Published : 29 Aug 2019 10:34 AM
Last Updated : 29 Aug 2019 10:34 AM
சனியாஸ்னைன் கான்
அமர் இபின் அல்-அஸ், அப்துல்லா இபின் ராபியா ஆகிய இருவரையும் குரைஷ் தலைவர்கள் எத்தியோப்பியாவுக்கு அனுப்பினார்கள். அவர்கள் இருவரும் பயணம் செய்து எத்தியோப்பியாவை வந்தடைந்தனர். அரசர் நெகஸ் மாளிகைக்கு வந்த அவர்கள், அரசரிடம் தங்கள் சார்பாக அமைச்சர்களைப் பேச வைக்கும் நோக்கத்தில், பரிசுகளை அவர்களுக்கு வழங்கினார்கள்.
புதிதாக அவர்கள் நாட்டுக்கு வந்திருக்கும் குழுவினரைப் பற்றி அமைச்சர்களிடம் அவர்கள் இருவரும் தெரிவித்தார்கள். தங்கள் முன்னோர்களின் மதத்தைத் துறந்துவிட்டு அந்தக் குழுவினர் இங்கு வந்திருப்பதாகத் தெரிவித்தார்கள். அவர்கள் தங்கள் முன்னோர்களின் மதத்தையும் பின்பற்ற வில்லை, இந்த நாட்டின் அரசர் நெகஸின் மதமான கிறிஸ்தவத்தையும் பின்பற்றவில்லை.
எத்தியோப்பியர்களுக்குத் தெரியாத ஒரு புதிய மதத்தைப் பின்பற்றுவதாக அமைச்சர்களிடம் தெரிவித்தார்கள். தங்கள் நாட்டுக்கே அந்தக் குழுவினரைத் திரும்ப அழைத்துச் செல்வதற்காகத் தாங்கள் இருவரும் இங்கே அனுப்பப்பட்டிருப்பதாகத் தெரிவித்தனர்.
அரசரிடம் சொல்லப்பட்ட செய்தி
“தயவுகூர்ந்து, அரசரிடம் பரிந்துரைத்து, அந்தக் குழுவினரை எங்களிடம் ஒப்படைக்க வேண்டும்” என்று அவர்கள் இருவரும் அமைச்சர்களிடம் கோரிக்கை வைத்தனர். அமைச்சர்கள் அவர்கள் இருவரின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டனர்.
அமர் இபின் அல்-அஸ், அப்துல்லா இபின் ராபியா இருவரும் அரசரைச் சந்திப்பதற்காக மாளிகைக்கு வந்தார்கள். அவர்கள் இருவரும் அரசரின் முன், வழக்கப்படித் தலைவணங்கினார்கள். அவருக்கு அவர்கள் பரிசுகளை வழங்கினார்கள். பின்னர், மக்காவிலிருந்து சிலபேர் தங்கள் மதத்தை மாற்றிக்கொண்டு, அவருடைய நாட்டுக்கு வந்துவிட்ட செய்தியைத் தெரிவித்தனர். மக்காவுக்கு அவர்களைத் திரும்ப அழைத்துச்செல்வதற்காகத் தங்கள்
தலைவர்கள் அவர்களை அனுப்பியிருப்பதாக அரசரிடம் தெரிவித்தனர்.
அரசரின் அமைச்சர்களும் எத்தியோப்பியாவுக்கு வந்திருக்கும் இஸ்லாமியர்களின் குழுவை ஒப்படைத்துவிடலாம் என்று பரிந்துரை செய்தனர். இஸ்லாமியர்களின் தரப்பு நியாயத்தைக் கேட்காமலேயே அரசர் நெகஸ் தங்களிடம் அவர்களை ஒப்படைக்க வேண்டும் என்று அமர் இபின் அல்-அஸ், அப்துல்லா இபின் ராபியா ஆகிய இருவரும் எதிர்ப்பார்த்தனர்.
ஆனால், இந்தக் கருத்தை அவர்கள் அரசரிடம் தெரிவித்தவுடன் அவர் கடும்கோபமடைந்தார். “அவர்களிடம் பேசாமல் நான் எந்த முடிவும் எடுக்கமாட்டேன்” என்றார். அதற்குப் பிறகு, அரசவைக்கு இஸ்லாமியர்களை அழைத்துவரும்படி உத்தரவிட்டார் அரசர்.
- பயணம் தொடரும்
தமிழில்: என். கௌரி
(நன்றி: ‘பெஸ்ட் லவ்டு புரோஃபெட்
முஹம்மது ஸ்டோரீஸ்’ குட்வர்ட்)
ஓவியம்: குர்மீத்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT