Published : 22 Aug 2019 12:08 PM
Last Updated : 22 Aug 2019 12:08 PM

நிந்தா ஸ்துதிப் பாடல்கள்: நிந்திப்பதும் இறைவனைச் சிந்திப்பதுதான்!

யுகன்

இறைவனின் திருவிளையாடல்கள் எல்லையற்றவை. சிவபெருமான் தன்னுடைய அடியார்களை ஒவ்வொரு முறையில் திருவிளையாடல் புரிந்து ஆட்கொண்டதைப் பார்த்திருப்போம். பக்தர்கள் மட்டுமென்ன லேசுப்பட்டவர்களா? அதிலும் கவிதைகளாலும் பாடல்களாலும் இறைவனுக்குப் பாமாலை போடுபவர்களும் நேரடியாக இறைவனைப் புகழ்வதுடன், மறைமுகமாகக் கேலி பேசுவதைப் போலவும் நையாண்டி செய்வதைப் போலவும் பாடல்களைப் புனைந்து இறைவனின் புகழை வித்தியாசமாகப் பரப்பியிருக்கின்றனர்.

ஒருவரைப் பழிப்பதுபோல் புகழ்வதும்; புகழ்வதுபோல் பழிப்பதும் வஞ்சப் புகழ்ச்சி அணி என்பது தமிழ் வழக்கில் மரபு. நேரடியாக இறைவனைப் போற்றும் பாடல்களுக்கு இணையாக, தமிழ் வழக்கில் ‘தூற்றுமறைத் துதி’ என்றும் பொதுவழக்கில் ‘நிந்தா ஸ்துதி’ என்றும் அழைக்கப்படும் இந்த மரபை அடியொற்றி அருளாளர்களால் எழுதப்பட்ட சில பாடல்களைப் பார்ப்போம்.

‘ஒன்றும் அறியா மூடர்காள் - திருவரங்கர்
திருத்தேர் பவனி வருகின்றார் இன்று
நின்று வடம் பிடிக்க வாருங்கள்
வைகுந்தத்தில் இடம் பிடிக்க வேண்டுமெனில்’

- இறைவனுக்கு செய்யும் தொண்டே மோட்சத்துக்கான வழியாகச் சொல்கிறது இந்தப் பாடல்.

பெருமாளைத் தூக்கிப் போகும் பருந்து!

காளமேகப் புலவர் நிந்தா ஸ்துதிப் பாடல்களைப் பாடுவதில் வல்லவராக இருந்தார். ஒருமுறை அவர் தில்லை கூத்தரசர் திருவீதி உலாவைப் பார்த்துக்கொண்டிருந்தார். கருட வாகனத்தில் வீற்றிருந்த பெருமாளைப் பார்த்து அவர் பாடியதைக் கேட்டால் முதலில் சிரிப்பு வரும். பிறகு பெருமாளின் பெருமை புரியவரும்.
‘பெருமாளும் நல்ல பெருமாள் - அவர்தம்
திருநாளும் நல்ல திருநாள் - பெருமாள்
இருந்திடத்தில் சும்மா இராமையினால் ஐயோ
பருந்துஎடுத்துப் போகிறதே பார்...’
- இதுதான் அந்தப் பாடல். இயல்பாகக் கருட வாகனத்தில் அமர்ந்திருக்கும் பெருமாளை, தன்னுடைய பாட்டில் இருக்கும் இடத்தைவிட்டு வந்ததால், பெருமாளைப் பருந்து எடுத்துக்கொண்டு பறப்பதாகத் தன்னுடைய பாட்டில் கவி காளமேகம் காட்சிப்படுத்தியதில் நையாண்டியும் இருக்கும் திரு உலாவை விவரிக்கும் நயமும் வெளிப்படும்.

எதற்கு இத்தனை மோடி?

தமிழ் இசை மூவர்களில் ஒருவரான மாரிமுத்தாப் பிள்ளை, சிவபெருமான் மீது அளப்பரிய அன்பையும் பக்தியையும் கொண்டவர். சிவபெருமானின் பெருமையை மாரிமுத்தாப் பிள்ளையைப் போல் உண்மைக்குச் சிறிதும் பழுதில்லாமல் எவரும் போற்றியதில்லை.

‘என்ன பிழைப்பு உந்தன் பிழைப்பையா – இதை
எண்ணிப் பார்த்தால் ஆர்க்கும் பழிப்பையா..
அன்னம் கண்டறியாமல் சொரூபம் மாறினீர்
ஆட்டை யெடுத்துத்துணிந் தம்பல மேறினீர்…
கூடைமண் சுமந்துண்ணப் பரிந்தீரே முனிவர்
கொண்ட பெண்களைத் துகில் உரிந்தீரே
ஓடெடுத் திரந்துண்டு திரிந்தீரே பசியால்
ஒருவன் பிள்ளையைக் கழுத்தரிந்தீரே
வேடனாகி விசயன் வில்லால் அடிபட்டீரே
காடே குடியிருப்பாக் கல்லால் அடிபட்டீரே…
பிட்டுக்கு மண் சுமந்தது, பிள்ளைக் கறி கேட்டது போன்ற சிவபெருமானின் திருவிளையாடல்களை நகைச்சுவை ததும்பவும் நயமாகவும் பாடல்களில் சொல்லிச் செல்லும் மாரிமுத்தாப் பிள்ளையின் இந்தப் பாங்கே, காலங்களைக் கடந்து அவரை நினைவுபடுத்துகிறது.
சாதி இல்லாதவன். தாய், தந்தை இல்லாதவன் என்றெல்லாம் சிவபெருமானை ஒரு பாடலில் வர்ணிக்கிறார் மாரிமுத்தாப் பிள்ளை.

‘சாதியும் தாயும் தந்தையும் இல்லார்
தனியார் என்றேனோ – பெண்ணால்
பாதியுடம்பாகிக் கள்ளுஞ் சுமந்திட்ட
புலையர் என்றேனோ – சாதி
பேதமாய்ப் பிள்ளைக்குக் குறவர் வீட்டினில்
பெண்கொண்டீர் என்றேனோ – மறை
ஓதிவணங்கு நடேசரே உம்மை நான்
ஒப்பாரும் இல்லாத தப்பிலி என்றேனோ..
ஏதுக்கித்தனை மோடிதான் உமக்கு
என்றன் மேல் ஐயா…’

சாதி கடந்து எல்லாருக்குமானவனாக இருப்பது. சாதி பேதம் பார்க்காமல் குறவர் வீட்டுப் பெண்ணை மகனுக்கு மணமுடித்தது என்று சிவனின் பெருமையை எல்லாம் பேசிவிட்டு, இப்படியெல்லாம் உன்னைப் பேசுவதுதான் என் மீது உனக்கு இவ்வளவு மோடி (பிணக்கு) இருப்பதற்கான காரணமா என்றும் வினவுகிறார் மாரிமுத்தாப் பிள்ளை.

இந்தக் கவி மனத்தின் மீதா இறைவனுக்குப் பிணக்கு வரும்? தன்னைக் கேலி பேசுவதற்கும் பக்தனுக்கு உரிமை இருக்கிறது என்பதை உணர்த்தத்தானே, தன்னைப் பித்தா என்று பாடிய சுந்தரருக்குத் தான் அடிமை என்று இறையனார் ஒப்புக்கொடுத்தார். அவரைப் பொறுத்தவரை, பக்தன் நிந்திப்பதும் தன்னைப் பற்றிச் சிந்திக்கும் ஒரு வழிதான்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x