்தாமல், பேச்சு, அசைவில்லாமல் இருக்கவே திருக்குருகூர் பொலிந்த நின்ற பிரான் சன்னதியில் நம்மாழ்வாரை இட்டு அவரது பெற்றோர்கள் வேண்டிக் கொண்டனர். குழந்தை அருகிலிருந்த புளியமரத்தடியில் சென்று அமர்ந்து கொண்டது. இப்படியாக 16 ஆண்டுகள் பொந்தில் இருந்த நம்மாழ்வார், முதன்முதலாக மதுரகவியாழ்வார் கேட்ட கேள்விக்குப் பதில் கூற வாய்திறந்தார்.
செத்தத்தின் வயிற்றில் சிறியது பிறந்தால்.
எத்தைத் தி்ன்று எங்கே வளரும்.
என கேட்டார் மதுரகவியாழ்வார். உடனேயே அத்தை தின்று அங்கேயே கிடக்கும் என்றார் சடகோபர் என்ற நம்மாழ்வார். உடனே மடை திறந்த வெள்ளம் போல் திருவாய் மொழி, திருவிருத்தம், திருவாசியம், பெரிய திருவந்தாதி பாடினார். பாசுரம் பாட ஆரம்பித்த உடன் 108 திவ்ய தேச எம்பெருமான்களும் வரிசையில் நின்றனர்.
உயர்வு அற உயர்நலம் உடையவன் எவன்? அவன்,
மயர்வு அற மதி நலம் அருளினன்
எவன்? அவன்,
அயர்வு அறும் அமரர்கள் அதிபதி எவன்? அவன்,
துயர் அறு சுடர் – அடி தொழுது எழு என் மனனே.
நம்மாழ்வாரை உயிராகவும், ஏனைய ஆழ்வார்களை உடலாகவும் கொள்வது வைணவ சமய மரபாகும். நம்மாழ்வார் திருமால் திருவடியில் எப்போதும் விளங்குவதாக வைணவ சமயம் கூறும். அதனால் திருமால் திருக்கோயில்களில் அம்பெருமாளைச் சேவிக்கச் செல்வோர் முடிமீது அவர் திருவடியாக வைக்கப்படுவதை “சடகோபன், சடாரி” என வழங்குவர்.
ஆழ்வார் என்றாலே நாம்மாழ்வாராகிய சடகோபரையே குறிக்கும். இவரின் திரு நாமத்தாலே திருக்குருகூர், ஆழ்வார்திருநகரி என வழங்கலாயிற்று. இவரின் தாய் இவருக்கு மகிழம் பூவை சூடி மகிழ்ந்ததால் வகுளாபரணர் எனப்பட்டார். நம்மாழ்வாரைப் போல, நான் இறைவனை இதயத்தில் வைத்து அவன் சிறியன் என்று சொல்லவில்லையே சுவாமி என்கிறார் திருக்கோளூர் பெண்பிள்ளை. அதனால் தான் ஊரைவிட்டுப் போவதால் என்ன நஷ்டம் என்றும் மறுகிக் கேட்கிறாள்.
(ரகசியங்கள் தொடரும்) கட்டுரையாளர், தொடர்புக்கு:
uyirullavaraiusha@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT